பாத்திரங்கள் குட்டி போட்டன!!

விருபாட்சன் வெளியூரிலிருந்து விஜயநகரத்திற்கு பிழைக்க வந்தவன். ஏதேதோ தொழில் செய்து பார்த்தான் ஒன்றும் சரிபட்டு வரவில்லை.

பிறகு மனைவியின் நகைளை நல்ல விலைக்கு விற்று பணமாக்கிக் கொண்டு, லேவாதேவிக்காரனானான். “நான் அப்படியொன்றும் அதிக வட்டி வாங்க போவதில்லை. ஒரு ரூபாய்க்கு அரை ரூபாய் வட்டியாகக் கொடுத்தால் போதும்.” என்றான்

அதனால் அவன் வியாபாரம் குறைந்ததா என்ன? வானம் பொய்த்து விட்டது; வெகு நாட்களாக மழையில்லை. குடியான மக்கள் என்ன செய்வார்கள்!

வீட்டிலுள்ள பண்டம் பாத்திரங்களைக் கொண்டு அடகு வைத்து விருபாட்சனிடம் பணம் வாங்கிக் கொண்டு போனார்கள். அங்கிருந்த ஏழைக் குடியானவர்கள் அவசரத்துக்கு அவனிடம் கடன் வாங்கிக் விட்டு மிகவும் துன்பப்பட்டார்கள்.

கடனைத் திருப்பிக் கொடுக்கும் சமயத்தில் “ஏதோ கொஞ்சம் வட்டியைத் தள்ளிக் கொடுத்தால் தேவலை!” என்று கெஞ்சினால் போதும்!

உடனே “மொலு மொலு” வென்று பிடித்துக் கொள்வான் விருபாட்சன்.

“ஏன்! பணத்தைக் கொண்டு தானே ஆடுமாடுகள் வாங்குகிறீர்கள். அவையெல்லாம் தவறாமல் குட்டி போடுகிறதல்லவா!

“இப்பொழுது வட்டியைக் குறைத்துக் கொள்ளுங்கள் என்று எப்படி கேட்கிறீகள்? முடியவே முடியாது. நான் கொடுத்த பணம் குட்டி போடுகிறது. அதுதானே!” என்று கண்டித்துப் பேசி வட்டியும் முதலுமாக ஒரு பைசா கூடத் தள்ளுபடி செய்யாமல் கறந்து விடுவான்.

அவனிடம் கடனைத் தீர்ப்பவர்கள் எல்லாம் கண்ணைத் துடைத்துக் கொண்டுதான் செல்வார்கள்.

இந்தக் கொடுமை தெனாலிராமன் காதில் விழுந்தது. எப்படியும் விருபாட்சனைப் படுகுழியில் தள்ள வேண்டும் என்று திட்டமிட்டான். உடனே குடியானவர்கள் வசிக்கும் இடத்திற்குச் சென்றான். அவரவரவர்களை விசாரித்தான்.

ஏதோ அவசரத்துக்கு அந்த ஆள் பணம் கொடுத்து உதவி செய்வது உண்மைதான். ஆனால் ஏகப்பட்ட வட்டி வாங்குகிறார். யாரும் அவரைக் கேட்பாரில்லை. அந்த ஆள் நம் ஊரில் குடியேறி இன்னும் முழுதாக ஒரு வருஷம் கூட ஆகவில்லை. அதற்குள் வண்டி வாகனம் என்றும் மாட மாளிகைகள் என்றும் சேர்த்து விட்டார். எல்லாம் நாங்கள் கொடுக்கும் வட்டி பணம்தான் என்று குமுறினார்கள்.

அப்படி அவன் வட்டி வங்கியும் எல்லோரும் அவனிடம் தான் போய் விழுகிறீர்கள்! ஏன்! உங்களுக்குள் ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டு வாழக் கூடாதா? என்றான் தெனாலிராமன்.

அப்படி முடியவில்லையே! ஏதோ வாய்க்கும் கைகுமாகத் தானே வாழ முடிகிறது என்று முறையிட்டார்கள்.

சரி இந்தக் கொடுமையை தவிர்க்க ஏதேனும் ஏற்பாடு செய்வோம்! என்று சொல்லி வீடு திரும்பினான் தெனாலிராமன்.

அப்பொழுது  அவன் கொல்லைகுப் பக்கத்துக் குடியானவன் குப்புராமன் வீட்டு பக்கமாகச் சென்றான். அவனையழைத்து வைத்து குசலம் விசாரித்தான் தெனாலிராமன்.

