பூனையும் எலியும் - தெனாலிராமன் கதைகள்

வயலில் அறுவடை வேலை முடிந்து விட்டது. விவசாயிகள் தானியங்களை மூட்டை மூட்டையாகக் கட்டிக் கொண்டு வீடு வந்து சேர்ந்தார்கள். அதன் பிறகு வயல்காட்டிலிருந்து எலிகளுகெல்லாம் அங்கு வேலையே இல்லை.

தெனாலிராமன் வீடு வயற்காடிற்கு பக்கத்தில் இருந்ததால் எல்லா எலிகளும் அவன் வீட்டில் வந்து குடியேறின.

அதனால் அவன் வீட்டில் எலிகளின் உபத்திரவம் மிகவும் அதிகமாகப் போயிற்று. பண்டப்பாடகளையும் விலையுர்ந்த பட்டாடைகளையும் பல்லால் குதறிக் குப்பையாக்கிவிட்டுச் சென்றன.

எலிகளை எப்படியும் ஒழித்துக்க கட்ட வேண்டுமே? யார் யாரையோ யோசனை கேட்டான். அதுபடி செய்தும் பார்த்தான் ஒன்றும் பயனில்லை.

இதற்கு என்ன செய்யலாம் என்று அவன் கையைப் பிசைந்து கொண்டிருந்தபொழுது, அவனுக்கு ஒரு யோசனை பளிச்சிட்டது. முன்பு அரசன் பூனை வளர்க்க ஏற்பாடு செய்தது நினைவிற்கு வந்தது.

உடனே பூனை ஒன்றைத் தேடிப் போனான் தெனாலிராமன். எதுவும் வேண்டும் பொழுது கிடைக்காதல்லவா! அதே சங்கடம் அவனுக்கும் ஏற்பட்டது. கடைசியில் அடுத்த ஊருக்குச் சென்று ஒரு நல்ல பூனையாகக் பிடித்து வந்தான்.அதன் வெள்ளை உடம்பில் ஆங்காங்கு கறுப்புத் திட்டுகள் அழகாகத்தான் இருந்தன.

பூனை அவன் வீட்டுக்கு வந்து இரண்டொரு நாட்களிலிலேயே பதுங்கிப் பதுங்கிப் பல எலிகளைப் பிடித்துப் பலகாரம் செய்தது. இருந்தாற் போலிருந்து பாய்ந்து செல்லும்; லபக்கென்று ஓர் எலியைக் கெளவிக் கொண்டும் வரும்.

இதனால் தெனாலிராமன் வீட்டில் நாளுக்கு நாள் எலிகளின் உபத்திரம் குறைந்து கொண்டே வந்தது.

ஆனால் நாளடைவில் தலைவலி போய் திருகுவலி வந்தது என்பார்களே அது போன்று பூனையின் உபத்திரமல்லவா அதிகமாயிற்று!

அடிக்கடி பூனை எதிர் வீட்டுக்கும் பக்கத்து வீட்டுக்கும் ஓடத் தொடங்கியது. சில வீட்டுக் குழந்தைகள் அதை கண்டு பயந்தன. சில குழைந்தைகள் அதனுடன் விளையாடின.

கடைசியில் யாரும் இல்லாத சமயமாகப் பார்த்து பக்கத்து வீட்டுக்காரர் செல்லமாக வளர்த்து வந்த கிளியின் கழுத்தைப் பிடித்து விட்டது அந்தப் பொல்லாத பூனை.

கீச்கீச்சென கதறிக் கொண்டே தலையைச் சாய்த்து விட்டது அக்கிளி.

இந்தக் கொடிய வேலையைச் செய்துவிட்டு, ஏதோ சாதுவான பூனைபோல் சந்தடி செய்யாது தெனாலிராமன் வீட்டிற்கு திரும்பி விட்டது அது.

இதைக் கண்ட அண்டை வீட்டுக்காரன் அப்ப்டியே துடிதுடித்துப் போனான். அவன் தன் செல்லக்குழந்தையைப் போல் வளர்த்த கிளியாயிற்றே! முகத்தில் கோபமும் வருத்தமும் கொப்பளிக்க கையில் ஒரு தடியை எடுத்துக் கொண்டு அந்தப் பூனையின் பின்னோடு தெனாலிராமன் வீட்டிற்கே வந்துவிட்டான்.

கையிலிருந்த தடியை ஓங்கி அந்தப் பூனையைத் தாக்க போனான்.

அதற்குள் தெனாலிராமனுக்கும் விஷயம் தெரிந்துவிட்டது. இருந்தும் தான் வளர்த்து வரும் பூனையைக் கொல்ல விடுவானா! ஓடி வந்து அண்டை வீட்டுக்காரனுடைய ஓங்கிய கையைப் கெட்டியாய்ப் பற்றிக் கொண்டான்.

“அது செய்துவிட்டு வந்த காரியம் தெரியுமா உனக்கு. என் செல்லக் குழந்தையை அன்பு கிளியைக் கொன்று விட்டு வந்து விட்டது. ஐயா! உங்கள் வீட்டில் அப்ப்டி நடந்தால் நீ சும்மா இருப்பாயா!” என்று இரைச்சல் போட்டான் கிளிக்கு சொந்தக்காரன்.

“ஏதோ தெரியாத்தனமாகச் செய்துவிட்டது. தயவு செய்து விட்டு விடுங்கள் ஐயா! அதனால் எங்கள்  வீட்டில் எலி உபத்திரம் குறைந்து கொண்டு வருகிறது!” என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

“சரிதான் போ ஐயா! என் செல்லக் குழந்தை மாதிரி வளர்த்து வந்தேனே! என் ஆசை கிளியைக் கொன்றுவிட்டதே! இது தகுமா?” என்றான்.

தெனாலிராமன் சற்று தலைகுனிந்து நின்றான்.

“எங்கள் வீட்டிலும்தான் எலி உபத்திரவம் இருக்கிறது! அதற்காக பூனையா வளர்க்கிறோம். விடு ஐயா கையை!” என்று திமிரிக் கொண்டு சென்று, அந்தப் பூனையின் மண்டையைப் பார்த்து தன் கைத்தடியால் பொட்டென ஒரு போடு போட்டான்.

அது கண்டு துடியாய்த் துடித்துப் போனான் தெனாலிராமன்.

என் கிளியை அது கடித்துப் போட்ட பொழுது நானும் உன்னைப் போல்தான் துடியாய் துடித்துப் போனேன் என்று சொல்லிக் கொண்டே,  அவிழ்ந்த குடுமியை முடிந்து கொண்டே அண்டை வீட்டுக்காரன் தன் வீட்டிற்குத் திரும்பினான்.

வேறு ஒரு பூனையைக் கொண்டு வந்து வளர்க்க தெனாலிராமனுக்கு மனமில்லாமல் போய்விட்டது. அதற்குள் எலி உபத்திரவமும் வீட்டில் குறைந்து விட்டது!

சில நாட்களுக்குப் பிறகு அந்த அண்டை வீட்டுக்காரனுக்கு ஒரு பரிசு பொருள் வந்தது. பார்ப்பதற்கு அந்தப் பெட்டி வெகு அழகாக இருந்தது. சற்று கனமாகவும் இருந்தது.

“இதில் என்னதான் இருக்கும்?’ என்று எண்ணிக் கொண்டே, அந்தப் பெட்டியை ஜாக்கிரதையாகத் தன் அறைக்கு எடுத்துச் சென்றான். ஜன்னல்களையெல்லாம் சாத்தி விட்டு அதை மெதுவாகத் திறந்தான்.

அவ்வளவுதான், அதன் உள்ளேயிருந்து ‘குபுக்’ கென்று அறுபது எழுபது எலிகள் வெளியேறி, நாலா பக்கமும் பாய்ந்தோடின.

அவற்றை கையிலகப்பட்டதை எடுத்துக் கொண்டு அடிக்கத் தொடங்கினான். அதனால் அங்கு விரிக்கப்பட்டிருந்த ரத்தினக் கம்பளம் எல்லாம் இரத்தக் கறையானது.

அத்துடன் அவ்வெலிகளை அடிக்க கைத்தடியை ஓங்கிய பொழுது உயரத் தொங்கிக் கொண்டிருந்த கண்ணாடி லஸ்தர் விளக்கில் பட்டு சுக்குநூறாகி அவன் தலை மீதே விழுந்தது.

இன்னும் ஆங்காங்கு அழகுக் பொருள்களாக வைத்திருந்த கண்ணாடி சாமான்களும் கீழே விழுந்து உடைத்தன.

இப்படி ஒரு நொடியில் அந்த வீடே யுத்த களமாயிற்று. அதன் பிறகு அமைதி ஏற்பட ஐந்தாறு மணி நேரம் ஆகிவிட்டது.

தன் அவிழ்ந்த குடுமியை முடியக் கூட நேரமில்லை அந்த அண்டை வீட்டுக்காரனுக்கு. மிகுந்த வயிற்றெரிச்சலுடன் எந்தப் போக்கிரி இப்படிச் செய்திருப்பான் என்று அப்பெட்டியினுள் கையை விட்டுத் துழாவினான்.

உள்ளே ஒரு ஓலை நறுக்கென்று கிடைத்தது. ஆவலாய் எடுத்து அதைப் படிக்க தொடங்கினான். எழுத்துக்கள் ஒன்றும் சரியாகப் புரியவில்லை.

பிறகு தன் அவிழ்ந்த குடுமியை முடிந்து கொண்டு மூக்குக் கண்ணாடியையையும் எடுத்து மாட்டிக் கொண்டு சாவகாசமாய் அதைப் படித்துப் பார்த்தான்.

“ஐயா! எப்படி என் வேடிக்கை! அன்று ஒருநாள் பூனையில்லாமல் ஏன் எலி உபத்திரவத்தை அடக்க முடியாது? என்று கேட்டுக்கொண்டே என் பூனையை தடியால் அடித்து கொன்றீகளே! நினைவிருக்கிறதா?

“அதற்காகத்தான் அதைச் சோதித்துப் பார்க்கத்தான் இந்த ஏற்பாட்டைச் செய்தேன்.

“இந்த வேடிக்கையை நீங்கள் முற்றிலும் ரசித்திருப்பீர்கள் என்றே நம்புகிறேன்.

“ஆனால் முடிவு என்னவாயிற்றோ!

“ஒரு வரி எழுதினால் நலமாயிருக்கும்” என்று பொறித்திருந்தது அந்த ஓலையில்.

கடைசியில் தங்கள் அன்புள்ள தெனாலிராமன் என்றும் மறக்காமல் எழுதியிருந்தான்.

“ஓகோ! இது உன் வேலைதானா!” என்று தன் தலையைச் சொறிந்து கொண்டான் அந்த அண்டை வீட்டுக்காரன்.

அதே சமயத்தில் தெனாலிராமனோ இந்த விஷயத்தை அரசரிடம் விவரித்து விழுந்து விழுந்து சிரித்துக் கொண்டிருந்தான். அரசரும் சிரிப்பில் அவனோடு சேர்ந்துகொண்டார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply