அரசாங்கத்துக் குதிரைப் படையில் ஆயிரக்கணக்கான அராபியக் குதிரைகள் இருந்தன. அது ஒரு பெருமையாகவும் இருந்தது.
இருந்தும் யுத்தம் இல்லாத காலங்களில் அக்குதிரைகள்ப் போஷிக்க அதிகச் செலவாகிக் கொண்டிருந்தது!
அந்தக் அதிகச் செலவைக் குறைக்க ஏதேனும் வழியுண்டா என்று யோசித்து வந்தார் அரசர்.
“ஏன்! வீட்டுக்கு ஒரு குதிரையை அனுப்பி அவர்களையே வளர்க்கச் சொன்னால் போகிறது!” என்றார் மந்திரி.
“அதற்கான செலவை அவர்களையா ஏற்றுக் கொள்ளச் சொல்வது!” என்றார் மன்னர்.
“வேண்டாமே! மாதாமாதம் அதற்கானஒரு சிறு தொகையைக் கொடுத்து வந்தால் போகிறது”.
“அது நமக்குச் செலவுதானே! அதைக் கொண்டு நாமே குதிரைகளைப் போஷித்து வந்தால் போகிறது!”
“அப்படியல்ல அரசே அதனால், இபொழுது ஆகும் ஏராளமான செலவு ஆகவே ஆகாது.”
“சரி, அவர்கள் பணத்தை வாங்கிக் கொண்டு ஏப்பம் விட்டு விட்டால் என்ன செய்வது! குதிரையையும் நன்கு போஷிக்கா விட்டால்!” என்று சந்தேகத்தி கிளப்பினார் மன்னர்.
“அதற்கு நாம் இடம் கொடுக்கலாமா? குறைந்த பட்சம் மூன்று மாதங்களுக்கு ஒரு தடவையேனும் குதிரைகளைக் கொண்டு வந்து நமக்குக் காட்டிவிட்டுப் போகும்படி ஏற்பாடு செய்துவிட்டால் போகிறது”.
“அதுவும் சரியான யோசனைதான்” என்று ஒப்புக் கொண்டார் அரசர்.
மறுநாளே நகரம் முழுவதும் மக்களுக்கு இச்செய்தியைத் தெரிவித்து தண்டோரா போடப்பட்டது.
இது என்ன புது மாதிரியான ஏற்பாடாக உள்ளதே என்று வியந்து கொண்டே,ஒவ்வொருவரும் வளர்பதற்கு ஒரு குதிரையைப் பெற்றுக் கொண்டு சென்றார்கள்.
தெனாலிராமனும் அவன் பங்குக்கு ஒரு குதிரையைப் பிடித்துக் கொண்டு போனான்.
அந்தக் குதிரை பார்ப்பதற்கு வெகு அழகாய் பளபளவென்று இருந்தது! கம்பீரமாகவும் இருந்தது.
“பார்த்தீர்களா! தெனாலிராமன் மட்டும் எப்படியோ நேர்த்திக் குதிரையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டானே!” என்று அது கண்ட மற்றவர்கள் பேசிக் கொண்டார்கள். தெனாலிராமனுக்கும் அது பெருமையாகவே இருந்தது. அந்த அழகான குதிரையுடன் மார்பை நிமிர்த்திக் கொண்டு சென்றான்.
அக்குதிரையை வளர்ப்பதற்கென்று மாதம்தோறும் அரசாங்கத்திலிருந்து தவறாமல் பணம் பெற்றுக் கொண்டு சென்றான். ஆனால் அவன் குடும்பத்திற்கே செலவழித்துக் கொண்டான். குதிரையை பட்டினிப்போட்டு வளர்த்து வந்தான்.
அவன் கொல்லைப் பக்கம் ஒரு சிறு கொட்டகை போட்டான்.அதைச் சுற்றி ஐந்தரையடி உயரச் சுவர் எழுப்பினான். அதனுள் அக்குதிரையை வைத்து வளர்த்து வந்தான்.
அந்தச் சுற்றுச் சுவரில் ஒரு பக்கத்தில் மாத்திரம் ஒரு பெரிய துவாரம் செய்து வைத்திருந்தான். அந்த வழியாகத்தான் நாள்தோறும் ஒரு கைப்பிடி புல்லை தெனாலிராமன்.
லபக்கென்று அதைத் தன் வாயால் பிடுங்கிக் கொள்ளும் குதிரை! அதன் பசி அதற்குத்தானே தெரியும்!
மூன்று மாதங்கள் முடிவுற்றன.
குதிரையைக் கொண்டு வந்து காட்டும்படி எல்லோருக்கும் உத்தரவிட்டார் மன்னர்.
மக்களும் அப்ப்டியே தாங்கள் வளர்த்து வந்த குதிரைகளைக் கொண்டு வந்தார்கள்.
ஆனால் தெனாலிராமன் வளர்த்து வந்த குதிரையை மாத்திரம் அங்கே காணோம்!
“அரசே! அது பொல்லாத முரட்டுக் குதிரையாக இருக்கிறது! அதன் கிட்ட போனால் போதும் உடனே என் மேலேயே எகிறிக் கொண்டு வருகிறது. அதை வளர்பதற்கு ஏண்டா ஏற்றுக் கொண்டோம் என்று இருக்கிறது இப்பொழுது” என்றான்.
“ சரி, இபொழுது என்ன செய்யச் சொல்லுகிறாய்?”
“அரசே! தயவு செய்து அந்தக் குதிரையை, படைத்தலைவனையே அனுப்பி அழைத்து வரச் சொல்லுங்கள். நம்மாலாகாது!” என்று கைகளை உதறினான் தெனாலிராமன்.
அவனுடைய பேச்சு, அரசரை மிகுந்த வியப்பிலாழ்த்தியது. குதிரைப்படையில் இதுவரை அது மாதிரி குதிரையொன்றும் இருந்தது கிடையாது! என்று எண்ணினார் மன்னர்.
உடனே குதிரைப் படைத்தலைவனை அழைத்து தெனாலிராமனுடன் சென்று, அவன் வீட்டில் வளரும் குதிரையை அழைத்து வரும்படி சொன்னார்.
“ஏன்? என்ன விஷேசம்? நீயே அழைத்து வருவதற்கென்ன!” என்ரு விசாரித்துக் கொண்டே சென்றான் அவன்.
“என்னால் முடியவில்லை. அது பொல்லாத முரட்டுக் குதிரையாயிருக்கிறது!” என்றான் தெனாலிராமன்.
இருவரும் நேரே சென்று வீட்டிற்குள் நுழைந்தார்கள்.
“ எங்கே குதிரை? இங்கே காணோமே?” என்று தன் தாடியை உருவிக் கொண்டே அவசரப்பட்டான் அவன்.
அந்த அதிகாரியை கொல்லைப்பக்கம் அழைத்துக் சென்றான் தெனாலிராமன். “இதோ பாருங்கள். இந்தக் துவாரத்தின் வழியாய் உள்ளே பாருங்கள் குதிரை தெரியும்”.
என்ன ஐயா இது! குதிரையை இப்படி வளர்த்தால் எப்படி என்னத்துக்காகும்?” என்று வெகுண்டான் அவன்.
“என் மேல் கோபப்பட்டு என்ன செய்வது! அதனுடைய முரட்டுத் தனத்துக்கு அஞ்சித்தான் அப்படி வளர்க்க வேண்டியதாயிற்று தெரியுமா? இல்லாவிட்டால் நான் இப்படியா குதிரையை வளர்ப்பேன்?” என்றான் தெனாலிராமன்.
“ சரி, சரி, உனக்கென்று ஒரு குதிரை கிடைத்ததே. இதோ நானே பார்க்கிறேன்!” என்று மெதுவாய் அந்தத் துவாரத்தின் வழியாய் தன் தலையை உள்ளே விட்டான் அந்த அதிகாரி.
அவ்வளவுதான்! அந்த நேரம் அந்தக் குதிரைக்கு வழக்கமாக புல் கொடுக்கும் நேரம். கேட்கவா வேண்டும்!
குதிரை அந்த அதிகாரியின் தாடியை புல் என்று எண்ணி லபக்கென்று தன் வாயால் பற்றிக் கொண்டது.
“ஐயோ! ஐயோ! என்று அலறினான் அவன். அந்தக் குதிரையோ தன் பிடியை விடுவதாகக் காணோம்! அவன் அலற, அது இழுக்க! அது ஒரு சங்கடமான நிலை!
இந்தச் செய்தி உடனே அரண்மனைக்கு எட்டியது. மன்னரும் மற்றும் சிலரும் உடனே ஓடி வந்தனர் அங்கே.
அந்த அதிகாரியின் அவல நிலையைக் கண்டு எல்லோரும் பரபரப்புற்றனர். பக்குவமாய் அந்த அதிகாரியை விடுவிக்க எப்படி எப்படியோ முயற்சி செய்தார்கள். முடியவேயில்லை. அதே சமயம் அந்த அதிகாரியின் அலறலைக் கேட்கப் பரிதாபமாகவும் இருந்தது. என்ன செய்வது?
கடைசியாக ஒரு கத்திரிக் கோலைக் கொண்டு வந்து அதிகாரியின் தாடியை அடியோடு வெட்டி அவரைக் குதிரையிடமிருந்து விடுவிக்க வேண்டியதாயிற்று.
எத்தனை வருஷமாகக் கவனமாகக் செப்பனிட்டு வளர்த்து வந்த தாடி இப்படியா பறி போக வேண்டுமா!
அதன் பிறகு சுற்றுச் சுவரை இடித்துத் தள்ளினார்கள். உள்ளே நிற்கக் கூட ஜீவனின்றி எலும்பும் தோலுமாய் இருந்த குதிரையைக் கண்டு அரசர் மிகவும் கோபப்பட்டார்.
“நான் என்ன செய்யட்டும் அரசே! இந்த நிலையிலேயே அந்தக் குதிரை அவருடைய தாடியைப் பற்றிக் கொண்டு விட மறுத்தது. நான் இன்னும் அதை மிகுந்த போஷாக்குடன் வளர்த்திருந்தால் இன்னும் என்னென்ன செய்திருக்குமோ! யோசித்துப் பார்த்தீகளா!” என்று மிகுந்த தாழ்மையுடன் சொன்னான் தெனாலிராமன்.
அதை கேட்ட மன்னருக்கு குபீர் என்று சிரிப்பு வந்துவிட்டது.மற்றவர்களும் சிரித்தனர்.