மதுரை அழகர் திருக்கோயில்

சுவாமி : கள்ளழகர், பரமஸ்வாமி, சுந்தராஜர்.

அம்பாள் : கல்யாண சுந்தரவல்லி தாயார்.

தீர்த்தம் : நூபுரகங்கை,சந்திரபுஷ்கரணி, கருடதீர்த்தம், அனுமார்தீர்த்தம் உள்ளிட்ட 108 புண்ணிய தீர்த்தங்கள்.

தலவிருட்சம் : சந்தன மரம்.

தலச்சிறப்பு:

சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்ச்சி மிகச் சிறப்பான திருவிழாவாக மதுரை மக்களால் கொண்டாடப்படுகிறது.  தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கும்.

திருத்தல வரலாறு:

ஒரு காலத்தில் எமதர்ம ராஜனுக்கு சாபம் ஏற்பட்டது.  இச்சாபத்தை போக்க பூலோகத்தில் தற்சமயம் ‌கோயில் இருக்கும் அழகர் மலை விருசுபகிரி என்னும் இம்மலையில்  தவம் செய்கிறார்.  இம்மலை 7 மலைகளை கொண்டது.  

தர்மராஜனின் தவத்தை மெச்சி பெருமாள்  காட்சிதந்தார். இறைவனின் கருணையை போற்றும் விதமாக தர்மராஜன் பெருமாளிடம்  தினந்தோறும் நான் ஒரு மு‌றையாவது பூஜை செய்ய வரம் தர வேண்டும் என்று கேட்டார். அதன்படியே பெருமாளும் வரம் தர இன்றும் இக்கோயிலில் தினமும் நடக்கும் அர்த்த ஜாம  பூஜையை எம தர்ம ராஜனே நடத்துவதாக ஐதீகம். எல்லா மக்களுக்கும் அருள் தருமாறு  ஏமதர்மராஜன் கூறவே, ஏமதர்மராஜனின் விருப்பத்தின் பேரில் இங்கு எழுந்தருளினார்.

அழகர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல விழாக்கள் கொண்டாடப்படுகின்றன.  அதில் முக்கியமானது சித்திரைப் பெருவிழாதான். சித்திரை திருவிழாவின் போது சுந்தரராஜ பெருமாள்,  கள்ளழகர் திருக்கோலம் பூண்டு மதுரைக்கு எழுந்தருளுவார். இந்த சித்திரைத் திருவிழாவுக்கு ஒரு  புராணக் கதையும் உண்டு.

தங்கை மீனாட்சிக்கு மதுரையில் திருமணம்.  ஊரே விழாக் கோலம் பூண்டு காணப்படுகிறது.   தங்கையின் கல்யாணத்தைக் காண கிளம்புகிறார் அழகர் பெருமான்.  அவர் மதுரை எல்லையை  அடைகிறார்.  இடையில் வைகை ஆறு.  வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.  ஆற்றைக் கடந்து  மதுரைக்குள் செல்வதற்குள், தங்கையின் கல்யாணம் முடிந்து விடுகிறது.  

இதனால் கோபமடையும்  அழகர், மதுரைக்குள் வராமல் வைகை ஆற்றோடு திரும்பி ஊருக்குச் செல்கிறார்.  இதை அடிப்படையாக வைத்துத்தான் ஆண்டுதோறும் சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில்  இறங்கும் சித்திரைத் திருவிழா நடைபெறுவதாக கூறப்படுகிறது.

மதுரை கள்ளழகர் கோவில்:

அழகரின் அபூர்வ வரலாறு 

ஒரு காலத்தில் இந்த உலகில் இறப்பு என்பதே இல்லாமல் இருந்தது. ஏனெனில் யாரும் தவறு செய்வதே கிடையாது. இருந்தும் ஒருவன் ஒரு பெண்ணை பலாத்காரம் செய்வதற்காக துரத்தி வரும் போது அங்கு வந்த தர்மதேவன் அவனை ஒரே அடியில் வீழ்த்தினார்.

இந்த விஷயத்தை கேள்விப்பட்ட சிவன், உலகில் தர்ம, நியாயம் அழிந்து விடக்கூடாது, அதை பாதுகாப்பது உன் பொறுப்பு எனவே அதற்குரிய உருவத்தை உனக்கு தருகிறேன் என கூறி தர்மதேவனுக்கு பற்கள் வெளியே தெரியும்படி ஒரு கொடூரமான உருவத்தை வழங்கி விட்டார்.

இதைக்கண்ட மற்ற உயிர்கள் நாம் தப்பு செய்தால் தர்மதேவன் அழித்து விடுவான் என்று பயம் கொண்டன.  நல்லது
செய்யப்போய் நமது உருவம் இப்படி ஆகி விட்டதே என கவலை கொண்டான் தர்மதேவன்.

சரி நமது உருவம் தான் இப்படி ஆகிவிட்டது. நாம் தினமும் எழுந்தவுடன் விழிக்கும் முகமாவது மிகவும் அழகாக இருக்க
வேண்டும் என இந்த அழகர் கோவில் மலையில் தவம் இருந்தான். இவனது தவத்திற்கு மகிழ்ந்த அழகின் தெய்வமான விஷ்ணு. இவனுக்கு காட்சி கொடுத்து வேண்டியதை கேள் என்று கூறினார்.

அதற்கு தர்மதேவன் நான் இந்த மலையில் தவம் செய்த போது காட்சி கொடுத்தீர்கள். எனவே நீங்கள் நிரந்தரமாக இங்கேயே எழுந்தருள வேண்டும்.

அத்துடன் தினமும் ஒரு முறையாவது உங்களுக்கு பூஜை செய்யும் பாக்கியத்தை தரவேண்டும் என்றான். தர்மதேவனின்
வேண்டுகோளின்படி மகாவிஷ்ணு சுந்தரராஜப் பெருமாளாக இந்த மலையில் எழுந்தருளினார்.

சுந்தரம் என்றால் அழகு எனவே அழகர் என்ற பெயரே நிலைத்து விட்டது. அத்துடன் தர்மதேவனுக்கு காட்சி கொடுத்த மலை அழகர்மலை என்றானது. இன்றும் கூட அழகர் கோவிலில் அர்த்தஜாம பூஜையை தர்மதேவனே செய்வதாக ஐதீகம்.

தல சிறப்பு

பெருமாளின் 108 திருப்பதிகளுள் ஸ்ரீரங்கம் முதலிடத்தையும், காஞ்சீபுரம் அடுத்த இடத்தையும், மூன்றாவது இடத்தை அழகர்கோவிலும் பெற்றுள்ளன. இத்தலத்தை பெரியாழ்வார்,  ஆண்டாள், நம்மாழ்வார், பூதத்தாழ்வார். பேயாழ்வார், திருமங்கையாழ்வார். ஆகியோர் மங்களாசாசனம் செய்துள்ளனர்.

பீஷ்மரும், பஞ்சபாண்டவர்களும் இத்தல பெருமாளை தரிசித்து பலனடைந்துள்ளனர்.

கள்ளழகர் என்ற பெயர் அழகர் கோவில் மூலவர் பரமசாமி. ஸ்ரீதேவி, பூதேவியுடன் அருள்பாவிக்கிறார். மகாவிஷ்ணுவின் திருக்கோலங்களிலேயே அழகர் கோவிலில் உள்ள சுந்தரராஜப்பெருமாள் தான் பெயருக்கேற்றாற் போல் மிகவும் அழகாக இருப்பார்.

தர்மதேவனுக்கு காட்சி தர பெருமாள் வந்ததால் வைகுண்டத்தில் பெருமாளை காணாமல் மகாலட்சுமி பெருமாளைத் தேடி இங்கு வந்து விட்டாள் என்பதும் ஐதீகம்.

மகாவிஷ்ணுவை விட மிக அழகான லட்சுமியைக்கண்ட தர்மதேவன் மகாலட்சுமியும் பெருமாளுக்கு அருகில் இங்கேயே தங்க
வேண்டும் என அடம் பிடித்தார். இவனது வேண்டுகோளின் படி மகாலட்சுமி பெருமாளை கைப்பிடித்து அவருக்கு அருகில் கல்யாண சுந்தரவல்லி எனும் திருநாமத்துடன் இங்கு வீற்றிருக்கிறாள்.

இப்படி அழகான இருவரது திருமணக்கோலம் அனைவர் மனதையும் திருடிக்கொண்டது. மக்கள் மனதை கொள்ளை கொண்டதால் அழகர் கள்ளழகர் ஆனார். இதனாலேயே இந்த பெருமாளை நம்வாழ்வார் வஞ்சக்கள்வன் மாமாயன் என்கிறார்.

வைகை தோன்றியது எப்படி?

மீனாட்சி சுந்தரரேஸ்வரர் திருமண விருந்து சிறப்பாக நடந்து கொண்டிருந்தது. தங்கள் வீட்டு விருந்தைப் பற்றி பெருமையுடன் சிவனிடம் பெண் வீட்டார் பேசினர். தங்களுடன் வந்துள்ள அனைவரும் உடனடியாக சாப்பிடச் சொல்லுங்கள். இங்கே உணவு வகை கொட்டிக்கிடக்கிறது. சாப்பிடாமல் இருந்தால் வீணாக அல்லவா போய் விடும் என்றனர்.

சிவன் அவர்களிடம் இப்போது யாருமே பசியில்லை என்கிறார்கள். இதோ எனது கணங்களில் ஒருவனான இந்த குண்டோதரனுக்கு முதலில் விருந்து வையுங்கள். மற்றவர்களை பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்றார். விருந்தை மருந்தைப் போல ஒரே வாயில் போட்டு மென்று விட்டான் குண்டோதரன். பெண் வீட்டார் திகைத்தனர்.

மற்றவர்களை எப்படி சமாளிக்கப் போகிறோம். இந்த குண்டோதரன் இப்போது தின்றது போதாதென்று இன்னும் கேட்கிறானே என வெட்கிநின்ற அவர்கள் அந்த இறைவனையே சரணடைந்தனர்.

திருமண வீட்டில் பெருமை பேசக்கூடாது என்பது இதனால் தான். அரண்மனைவாசிகளாயினும் அகந்தை கூடாது என்பது இச்சம்பவம் தரும் தத்துவம். சிவன் அன்னபூரணியை அழைத்தார். அவள் கொடுத்த உணவை சாப்பிட்டு விட்டு ஆறு, குளம், குட்டை, வாய்க்கால், ஏரி இவைகளில் உள்ள தண்ணீர் எல்லாம் குடித்து முடித்தான் குண்டோதரன். அப்படியும் தாகம் தீராததால் ஈசனிடம் வந்து முறையிட்டான்.

ஈசன் தன் சடை முடியிலிருந்த கங்கையிடம் மதுரை நகருக்கு உடனே தண்ணீர் தேவைப் படுகிறது. உடனே அங்கு பாய்ந்தோடு என கட்டளையிட்டார். குண்டோதரனிடம் நீர் வரும் திசை நோக்கி கைவை. அந்த நீரை குடித்து உன் தாகத்தை தீர்த்து கொள் என்றார். இதுவே வைகை ஆனது.

கங்கை பாய்ந்ததால் வைகையில் நீர் பெருக்கெடுத்து ஓடியது. எனவே அது புண்ணிய நதியாக மாறியது. இப்படி கங்கையையும், வைகையையும் இணைக்கும் திட்டத்தை சிவன் அன்றே உருவாக்கி வைத்திருக்கிறார். இந்த நதி காற்றை விட வேகமாக வந்ததால் வேகவதி எனப்பட்டது.

அழகர் கோவிலின் சிறப்பம்சம்.

கருப்பண்ணசுவாமி இத்தலத்தில் காவல் தெய்வமாக விளங்குகின்றார். கருப்பண்ண சுவாமி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வம். பதினெட்டாம்படியான் என்று பக்தர்கள் மிகவும் பயபக்தியோடு அழைக்கப்படுகிறார். இவரை கும்பிட்டால் நினைத்த காரியங்கள் கைகூடும். விவசாயிகள் விளைச்சல், அறுவடைக்கு முன்பு தங்கள் நிலத்தில் குறிப்பிட்ட இடத்தில் கோட்டை கட்டி அதில் இருக்கும் தானியங்களை அழகருக்கு காணிக்கையாக செலுத்துவார்கள்.

அழகர் கோவில் தோசை

காணிக்கையாகக் கிடைக்கும் தானியங்களை அரைத்து மாவாக்கி அதில் கோவில் சார்பாக தோசை சுட்டு பிரசாதமாகத் தரப்படுகிறது. இது பழநி பஞ்சாமிர்தம், திருப்பதி லட்டு போன்ற மிகவும் புகழும், சிறப்பும் உடையது. மூலவர் மானிட பிரதிஷ்டை இல்லை. தெய்வ பிரதிஷ்டை. பெருமாள் சப்தரிஷிகள் சப்த கன்னிகள் பிரம்மா விக்னேஷ்வர் ஆகியோரால் ஆராதிக்கப்படுகிறார்.

6 ஆழ்வார்களாலும் பாடல் பெற்ற முக்கிய திவ்ய தேசம் இது. சக்கரத்தாழ்வார் சப்த கன்னிகளால் ஆராதிக்கப்படுகின்றார். மற்ற தலங்களில் நின்ற கோலத்தில் மட்டுமே காட்சி தரும் ஆண்டாள் இங்கே உற்சவராக உட்கார்ந்திருக்கிறார்.

சிறப்பம்சம்

தெய்வ பிரதிஷ்டை அணையா விளக்கு இத்தலத்தில் எரிந்து கொண்டே இருக்கிறது.

நேர்த்திக்கடன்

தங்கள் பிரார்த்தனைகளை நிறைவேற்றி கொடுத்த அழகருக்கு பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனாக முடிக்காணிக்கை தருகின்றனர். எடைக்கு எடை நாணயம், எடைக்கு எடை தானியங்கள் ஆகியவற்றை தருகின்றனர். இத்தலத்தில் துலாபாரம் மிகவும் சிறப்பு.

பெருமாளுக்கு தூய உலர்ந்த ஆடை சாத்தலாம். ஊதுவத்தி, வெண்ணெய் சிறு விளக்குகள் துளசி தளங்கள் பூக்கள் பூமாலைகள் முதலியன படைக்கலாம். பிரசாதம் செய்து அழகருக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு கொடுக்கலாம். இது தவிர கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு அன்னதானம் செய்யலாம்.

இப்படி பல்வேறு சிறப்புக்களைப் பெற்ற புனித தலமான கள்ளழகர் கோவிலை அடுத்த முறை தமிழகம் செல்லும்போது நீங்களும் தரிசித்து வர மறவாதீர்கள்.

வழிபட்டோர் : ஏமதர்மன்.

நடைதிறப்பு:

காலை 6.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை, மாலை 3.30 மணி முதல் இரவு  7.30 மணி வரை நடை திறந்திருக்கும்.

பூஜை விவரம்: அர்த்த ஜாம பூஜை.

திருவிழாக்கள்:சித்ரா பவுர்ணமியன்று கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் (பத்து லட்சத்திற்கும் மேற்பட்டோர் கூடுவர்) சித்திரை திருவிழா,

ஆடி பிரம்மோற்சவத் திருவிழா.

அருகிலுள்ள நகரம்: மதுரை.

கோயில் முகவரி : அருள்மிகு கள்ளழகர்
திருக்கோயில், அழகர் கோவில் – 625 301, மதுரை மாவட்டம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply