அருள்மிகு முருகன் திருக்கோயில் - குன்றக்குடி

அன்று, அரசவனம் என்று புராணங்களில் போற்றப்பட்டுள்ள முருகனின் திருத்தலம், தமிழ்நாட்டில், சிவகங்கை மாவட்டத்தில், குன்றக்குடி என்னும் ஊராக தற்போது திகழ்கின்றது.

இது காரைக்குடியிலிருந்து மதுரை செல்லும் வழியில் சுமார் பன்னிரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

அரசமரம், ஸ்தல விருட்சமாக விளங்க தீர்த்தமாக, தேனாறு திகழ
அறுமுகங்களையும், பன்னிரு கரங்களையும் கொண்ட சண்முகநாதப் பெருமான் தெய்வயானை, வள்ளியம்மை உடனோடு செட்டிமுருகன், மயிலைக்கந்தன், குன்றைமுருகன், தேனாற்றுடையான்,  மயூரகிரிநாதன் என்ற பல பெயர்களுடன் மூலவராய் அருள்பாலிக்கின்றார்.

முன்னோரு காலத்தில், சூரபத்மனின் தவறான உபதேசத்தால், முருகனிடம் சாபம் பெற்ற மயில்,  அச்சாபத்தைக் கழைய, இந்த அரசவனமாகிய குன்றக்குடியில் மயில் போன்ற தோற்றமுடைய மலையாக மாறி தவமிருந்தது. பின் விமோச்சனம் பெற்றவுடன், அதன் விருப்பத்திற்கிணங்க, இம்மலையில் தமிழ் கடவுள் முருகன் எழுந்தருளினார் என்பது வரலாறு. இதனால் இத்தலத்திற்கு சிகண்டிமலை, மயூரகிரி மற்றும் மயில்மலை என்ற பெயர்களுமுண்டு.

இத்தலம் அருணகிரிநாதரால் பாடல் பெற்ற ஸ்தலம். அருட்திரு பாம்பன் குமரகுருதாச சுவாமிகளும் முருகனைப்பற்றி பாடியுள்ளார்.

இங்கு நாரதர், கண்ணபிரான், சூரியன்,  விஸ்வாமித்திரர், வசிஷ்டர், கருடன், மன்மதன் மற்றும் இந்திரனும் தேவராதியருடன் செட்டிமுருகனை வழிபட்டதாக தகவல்கள் கூறுகின்றன.

திருவிழாக்கள் :
பங்குனி உத்திரத்திலும், தைப்பூசத்திலும் பக்தர்கள் குறிப்பாக செட்டிமக்கள் சேவடி தேய காவடியும், பால் போல் பெருகிவாழ பாற்குடமும் எடுத்து  தேனாற்றுடையானை வணங்கி வருகின்றனர். மேலும், சித்திரையில் பால் பெருக்குவிழா, வைகாசி விசாகம், ஆனி மகாபிஷேகம், ஆடியில் திருப்படி பூஜை, ஆவணி மூலப்பிட்டுத் திருவிழா, புரட்டாசி மாதம் அம்பு போடும் திருவிழா, ஐப்பசியில் சூரனை வேலால் சம்கரிக்கும் கந்தர் சஷ்டி விழாவும் மிக மிக விமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன.

இத்தலத்தின் சிறப்புக்கள் :
இங்கு சண்முகநாதரும், அவர்தம் துணைவியரும் தனித் தனி மயில் வாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிப்பது ஆணும், பெண்ணும் சரிசமம் என்பதை தெள்ளத் தெளிவாக உணர்த்துகின்றது.

தற்போது நடந்த குடமுழுக்குக்கு முன் வரை நவக்கிரஹங்கள் அனைத்தும், நின்ற நிலையில் ஒரே முகமாக சண்முகநாதரை நோக்கி வணங்குவது சிறப்பு. அதாவது, சூரனிடமிருந்து தங்களைக் காத்த ஆறுமுகக்கடவுளை வணங்குவோருக்கு, நவக்கிரஹ தோஷங்கள் உடனே விலகும் என்பது சான்றோர் கருத்து. தோல் வியாதிகள் நீங்க, சரவணப் பொய்கை தீர்த்தத்தில் நீராடி, இடும்பன் சன்னதியில் உப்பும், மிளகும் போட்டு வணங்குகின்றனர். நல்ல மகசூல் பெற்ற விவசாயிகள் தானியங்களை காணிக்கையாக செலுத்துகின்றனர். மேலும் நெல் மணிகளையும், அரிசியையும் மலைப்படிகளில் தூவி வேண்டுதலை நிறைவேற்றுகின்றனர்.

உயிர்காக்க விரும்பி ஈடாக, ஆடு, மாடு, கோழி முதலிய கால்நடைகளை மயூரகிரிநாதனுக்கு நேர்த்திக் கடனாக செலுத்துகின்றனர். பசிப்பிணி நீங்க, அன்னதானம் செய்து ஏழைகளின் அரும்பசி ஆற்றுகின்றனர்

ஜாதகம் சாதகமாய் இல்லாக் குழந்தைகளை, சண்முகநாதனுக்கு பிள்ளை கொடுத்துவிட்டு, அப்பிள்ளை வளர்ந்து திருமணத்திற்கு சிலநாட்கள் முன்பு, அவனிடமிருந்து மீண்டும் பெற்றுக் கொண்டு அக்குழந்தையின் தலையெழுத்தையே மாற்றும் விந்தை இக்கோவிலின் தனிச்சிறப்பு.

அருணகிரிநாதர், திருப்புகழில் பல இடங்களில் குன்றைநகர் வேலனை  “குருநாதா” என்று வர்ணிப்பதின் மூலம் சண்முகநாதர் உலக மாந்தர்க்கு ஞானத்தை வழங்கும் குருவாக இங்கு எழுந்தருளியுள்ளார் என்பது கருத்து.

அதேபோல, குன்றக்குடி பதிகமும் முருகனை குருநாதனாக வர்ணிக்கிறது. இப்பதிகத்தைப் படித்தால் மனிதர்க்கு இவ்வுலகில் தேவையான செல்வம், புகழ், வெற்றி ஆகியன தங்குதடையின்றிக் கிடைக்கும். முக்கியமாக, குழந்தை வரம் வேண்டும் தம்பதியர் மனமுருகிப் பாடினால் நல்ல அழகான, ஞானத்தோடு கூடிய பிள்ளைகள் பிறக்கும் என்பது திண்ணம்.

குன்றாத குடிவாழ்க்கை தந்தருளும்  முருகனை, சண்முகநாதனை வணங்கி வழிபடுவோருக்கு, வாழ்க்கையில் அருந்துணையைக் கூடியிங்கே
அன்போடு வாழ்ந்திடுவர் அருமை மக்களுமே அகத்தினிலே வலம்வருவர் அனைத்து நலனும் அளவின்றிப் பெற்றிடுவர்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply