மகா காளி தனக்கு வரம் அளித்ததை தெனாலிராமன் எவருக்குமே தெரியபடுத்தவில்லை. மனதிற்குள்ளேயே வைத்துக் கொண்டு, விஜய நகரத்து அரண்மனைக்குச் செல்லும் அந்த நல்ல நாளை எதிர்பார்த்திருந்தான்.
இருந்தாலும் அவன் அன்றாட நடவடிக்கைகளில் ஒருவித மாற்றத்தைக் கண்டனர் மக்கள்.
அநேக நாட்களுக்குப் பிறகுதான் மகா காளி தரிசனம் தந்ததையும், தன்னை ஆசிவதிதத்தையும் மெல்ல மெல்ல பிறருக்குத் தெரிவிக்க தொடங்கினான்.
நாட்கள் நகர்ந்தன. மாதங்கள் கடந்தன. அன்று முதல் எப்படியும் சீக்கிரத்தில் விஜய நகரத்து அரண்மனைக்குச் சென்று விட வேண்டுமென்று துடியாய் துடித்துக் கொண்டிருந்தான் அவன்.
ஆனால் நினைத்தபடி எதுதான் நடக்கிறது. மகா காளியின் வார்த்தைகள் கூட பொய்த்துப் போகுமா என்று ஏங்கினான் தெனாலிராமன்.
இதற்கிடையில் தெனாலிராமனுக்குத் திருமணமும் நடந்தேறிவிட்டது. அடுத்த ஆண்டிலேயே அவனுக்கு ஓர் ஆண் மகனும் பிறந்து விட்டது!
இந்தப் பையன் பிறந்த அதிருஷ்டத்திலாவது சீக்கிரத்தில் இடம் பெயர மாட்டோமா! என்று ஏங்கினான் அவன். ஆனால் காளி கோயிலுக்குப் போகத் தவறவேயில்லை.
வழக்கப்படி காளியின் சந்நிதிக்குச் சென்று தீபம் ஏற்றி தொழுது வந்தான்.
அந்தச் சமயத்தில் விஜய நகரத்தின் அரண்மனையின் ராஜகுரு, பக்கத்தூர் மங்களகிரிக்கு வந்திருந்தார். அந்தப் பக்கத்தில் அவர் மிகவும் பிரபலமானவர்! அமோக பட்டங்களும் விருதுகளும் பெற்ற படோடோபப் பேர்வழி அவர். எங்கு சென்றாலும் பல்லக்கில்தான் செல்வார். அவர் பல்லக்குமுன், அரண்மனைச் சேவகர்கள் ‘வேதசிரோன்மணி’ இலக்கியத்திலகம், ராஜகுரு வருகிறார்’ என்று ‘பராக்’ சொல்லிக் கொண்டு போவர்கள்.
அது கேட்டு பாதையில் வருவோர் போவோர் எல்லாம் ஓரத்தில் ஒதுங்கி வழிவிடுவார்கள். உடலில் பட்டு பீதாம்பரம் ஜ்வலிக்க கையில் தங்கத் தோடாவுடன் பார்க்க வெகு கம்பீரமாக இருப்பார் அவர்.
மங்களகிரி சுவாமிக்கு தன் வெகு நாள் வேண்டுதலைச் செலுத்த வந்திருந்தார் அவர். அதனால் கோயிலைச் சுற்றி பிரம்மாண்டமான பந்தல் இட்டு பெரிய அளவில் யாகம் நடந்து கொண்டிருந்தது.
சுவாமிக்கு அபிஷேக ஆராதனையோடு, விசேஷ ஊர்வலமும் நடந்து கொண்டிருந்தது.
இதைக் கேள்விப்பட்டதும் தெனாலிராமன் உடனே புறப்பட்டு விட்டான் அங்கே. ராஜகுருவின் பேட்டிக்காக தூது அனுப்பினான். இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லிவிட்டார்கள். எப்படியும் அவரைச் சந்தித்துவிட்டுத்தான் போகவேண்டும் என்று அவ்வூரிலிருந்த ஒரு சத்திரத்தில் தங்கிவிட்டான்.
அங்கு அவன் சும்மாயில்லை. அங்கு தங்க வருபவர்களிடமெல்லாம் உரையாடி, அவர்களைச் சிரிக்க வைத்துக் கொண்டிருந்தான். அது கேட்டு, வேறு சத்திரத்தில் தங்கியிருந்தவர்கள்கூட, அங்கு வரத் தொடங்கினார்கள்.
இதனால் ராஜகுருவை பேட்டி காண வருபவர்கள் கூட்டம் கூட நாளுக்கு நாள் குறைந்து வந்தது. விசாரித்தார் ராஜகுரு. அனைவரும் தெனாலிராமனைப் பற்றிச் சொன்னார்கள். தங்கள் பேட்டி காண வந்தார், இரண்டு நாட்கள் ஆகும் என்று நீங்கள் சொல்லிவிடவே சத்திரத்தில் தங்கிவிட்டார், என்றார்கள்.
“அப்படியா! இல்லை இல்லை உடனே சென்று அவனை அழைத்து வாருங்கள்” என்று ஆள் அனுப்பி விட்டார் ராஜகுரு.
உடனே அவர்கள், தெனாலிராமன் தங்கியிருந்த சத்திரத்திற்கு ஓடி வந்தார்கள். ராஜ குரு அழைத்து வரச் சொன்னதையும் தெரிவித்தார்கள் ‘இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று சொன்னார்களே!’ என்றான் தெனாலிராமன். உங்களின் பெருமையை அறியாது சொல்லிவிட்டார். இப்பொழுது உடனே அழைத்து வரச் சொல்லுகிறார்’ என்றார்கள். அதற்குள் அங்கு குழுமியிருந்த மக்களுக்கு இச்செய்தி தெரிந்து விட்டது. அவர்கள் தெனாலிராமனுக்கிடையில் இத்தனை ரசனை பூர்வமான சூழ்நிலையை கெடுத்துக் கொள்ள விரும்பவில்லை.
“இன்னும் இரண்டு நாட்கள் ஆகும் என்று சொல்லி விடு உங்கள் ராஜகுருவிடம்!” என்றார்கள்.
ஆனால் தெனாலிராமனோ, ‘இது மகா காளியின் ஏற்பாடாக இருக்கலாம்” என்று எண்ணினான்.
அதனால் ‘நான் ராஜகுருவை கொண்டு விட்டு உடனே திரும்பி விடுகிறேன்’ என்று சொல்லி புறப்பட்டுவிட்டான். அவர்கள் அவன் உடுத்த செல்ல பட்டுப் பீதாம்பரமும் இடையில் கட்டிக் கொள்ள பட்டுத்துண்டும் வழங்கினார்கள். அதை உடுத்திக் கொண்டு வெகு கம்பீரமாய் ராஜகுருவிடம் சென்றான்.
ராஜகுருவும் அவனை அன்புடன் வரவேற்று ஆசனம் அளித்தார். அப்பொழுது அவன் எழுதி முடித்திருந்த லிங்க புராணத்தை அவரது பார்வைக்குச் சமர்பித்தான்.
அதை வாங்கிக் படித்து பார்த்தார் ராஜகுரு. மிகவும் நேர்த்தியாகவே இருந்தது அது! ‘ஏது, ஏது இவன் நம்மைவிட பெரிய ஆளாக இருப்பான் போலிருக்கே என்று எண்ணினார்.
இருந்தும் தன் உணர்ச்சியை வெளியில் காட்டிக் கொள்ளவில்லை ராஜகுரு தன் உதட்டைப் பிதுக்கினார்.
“இந்த இடத்தில் இப்படி இருக்க வேண்டும்! அந்த இடத்தில் அப்படி இருக்கவேண்டும்!” என்று ஏதேதோ சொல்லி வைத்தார். தெனாலிராமன் அவரது வார்த்தைகளை நம்பினான். விஜயநகரத்து அரண்மனையின் ராஜகுரு என்றால் இலேசுப்பட்டவராக இருப்பாரா? என்றே எண்ணினான். அவருக்கு மிகுந்த மரியாதை செலுத்தினான்.
அன்றையிலிருந்து அவரிடமே தங்கிவிட்டான் தெனாலிராமன். ராஜகுரு காலால் இட்ட வேளைகளையெல்லாம் தலையால் செய்து கொண்டு, எப்படியும் அவரது நன்மதிப்பைப் பெற வேண்டும் என்று முயற்சித்தான்.
ஆனால் அந்த ராஜகுருவோ, தெனாலிராமனின் திறமையைக் கண்டு பொறாமையே கொண்டார். இவனை விஜயநகரத்து அரண்மனையில் நுழைய விடுவதாவது! அதன்பிறகு அங்கு நமக்கு என்ன மரியாதை கிடைக்கும்!
இவனுடைய சமயோசித பேச்சும், குற்றமற்ற விகடமும் கிருஷ்ண தேவராயரை அதி சீக்கிரத்தில் கவர்ந்து விடுமே! என்றேல்லாம் எண்ணினார் ராஜகுரு.
அதனால் அவர் வஞ்சகமாகப் பேசினார் தெனாலிராமனிடம் “உன்னை அவசியம் விஜயநரத்து அரண்மனைக்கு அழைத்துச் செல்கிறேன். ஆனால் இப்பொழுது அங்கு சூழ்நிலை சரியில்லை. அதை ஒழுங்கு படுத்திக் கொண்டு, உனக்கு ஆள் விட்டனுப்புகிறேன். நீ அவசியம் தட்டாமல் வந்து சேர்” என்று சொன்னார் ராஜகுரு.
அவர் வார்த்தைகளை உண்மையென நம்பினான் தெனாலிராமன்.
மறுநாளே ராஜகுரு,அரண்மனைக்குப் புறப்பட்டார். அப்பொழுது தெனாலிராமன், அவ்வூர் பிரமுகர்களையெல்லாம் அழைத்து பேசி, தகுந்த விதமாகப் பிரிவுபசாரம் செய்வித்து அனுப்பி வைத்தான்.
அவ்வூர் எல்லை வரை, ராஜகுருவின் பல்லக்குடன் நடந்தே சென்று, பிரியாவிடை கொடுத்தனுப்பினான்.
நாட்கள் நகர்ந்தன. தன்னை அழைத்துப் போக, அரண்மனை ஆள் வருவான் என்று தன் வீட்டிலிருந்து எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தான் தெனாலிராமன்.
அவ்வீதி வழியே எவரேனும் வேற்று நாட்டு மனிதர் வந்தாலும், நம்மைத்தான் அழைக்க வருகிறாரோ என்று எண்ணி ஏமாந்தான்.
வெகு நாட்களாகியும் தெனாலிராமனை அழைத்துப் போக ஒருவரும் வரக் காணோம்!
இது பற்றி தன் ஊர் மக்களிடம் அவன் முன் கூட்டியே தெரிவித்திருந்ததால், அவரவர் அழைத்துப் போக ஒருவரும் வராததை கண்டு ஏளனமாக்ச் சிரிக்கத் தொடங்கிவிட்டார்கள்.
“என்ன! மூட்டை முடிச்சுகள் எல்லாம் கட்டியாகிவிட்டதா?” என்பான் ஒருவான்.
“அடா! நீ இன்னுமா இங்கு இருக்கிறாய்? நேற்றே நீ குடும்பத்துடன் விஜயநகரத்துக்குப் புறப்பட்டு விட்டதாகக் கேள்விப்பட்டேனே!” என்பான் ஒருவன்.
“உன்னை அழைத்துப் போக ஆள் வருவான்! அப்படி வந்தவன் இன்னும் உன் வீட்டைத் தேடி கொண்டிருக்கிறானோ!” என்பான் மற்றொருவன்.
இவ்வண்ணம் ஊரில் அவருடைய பரிகாச மொழிகளைக் கேட்டு மனம் குன்றிப் போனான் தெனாலிராமன்.
அவன் மனம் எண்ணாத எண்ணமெல்லாம் எண்ணியது. நாள் ஆக ஆக அந்த ராஜகுருவின் வார்த்தையிலும் நம்பிக்கை குறைந்து விட்டது.
நாள்தோறும் கோயிலுக்க்ச் சென்று, காளியிடம் முறையிட்டு வந்தான். அவன் மனம் இதே எண்ணத்தால் புழுங்கியது; தத்தளித்தது; யோசனை சொல்வோர் ஒருவருமில்லை?
கடைசியாக ஒரு நாள், தானே குடும்பத்துடன் விஜயநகரத்துக்கு புறப்பட்டு விடத் தீர்மானித்து விட்டான்.