தெனாலிராமன் சிறுகதை - மகா காளியின் தரிசனம்

அதற்குள் அவனுக்கு வழக்கப்படியான விளையாட்டுப் புத்தி வந்துவிட்டது. விளையாடப் போய்விட்டான்.

சில நாட்களுக்குள், அவனுடன் நெருக்கமாக இருந்த பிள்ளைகளில், ஒவ்வொருவராக ஏதோ பிழப்பைத் தேடிக் கொண்டு எங்கெங்கோ சென்று விட்டார்கள்.

தெனாலிராமன் தனிமையில் விடமாட்டான்.

அப்பொழுது அவன் செய்வதென்றும் அறியாது காட்டுப்பக்கம் சென்றான். தனிமையில் உட்கார்ந்து கொண்டு ஏதேதோ யோசித்தான்.

அதே சமயத்தில் அந்தப் பக்கமாக நீண்ட தாடி மீசையுடன் அந்த சந்நியாசி வந்தார்.

“குழந்தாய்! இங்கே ஏன் தனியாக உட்கார்திருக்கிறாய்! அன்று நான் கூறியபடி காளி கோயிலுக்குச் சென்றாயா! மந்திரம் ஓதினாயா? நன்கு உழைத்துப் பிழைக்கும் வயதில் இப்படி பயமின்றி உட்கார்ந்திருக்கலாமா” என்று அவன் முதுகைத் தடவிக் கொடுத்தார்.

குற்றமுள்ள நெஞ்சு குறுகுறுவென்றது அவனுக்கு. அவர் அன்று சொன்ன மாதிரி அவன் நடந்து கொள்ளவில்லையே! தலைகுனிந்து கொண்டான்.

“அதோ தூரத்தில் தெரிகிறதே! என்ன அது?” என்றார் சந்நியாசி.

“அது மகா காளியின் கோயில்” என்றான்.

“நீ அங்கு போயிருக்கிறாயா?”

“எப்பொழுதோ ஒரு தடவை போயிருக்கிறேன்.”

“இனிமேல் நீ தினம் அங்கு சென்று மகா காளியைத் தரிசித்து வரவேண்டும். சந்நிதியைச் சுற்றிவிட்டு, கோயில் மண்டபத்து மூலையில் உட்கார்ந்து தியானம் செய்து வா. அப்பொழுது நீ இந்த மந்திரத்தை தவறாமல் உச்சரித்து வா! உனக்கு சகல செள்பாக்கியங்களும் ஏற்படும்” என்று சொல்லி, அவன் காது அருகே சென்று இரகசியமாக அந்த மகா மந்திரத்தையும் கூறினார்.

உடனே தெனாலிராமன் அவரை நமஸ்கரித்து எழுந்தான். கரம் தூக்கி அவனை ஆசிவதித்துவிட்டு, அவர் வேறு வழியாகச் சென்றுவிட்டார்.

அச்சந்நியாசி சென்ற திக்கையே சற்று நேரம் பார்த்து நின்றான். அதன்பிறகு மனசில் ஒருவித உற்சாகம் பிறக்க வீட்டுக்குத் திரும்பி விட்டான்.

அன்றையிலிருந்து அவன் மகா காளி கோயிலுக்கு சந்நியாசி சொல்லியபடி தவறாமல் சொல்லத் தொடங்கினான். அங்கு தியானத்தில் அமர்ந்து மந்திரத்தையும் ஜபித்து வந்தான்.

“என்னடா! பெரிய பக்திமானாகி விட்டாயா?” என்று பரிகசித்தார்கள் அவன் நண்பர்கள். “ஏதோ! இறைவியைத் தொழுவதில் தப்பு இல்லையே!’ என்பான் தெனாலிராமன்.

அன்றிரவும் அந்தக் காளி கோயிலுக்குச் சென்றான் தெனாலிராமன். மகா காளி சந்நிதியைச் சுற்றி வந்தான். குத்து விளக்குத் திரிகளில் ஒன்று கருகி வந்தது. அதையெடுத்து நன்கு எண்ணெயில் நனைத்துப் போட்டு, நன்றாக எரிய விட்டான்.

பிறகு சற்று நேரம் மகா காளியின் திருமுக விந்தாரத்தை உற்று  நோக்கியிருந்து விட்டு, மண்டபத்தின் மூலைக்குச் சென்று அமர்ந்தான்.

கண்களை மென்மையாய் மூடினான். மகா காளியை மனதில் இருத்தி மந்திரத்தை அட்சரம் பிசகாமல் ஆயிரத்தெட்டு தடவை ஜபித்தான். அந்த நேரத்தில் அவன் தன்னையே மறந்தான்; தான் இருக்கும் இடத்தை மறந்தான்; முன்பின் பார்த்தறியாத ஒருவித அற்புத உலகத்தில் மானசீகமாய் சஞ்சரித்துக் கொண்டிருந்தான்.

நேரம் கடந்ததே தெரியவில்லை. முன்னிரவு வேளை மறைந்து நள்ளிரவு வேளை வந்தது. எங்கும் அமைதி நிறைந்திருந்தது. அந்த சமயத்தில் ‘ஜல் ஜல்’ லென இனிமையான சதங்கையொலி கேட்டது. மென்மையாய் கண்களைத் திறந்தான்.

அவனுக்கெதிரே ஒருவித ஒளியும் பரவியது. அந்த அதிசயத்தை அவன் கண்டு கொண்டிருந்த வேளையில் மகா காளியே அங்கு பிரசன்னமானாள்.

எதிரே கோர பற்களுடன் செந்நாக்கு கீழே தொங்க அச்சம் தருபவளாக நின்றாள் மகா காளி. பார்க்கவே பயங்கரமாகத்தான் இருந்தது. ஆனால் அவன் கலகலவென சிரித்துவிட்டான்.

அவனுடைய தைரியத்தைக் கண்டு மகா காளியே வியப்புற்றாள். “என்ன சிரிப்பு அது?” என்று சற்று கடுமையாகவே கேட்டாள். முதலில் சற்று தயங்கவே செய்தான் தெனாலிராமன்.

மேலும் அவனுக்குச் சிரிப்பு பொத்துக் கொண்டு வரவே, “ஒன்றுமில்லை தாயே! ஒரு சிறிய விஷயம். எனக்கிருப்பது ஒரே மூக்கு. சமயத்தில் அதில் சளி பிடித்து கொண்டால் மிகுந்த தொல்லையாக இருக்கிறது.

சமயத்தில் அதிலிருந்து ஒழுகும் சளியைத் துடைக்க எனது இரு கரங்களுமே போதவில்லையே! அப்படியிருக்க தங்களுடைய இந்த ஆயிரம் மூக்குகளிலிருந்தும் சளி ஒழுகினால் எப்படி சமாளிப்பீர்கள் என்று எண்ணினேன். உடனே எனக்கு சிரிப்பு வந்துவிட்டது” என்றான்.

அதைக் கேட்டதும் மகா காளிக்கே சிரிப்பு வந்துவிட்டது. ‘நீ ஒரு விகடகவி’ என்று சொல்லிப் பலமாய் சிரித்தாள் மகா காளி.

“தாயே! என்னை மன்னித்தருளி, தாங்கள் மனமுவந்து அளித்த இந்தப் பட்டம் ஒன்றே போதும் எனக்கு. ‘விடகவி’ அதைத் திருப்பிப் படித்தாலும் அதே ‘விகடகவி’ தான்! ஆச்சரியம்!” என்று தன் சிரம் மேல் குவித்து தொழுதான் தெனாலிராமன். மகா காளி அவனை ஆசிவதித்தாள்.

உடனே தன் இரு கரங்களிலும் இரண்டு பொன் கிண்ணங்களை ஏந்தி அவன் எதிரே நீட்டினாள்.

“இன்றில் செல்வம், மற்றொன்றில் கல்வி. உனக்கு என்ன வேண்டும் சீக்கிரம் சொல்!” என்றாள் காளி.

“தாயே! அவற்றின் ருசியொன்றும் நான் அறியேனே! நான் எதைச் சொல்வது?” என்று சொல்லிச் சற்று தயங்கினான் தெனாலிராமன்.

“அப்படியா? சரி! ஒவ்வொன்றிலும் ஒரு துளியெடுத்து ருசித்து பார்” என்றாள் மகா காளி.

“ஆகா” வென பாய்ந்து சென்றான். தன் இரு கரங்களையும் இரு கிண்ணங்களிலும் விட்டு அளைந்தான்.

ஒவ்வொன்றிலும் ஒரு கையளவு எடுத்து, ஒரே சமயத்தில் தன் வாயில் கொட்டிக் கொண்டான்.

“ஆகா! என்ன ருசி! என்ன ருசி! தாயே! எனக்கு இரண்டுமே வேண்டும்” என்றான்.

அது கண்ட காளி புன்னகை புரிந்தாள். “அட போக்கிரிப் பையா! நான் என்ன சொன்னேன், நீ என்ன செய்தாய்! இப்படி நடந்து கொண்டு விட்டாயே.”

“சரி! சரி! நீ பெரிய கவியாக இருப்பதை விட, வெறும் விகடகவியாகவே இருந்து விடு” என்று சற்று கடுமையாகவே சொன்னாள் மகா காளி.

“தாயே! ஏழைச் சிறுவன் மேல் தாங்கள் இப்படிச் கோபம் கொள்ளலாமா! என் மேல் அன்பு காட்டுங்கள் தாயே! தாங்கள்தான் என்னை மன்னித்து காப்பாற்ற வேண்டும்” என்று மகா காளியின் திருப்பாதங்களைக் கட்டிக் கொண்டு மன்றாடினான்.

ஏக்கம் கொண்ட அவன் முகத்தைக் கண்டு மகா காளியின் சீற்றம் தணிந்தது.

“தெய்வங்களின் மேல் அமோக கவிதைகள் எழுதி, நீ என்னதான் பெரிய கவிஞாக விளங்கினாலும், சாதாரண ‘விகடகவி’ என்ற பெயர் தான் உனக்கு நிலைத்து நிற்கும்.

“இந்த விஜய நகர ராஜ்யத்தின் அரண்மனையில் நீ விகடகவியாக விளங்குவாய். இப்பாரதம் முழுவதிலும் பேரும் புகழும் அடைவாய்.

“அரசன் கோபத்துக்கு ஆளாகி, உன் உயிருக்கு அடிக்கடி ஆபத்து ஏற்படும். அச்சமயங்களில் எல்லாம் நான் உன் நாக்கில் வீற்றிருந்து உன்னைக் காப்பாற்றுவேன்” என்றாள்.

“தாயே! தங்கள் சித்தம் என் பாக்கியம். என்பால் இத்தனை கருணை காட்டும் தங்கள் நான் எப்பொழுதும் மறவேன். அனுதினமும் தங்களை நான் பூஜித்து வருவேன்” என்று சொல்லி மீண்டும் மகாகாளியை தண்டனிட்டு எழுந்தான் தெனாலிராமன்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply