மசால் கடலை செய்வது எப்படி!!

மசாலா கடலை ஒரு சிறந்த சிற்றுண்டி. மாலையில் டீ மற்றும் காபியுடன் சாப்பிடலாம். கடையில் வாங்கும் மசாலா கடலை போன்ற சுவையுடன் இதை வீட்டிலேயே தயார் செய்யலாம்.

தேவையான பொருள்கள் :

பச்சை நிலக்கட‌லைப் பருப்பு – 200 கிராம்

கடலை மாவு – 4 டேபிள் ஸ்பூன்

அரிசி மாவு – 1 டேபிள் ஸ்பூன்

மிளகாய் வற்றல் பொடி – 1/2 டேபிள் ஸ்பூன்

கரம் மசாலா பொடி – 1/4 டேபிள் ஸ்பூன்

வெள்ளைப் பூண்டு – 2 பற்கள் (பெரியது)

பெருங்காயப் பொடி – 2 சிட்டிகை

பெருஞ்சீரகம் – 2 டீஸ்பூன்

கறிவேப்பிலை – 3 கீற்று

மிளகு சீரகப் பொடி – 1/4 டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

கடலை எண்ணெய் – பொரிக்க தேவையான அளவு

செய்முறை :

நிலக்கடலைப் பருப்பில் தூசி, கல் மற்றும் சொத்தைப் பருப்பு ஆகியவற்றை நீக்கி விட வேண்டும்.

வெள்ளைப் பூண்டினை தோல் நீக்கி நன்கு நசுக்கிக் கொள்ளவும்.

கறிவேப்பிலையை அலசி உருவிக் கொள்ளவும்.

இரண்டு கீற்று உருவிய கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

ஓரு கீற்று கறிவேப்பிலையை முழுதாக வைத்திருக்கவும்.

பெருஞ்சீரகத்தை ஒன்றிரண்டாகத் தட்டிக் கொள்ளவும்.

வாயகன்ற பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் வற்றல் பொடி, மிளகு சீரகப் பொடி, கரம் மசாலா பொடி, நறுக்கிய கறிவேப்பிலை, பெருங்காயப் பொடி, நசுக்கிய வெள்ளைப் பூண்டு, பெருஞ்சீரகம் மற்றும் உப்பு ஆகியவற்றைச் சேர்க்கவும்.

எல்லாப் பொருட்களையும் நன்கு கலந்து கொள்ளவும்.

பின்னர் அதனுடன் சிறிது சிறிதாக தண்ணீர் சேர்த்து படத்தில் உள்ளபடி பாதி கூழ்ம நிலைக்குப் பிசையவும்.

அதனுடன் சுத்தம் செய்த பச்சை நிலக்கடலையைச் சேர்க்கவும்.

எல்லா கடலையிலும் மாவு ஒட்டும்படி மெதுவாக கையால் கிளறி ஒரு சேரப் பிசையவும்.

அடிப்பாகம் சமமாக உள்ள வாணலியை அடுப்பில் வைத்து கடலை எண்ணெய் சேர்த்து காய விடவும். குழியான வாணலியைப் பயன்படுத்தினால் கடலை தனித்தனியாக இல்லாமல் ஒரே இடத்தில் குவிந்து விடும்.

எண்ணெய் மிதமான சூட்டில் இருக்கும் போது, பிசைந்த கடலையை எடுத்து ஒவ்வொன்றாக எண்ணெயில் உதிர்த்து விடவும்.

எண்ணெயில் போடும் போது கவனமாகப் போடவும். இல்லையென்றால் கரண்டியில் கடலையை உதிர்த்து விட்டு கரண்டி மூலம் எண்ணெயில் சேர்க்கலாம்.

அடுப்பில் தீயை மிதமாக வைக்க வேண்டும். நிலக்கடலையில் எண்ணெய் குமிழி அடங்கியதும் வெளியே எடுத்து, எண்ணெயை வடித்து பாத்திரத்தில் சேர்க்கவும்.

எல்லா கடலையையும் பொரித்ததும், கடைசியாக உருவி முழுதாக வைத்துள்ள கறிவேப்பிலையை எண்ணெயில் பொரித்து எடுத்து வறுத்த நிலக்கடலையில் சேர்க்கவும்.

சுவையான மசாலா கடலை தயார்.

வறுத்தவுடன் சுவைத்தால் உள்ளே கடலை வறுபடாதது போல் தோன்றும். ஆதலால் சற்று நேரம் கழித்து லேசாக ஆறிய பின் சுவைக்கவும்.

இதையும் செய்யலாமே!: ரவை பணியாரம் செய்வது எப்படி!!

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply