மனையின் மனைக் குத்துத் தோஷம்

மனைக்கு எந்தெந்தத் திசைகளிலிருந்து எவையெவற்றினால் தோஷம் ஏற்படுகின்றது என்பதைப் பற்றியும் மனையின் எதிரே உள்ளவற்றினால் எவ்விதமான தோஷம் உண்டாகின்றது என்பதைப் பற்றியும் கூறுவதுதான் ‘மனைக் குத்துத் தோஷம்’. இம்மனைக்குத்துக் தோஷம் பல வகைப்படும். அவை ஒவ்வொன்றைப் பற்றியும் விளக்கமாகக் கீழே கண்டுணர்ந்து கொள்க.

கோயில் குத்து

மனைக்கு நான்கு பக்கங்களிலும் கோயில் இருக்கக்கூடாது. அவ்வாறு இருப்பின் அதைக் ‘கோயில் குத்து’ என்று கூறுவார்கள்.

மனைக்கு வலப்பக்கத்தில் கோயிலிருந்தால் மேற்கூறிய குத்தால் பொருளழி உண்டாகும். சேர்த்து வைத்த பொருளையெல்லாம் இழக்க நேரிடும்.

மனைக்கு இடப்பக்கத்தில் கோயிலிருந்தால், மேற்கூறிய குத்தால் மனம் எப்போது ஒரு நிலையில் நில்லாது சலனப்பட்டுக் கொண்டே இருக்கும். நிம்மதி இல்லாத வாழ்க்கைச் சூழல் அமையும்.

மனைக்கு எதிரில் கோயிலிருந்தால், மேற்கூறிய குத்தால் சோம்பலும் காரிய தாமதமும் ஏற்படும்.

மனைக்கு பின்புறத்தில் கோயிலிருந்தால், மேற்கூறிய குத்தால் பொருளழிவு உண்டாகும். செல்வ வளம் குன்றிபோகும்.

தெருக்குத்து

தெருவின் அமைப்பு மனையை முட்டுவதுபோல இருந்து அதற்கு நேராக வாயிலிருந்தாலோ வீட்டின் முன்பக்கத்தில் அதாவது வாயில் உள்ள பக்கத்தில் தெரு வந்து முட்டும்படி அமைந்தடிருந்தாலோ அதைத் ‘தெருக்குத்து’ என்பது வழ்க்கம். இதைத் தெருக்குத்து தோஷம் உள்ள மனை (அ) வீடு என்றும் கூறலாம்.

தெருக்குத்தானது கிழக்கு, வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு, தென் கிழக்கு ஆகிய திசைகளில் ஏற்பட்டால் அதனால் எவ்விதக் கெடுதலும் உண்டாகாது.

தெருக்குத்தானது மேற்கு, தென்மேற்கு, தெற்கு ஆகிய திசைகளில் ஏற்பட்டால் கெடுபலன்களையே உண்டாக்கும். இக்கெடுபலன் தரும் தெருக்குத்து உள்ள மனையைத் தவிர்ப்பது நன்மை பயக்கும். அதுபோலவே இக்கெடுபலன் தரும் தெருக்குத்து அமைந்துள்ள வீட்டில் வசிப்பதும் நன்மையைத்  தராது. செல்வ வளம் குறைந்து கொண்டே போகும். மனநிம்மதி இல்லாத வாழ்க்கையே இவ்வீட்டில் வசிப்பவர்க்கு ஏற்படும்.

சந்துக் குத்து

பல வழிகள் சேருமிடத்திற்கு எதிரே மனை இருந்தாலோ அல்லது வீட்டின் வாயில் உள்ள திசை இருந்தாலோ அதைச் ‘ சந்துக் குத்து’ என்பதவவழக்கம். இந்தச் சந்துக் குத்து தோஷம் உள்ள மனையில் வீட்டைக் கட்டுதலோ, அப்படி உள்ள வீட்டில் வாசம் செய்தலோ நன்மையைத் தராது. இத்தோஷம் உள்ள மனையையும் வீட்டையும் தவிர்ப்பது நலம். எவ்வளவு பணம் சம்பாதித்தாலும் பற்றாக் குறையாகவே இருக்கும்.

மூலைக் குத்து

தெருவானது முடிந்து திரும்பும்போது அம்மூலையில் உள்ள இடத்திற்கு எதிரே உள்ள மனை (அ) வீடு என்று கூறுவர். ஆகவே இந்த மூலைக்குத்து ஏற்படும் இடங்களிலும் வீட்டைக் கட்டாமல் இருப்பதே உகந்தது. இதைக் ‘கோடிக் குத்து’ என்றும் கூறுவார்கள்.

தூண் குத்து

மனையின் எதிரிலோ அல்லது வீட்டின் எதிரிலோ தூண் இருப்பின் அதைத் ‘தூண் குத்து’ உள்ள மனை என்று கூறுவார்கள். பல தூண்கள் இருந்தாலும் இந்தத் தூண் குத்துத் தோஷம் உண்டாகும். இத்தூண் குத்துத் தோஷம் உள்ள மனையில் வீடு கட்டலாகாது. இத்தூண் குத்துத் தோஷம் உள்ள வீட்டில் வகிக்கலாகாது. இத்தோஷத்தால் வாழ்க்கையில் வளம் குன்றிப்போகும். இதைக் ‘கட்டைக் குத்து’ என்றும் கூறுவார்கள்.

மரக்குத்து

மனையின் எதிரிலோ அல்லது வீட்டின் எதிரிலோ பட்டுப்போன மரங்கள் இருந்தாலோ ஊருக்குப் பொதுவான மரம் இருந்தாலோ, ‘மரக்குத்து’ எனப்படும். முட்களை உடைய மரமிருந்தாலும் மேற்கூறிய மரக்குத்து தோஷம்  உண்டு. மரக்குத்து தோஷம் பெற்ற மனையை வீடு கட்டுவதற்குத்  தேர்ந்தெடுத்தல் கூடாது. இவ்வாறு மரக்குத்து உள்ள வீட்டிலும் வாசம் செய்யக்கூடாது என்பது மனை சாஸ்திர விதி.

எதிர்வீட்டு வாயில் குத்து

மனையில் வீடுகட்டி வாயில் வைக்கும்போது அம்மனைக்கு எதிரில் உள்ள வீட்டின் வாயிலுக்கு நேராக நம் வாயிலை வைக்கக் கூடாது. இவ்வாறு இருந்தால் நம் வீட்டு வாயிலுக்கு நேராக எதிர்வீட்டு வாயில் இருந்து தோஷத்தை ஏற்படுத்தும். இதை ‘எதிர்வீட்டு வாயில் குத்து’ என்பர். வாயில் குத்துத் தோஷ்ச்ம் பெற்ற இரு வீடுகளில் வாசம் செய்பவர்களுக்கும் துன்பமும், மனக்கவலையும், எதிரியால் பயமும் இருந்து கொண்டே இருக்கும். ஆகவே இவ்வாறு வாயில் வைக்காமல் ஏதேனும் ஒரு பக்கத்தில் தள்ளி வைப்பதே உகந்தது.

இடிந்த குட்டிச் சுவர் குத்து

மனையின் எதிரில் இடிந்த நிலையில் குட்டிச் சுவர் இருந்தாலோ, அல்லது வீட்டின் எதிரில் இடிந்த குட்டிச்சுவர் இருந்தாலோ அதை ‘இடிந்த குட்டிச் சுவர் குத்து’ என்று கூறுவார்கள்.இத்தோஷம் உள்ள மனையின் வீட்டைக் கக்காக் கூடாது. அதுபோல இத்தோஷம் பெற்றுள்ள வீட்டில் வாசம் செய்தலாகாது.

வாசம் செய்தால் பொருளழிவும், மனைவி மக்களுக்குக் கெடுதலும் உண்டாகும். வாழ்க்கையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாமலேயே இருக்கும்.

ஆகையினால் இந்தத் தோஷத்தையும் மனதில் கொண்டு மனையைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply