அப்பொழுது நகரத்து மக்கள் அனைவரும் பீதியில் அமிழ்ந்து கிடந்தார்கள். தெருவில் யாரோ ஒரு சந்நியாசி மாதிரி வந்தால் போதும்,உடனே பட்பட்டென்று கதவைச் சாத்திக் கொண்டார்கள்.
சந்நியாசி என்பவர் வந்தனைகுரியவர்கள்தானே! பிறகு ஏன் இப்படி நடந்து கொண்டார்கள்?
ஊரில் எங்கிருந்தோ போலி சந்நியாசி ஒருவன் வந்திருக்கிறான், அவன் அவரவர்களுக்கும் மயக்க மருந்தைக் கொடுத்து, ஏகப்பட்ட பொருள்களை அபகரித்துக் கொண்டு போய் விடுகிறான் என்ற வதந்தி ஊர் முழுவதும் பரவியிருந்தது. அதன் பிறகு கேட்க வேண்டுமா?
அரசருக்கு இந்தச் செய்தி காதி எட்டியது. அவரும் உடனே அநேக ஒற்றர்களை அனுப்பியிருந்தார். அந்தச் சந்நியாசியை எப்படியும் பிடித்து வந்து விடவேண்டும் என்று உத்தரவும் போட்டிருந்தார். அப்படிப் பிடித்துக் கொடுத்தால், அரசரிடமிருந்து நல்ல வெகுமதி பெறலாமே!
அந்தப் போலி சந்நியாசியை எப்படியும் தொலைத்துக் கட்ட வேண்டும் என்று கச்சைக்கட்டிக் கொண்டான் தெனாலிராமன்.
அதற்காக வீடிலேயெ உட்கார்ந்திருந்தால் எப்படி? அந்தப் போலி சந்நியாசியைப் பிடிப்பதற்கென்று இரவும் பகலும் ஊர் சுற்றி வந்தான்.
ஒருவேளை பக்கத்துக் காட்டில் ஒளிந்து கொண்டிருக்கலாம் என்று சந்தேகித்து, ஒருநாள் காட்டிற்குள்ளே சென்று தேடினான். அவன் எதிர்பார்த்ததுபோல் அங்கு ஒரு மரத்தடியில் சந்நியாசி ஒருவன் படுத்துக் கொண்டிருந்தான்.
அவன் உண்மை சந்நியாசியா? அல்லது போலி சந்நியாசியா?
இருந்தாலும் தன் மனத்திலுள்ள சந்தேகத்தை வெளிக்குக் காட்டிக் கொள்ளாமல், அச்சந்நியாசியோடு மிகுந்த பக்தனாகவே பழகினான் தெனாலிராமன்.அச்சந்நியாசி இட்ட சிற்றேவல்களையெல்லாம் செய்து அவனது நம்பிக்கையை பெற்றுக் கொண்டான் தெனாலிராமன்.
அவனிடத்தில் நன்கு பழகிப் பழகி, அவன் போலிச் சந்நியாசிதான் என்று தீர்மானித்துக் கொண்டுவிட்டான் தெனாலிராமன். பிறகு அவனைத் தீர்த்துக்கட்ட வேண்டுமே! அதற்கும் ஒரு வழி செய்தான்.
“ஒரு நாள் இந்த மாளிகையின் செல்வந்தரை நீங்களே நேரி வந்து ஆசிர்வதித்தால் நலமாயிருக்கும்” என்று அப்போலிச் சந்நியாசியை அழைத்துப் போனான்.
அங்கு, வெகு நாட்களாக வெறி பிடித்திருந்த ஒருவனை அறையில் போட்டு பூட்டி வைத்திருந்தார்கள். அந்த அறையைத் திறந்து உள்ளே விட்டான் சந்நியாசியை.
“வா அப்பா! என்னை விட்டு எப்படித் பிரிந்தாய். உன்னை எங்கு எங்கு தேடுவேன். இப்படிச் சந்நியாசி கோலத்தில் வந்து நிற்கிறாயே!” என்று பேசி, அந்த வெறியன் அச்சந்நியாசியின் கழுத்தை இறுகப்பற்றி அவன் தலையை அறைச் சுவரில் நக்குநக்கென்று நாலு நெற்று நெற்றினான். அவ்வளவுதான் அப்போலி சந்நியாசி மண்டை உடைந்து இறந்து போனான்.
தெனாலிராமன் அதையே எதிர்பார்த்தான். அப்படியே நடந்தது. அதனால் அவன் அது பற்றி வியப்போ வருத்தமோ அடையவில்லை.
எப்படியோ, இச்செய்தி அரசருக்கு எட்டியது. உடனே மன்னன் தெனாலிராமனை அழைத்துக் வரச்சொல்லி விசாரித்தார். அரசரிடமிருந்து நல்ல சன்மானம் பெறலாம் என்று எண்ணி, நடந்தவையனைத்தையும் ஒன்று விடாமல் சொல்லி, அப்போலி சந்நியாசி இறந்ததற்கு தானே காரணம் என்ரு ஒப்புக் கொண்டான் தெனாலிராமன்.
அது கேட்ட அரசர் வெகுண்டார், அது எப்படி சட்டத்தை நீயே கையாளலாம்! அர்சசபை இருக்கிறது விசாரிக்க. அது, தீர விசாரித்தல்லவா அவனுக்கு மரண தண்டனை கொடுக்க வேண்டும்!” சொல்லி மிகவும் கடிந்தான்.
ஏதோ மறுத்துப் பேச வாயெடுத்தான் தெனாலிராமன். கோபம் வந்துவிட்டது அரசருக்கு!
உடனே தெனாலிராமனின் தலையை யானையை விட்டு நசுக்கும்படி உத்தரவு இட்டார் மன்னர்.
“ஐயய்யோ! என்று கையைப் பிசைந்து கொண்டான் தெனாலிராமன்.
அதற்குள் அரண்மனைக் கொலையாளிகள் இருவர் வந்து அவனைப் பற்றிக் கொண்டார்கள். நேரே ஊரைத் தாண்டி ஒரு தனி இடத்திற்கு அழைத்துச் சென்றார்கள்.
பெரிய பள்ளம் தோண்டி, அவனைக் கழுத்துவரை அதில் புதைத்து மண்ணைப் போட்டு பள்ளத்தை சமப்படுத்தினார்கள்.
பிறகு அவன் தலையை மிதித்துச் சாகடிக்க யானையைக் கொண்டு வரப்போனார்கள்.
உடல் புதைக்கப்பட்டு வெளியே தலையை மாத்திரம் நீட்டிக் கொண்டிருந்த தெனாலிராமன் இன்னும் சில மணி நேரத்தில் சாகப் போகிறான் அதனால் மகாகாளியைத் தொழுதான்.
அப்பொழுது சற்று தூரத்தில் கூன் வளைந்த ஒருவன் வந்து கொண்டிருந்தான். அவனைப் பார்த்ததும் ஒரு சரியான யோசனஇ உதித்து தெனாலிராமனுக்கு, “ஐயா! பெரியவரே! இங்கு கொஞம் வந்து விட்டுப் போங்களேன்!” என்று மரியாதையாக அழைத்தான்.
‘இது ஏதுடா! பூமியில் முளைத்த மனிதனாயிருக்கிறானே?’ என்று அக்கூனனும் உடனே வந்தான்.
“எவ்வளவு நாளாக உனக்கு கூன் வளைந்திருக்கிறது?” என்று கேட்டான் தெனாலிராமன்.
“அதையேன் கேட்கிறீங்க போங்க! அநேக வருஷமாக இந்நிலையில்தான் இருக்கிறேன். நான் என்ன செய்வது” என்று சொல்லி பெருமூச்சுவிட்டான்.
“உன்னைவிட எனக்கு இரண்டு மடங்கு எனக்கு கூன் தெரியுமா? வெளியில் தெருவில் நடக்கக்கூட எனக்கு கஷ்டமாயிருந்தது” என்று ஆரம்பித்தான் தெனாலிராமன்.
“ஐயோ! பாவமே! என் பிழைப்பும் அப்ப்டித்தான்” என்று தலையிலடித்துக் கொண்டான்.
கடைசியில் ஒரு சந்நியாசியை சந்தித்து, “இதுக்கு ஏதாவது மருந்து கிடையாதா?” என்று கேட்டேன். அவர்தான் இதைச் சொல்லிக் கொடுத்தார்.
“அப்படியா! அதை எனக்கும் சொல்லுங்களேன்! உங்களுக்கு புண்ணியமாகப் போகும்!” என்று கெஞ்சினான் கூனன்.
“சொல்கிறேன்! சொல்கிறேன்!! அதற்குத்தானே உன்னை அழைத்தேன். இதுமாதிரி கழுத்துவரை புதைக்கப்பட்டு நாலே முக்கால் நாழிகை வரை கண்களை மூடிக் கொண்டிருந்தால் சரியாகிவிடுமா” என்றார்.
“இப்பொழுதுதான் கண்களை திறந்தேன். உன்னையும் பார்த்தேன் தயவு செய்து தோண்டிப் பாரேன்” என்றான் தெனாலிராமன்.
அதைக் கேட்ட அவனும் அவசர அவசரமாய் மண்ணைப் பறித்து தெனாலிராமனை வெளியில் எடுத்துவிட்டான்.
என்ன ஆச்சரியம்! தெனாலிராமனுக்கு இருந்த கூன் எல்லாம் சரியாய்ப் போயிருந்தது! நன்றாக நிமிர்ந்தல்லவா நிற்கிறான் அவன்.
‘தெனாலிராமன் முதுகை தடவித் தடவிப் பார்த்தான் கூனன். சந்நியாசி சொன்னதுபோல் சரியாகிவிட்டதே!’ என்று ஆச்சரியப்பட்டான் அவன்.
“இதோ முதுகை நீயே தடவி பார்த்துக்கொண்டாய் அல்லவா! உனக்கு திருப்தி ஏற்பட்டதா? என்றான் தெனாலிராமன்.
“ஐயோ! அப்படியென்றால் தயவு பண்ணி என்னையும் இந்த பள்ளத்திலே புதைத்து வைத்துவிட்டுப் போயேன்” என்று கெஞ்சினான் அவன்.
“அப்படி வா வழிக்கு!” என்று தெனாலிராமன் முணுமுணுத்துக் கொண்டான்.
“என்னையா முணுமுணுக்கிறீக!” என்றான் அவன்.
“ஐய்யய்யோ! எனக்கு நேரமாகிவிட்டதே” என்று முதலில் சற்று பிகு பண்ணினான். பிறகு “சரி, சரி சீக்கிரத்திலே பள்ளத்திலே இறங்கு” அவனை உள்ளே தள்ளி, கழுத்துவரை புதைத்தான் தெனாலிராமன்.
“இதோ பார் கண்களை நன்றாய் இறுக மூடிக்கொள்ள வேண்டும் தெரியுமா? அப்பொழுதுதான் கூன் சீக்கிரத்தில் சரியாகும்.
“வெளியே என்ன இரைச்சல் கேட்டாலும் கண்களை திறக்ககூடாது தெரியுமா! அப்படி திறந்துவிட்டால் போச்சு. அதன் பிறகு உன் கூன் நிமிரவே நிமிராது. இன்னும் அதிகமானாலும் ஆகும்”.என்றான் தெனாலிராமன்.
“அப்படியே செய்கிறேன் ஐயா! உன்னைக் கடவுள் காப்பாற்றட்டும்!” என்று சொல்லி கண்களை இறுக மூடிக் கொண்டான் அவன்.
அதுதான் சமயம் என்று தெனாலிராமன். அந்தக் கொலையாளிகள் யானையுடன் வருவதற்கு எதிர்திசையில் வேகமாகக் கம்பி நீட்டினான்.
அதற்குள் மாலை நேரமாகிவிட்டது. எங்கும் இலேசான இருள் படரவும் தொடங்கியது.
அந்தச் சமயத்தில்தான் அந்தக் கொலையாளிகள் யானையை அழைத்து வந்தார்கள். நேரமாக்கிவிட்டதே! என்று அவசர அவசரமாய் யானையை ஓடச் செய்து அவன் தலையை இடற விட்டார்கள்.
ஒரு நொடியில் அவன் தலையைச் சுக்கு நூறாக்கிவிட்டுத் திரும்பியது யானை.
“ஐயோ பாவம்! தெனாலிராமனுக்கு இந்தக் கதி ஏற்படவேண்டுமா!” என்று துக்கமாகப் பேசிக் கொண்டே அந்தக் கொலையாளிகள் யானையை அழைத்துக் கொண்டு சென்றாரகள்.
அதற்குள் நகரத்துப் பாதுகாப்பு இலாகாவிலிருந்து அரசருக்கு செய்தி வந்தது.
“அந்தப் போலிச் சந்நியாசியை கொன்றது சரிதான். அப்பொழுது அவைக் கொல்லாமல் விட்டிருந்தால் அதனால் நம் நாட்டிற்கு அநேக இழப்புகள் ஏற்பட்டிருக்கும்.
அந்தப் போலிச் சந்நியாசியை நாங்களே தேடிக் கொண்டிருந்தோம்.அதற்குள் தெனாலிராமன் முந்திக் கொண்டான்.
“அதனால் தெனாலிராமனுக்கு பெரிய சன்மானம் கொடுத்தால் கூட தகும்” என்று எழுதியிருந்தார்கள்.
அதப் படித்துப் பார்த்த மன்னர் ‘ஆ! அப்படியா ஐயா! அநியாயமாய் தெனாலிராமனை கொலை செய்ய சொல்லி விட்டேனே! என்று தன் தலை மீது கையை வைத்துக்கொண்டார்.
அக்கொலையாளிகளும் அப்பொழுதுதான் அங்கு வந்து காரியம் முடிந்து விட்டதை தெரிவித்தார்கள்.
அதைக் கேட்டு அங்கிருந்தவர்கள் அனைவரும் பெரும் விசனத்தில் அமிழ்ந்து போனார்கள். ‘தெனாலிராமன் இருந்தால் அரண்மனையே கலகலப்பாக இருக்குமே! எவரையும் எளிதில் சிரிக்கச் செய்து விடுவானே’ என்றேல்லாம் பேசித் துக்கப்பட்டார்கள்.
அந்த நிசப்தமான சூழ்நிலையில் அரசருக்கு ஜெயம் உண்டாகட்டும்’ என்று சொல்லிக்கொண்டே அங்கு வந்து நின்றான் தெனாலிராமன்.
அவனை உயிரோடு கண்டு, யாவரும் ஆச்சரியப்பட்டுப் போனார்கள்.
பிறகு இது எப்படி நடந்தது? யானை உன் தலையை உருட்டி விட்டதாகச் சொன்னார்களே என்று அதி ஆவலாய் விசாரித்தார்கள்.
அதன் பிறகு தெனாலிராமன், அதுவரை நடந்த விஷயத்தை ஆதியோடந்தமாகச் சொல்லி முடித்தான்.
அவ்விவரங்களை கேட்டு அங்கிருந்தவர்கள் கொல்லென்று சிரித்தார்கள்.
ஆனால் அரசரோ ‘அநாவசியமாய் அந்தக் கூனனை கொன்றுவிட்டாயே’ என்று வருத்தப்பட்டார்.
அதன் பிறகு மனதைத் தேற்றி கொண்டு, தெனாலிராமனை மன்னித்தோடல்லாமல், அந்தக் கூனனையிழந்த மனைவிக்கு மாதாமாதம் தவறாமல் உபகாரச் சம்பளம் அனுப்பி வைக்கும்படி உத்தரவிட்டார் அரசர்.