“ஏதோ குடும்பம் நடந்தேறுகிறது! ஆனால் நான் இந்த விருபாட்சனிடம் மாட்டிக் கொண்டு திண்டாடுகிறேன். அதுதான் ஒரே கஷ்டமாக இருக்கிறது” என்றான்.

என்னதான் அவன் அடிக்கடி கடன் கொடுத்து வாங்கினாலும், இப்படி கொள்ளை வட்டி வாங்குகிறானே என்ற மனத்தாங்கல் குப்புராமனுக்கு இல்லாமல் இருக்குமா?

உடனே தெனாலிராமன் அவனை அருகில் அழைத்து அவன் காதோடு இரகசியம் பேசினான். அதாவது தன் திட்டத்தை எவருக்கும் விவரிக்காமலிருக்கும்படி அப்படி விசாரித்தான்.

“சரி, அப்படியே செய்வோம்” என்று தெனாலிராமன் திட்டத்திற்கு உடனே சம்மதித்தான் குப்புராமன்.

அந்த வாரத்திலேயே குப்புராமனுடைய மகளுக்குத் திருமணம் கூடிற்று. அதற்காக விருபாட்சனிடம் பணம் கடன் வாங்கியதோடு பெரிய பெரிய பித்தளைப் பாத்திரங்களும் வாடகைக்கு வாங்கினான்.

ஜாம் ஜாம் என்ரு கல்யாணம் நடந்தது. தெனாலிராமனே நேரில் சென்று மணமக்களை ஆசிர்வதித்து வந்தான். அப்படியே குப்புராமனை அருகில் அழைத்து ”நம் திட்டம் ஞாபகம் இருக்கா?” என்றான். ‘’ஓ! அப்படியே செய்து விடுகிறேன்” என்றான் குப்புராமன்.

திருமணம் முடிந்த மறுநாளே வாங்கிபோன பாத்திரங்களை விருபாட்சனிடம் திருப்பிக் கொடுக்க வந்தான் குப்புராமன்.

அப்பொழுது- தெனாலிராமன் திட்டத்தின்படி ஒவ்வொரு பெரிய பாத்திரத்தோடு ஒரு சிறிய பாத்திரத்தையும் கணக்கிட்டு வரிசையாக வைத்தான் குப்புராமன்.

அவற்றைப் பார்த்த விருபாட்சன், “இதேல்லாம் என்ன! இந்த சின்ன பாத்திரங்களை எல்லாம் என்னிடமிருந்து எடுத்துப் போகவில்லையே நீ” என்றான்.

அது கேட்டுச் சிரித்துக் கொண்டான் குப்புராமன்.

“வாங்கிப் போகவில்லைதான். ஆனால் அவை உங்களுடையவைதாம்” என்றான்.

“எப்படி அது! என்னிடமிருந்து வாங்கவில்லை என்கிறாய். பிறகு அவை எப்படி என்னுடையதாகும்!”

சரி, இப்படி அருகில் வாருங்கள் விளக்குகிறேன்” என்று விருபாட்சனை அருகில் அழைத்து தணிந்த குரலில் பேசினான் குப்புராமன்.

“உங்களிடமிருந்து வாங்கிக் கொண்டு போன பொழுது பெரிய பாத்திரங்கள் எல்லாம் சினையாய் இருந்திருக்கும் போலிருக்கு! அதை நீங்களும் கவனிக்கவில்லை. நானும் கவனிக்கவில்லை.

“வீட்டில் கொண்டு போய் அடுப்பில் ஏற்றியதும் அவை ஒவ்வொன்றும் சிறு சிறு பாத்திரங்களாகக் குட்டி போடத் தொடங்கிவிவிட்டன. அவைதான் இவை. உங்கள் பாத்திரம் குட்டி பொட, அவற்றை நான் எடுத்துக் கொல்வது நன்றாயிருக்குமா?

அதனால் அவையனைத்தையும் உங்களுக்கே கொண்டு வந்துவிட்டேன்” என்றான்.

“அப்படியா அது! என்று ஆச்சரியப்பட்டான் விருபாட்சன். உடனே சமாளித்துக் கொண்டு,

ஆமாம், ஆமாம். அந்தப் பெரிய பாத்திரங்கள் எல்லாம் சினையாகத்தான் இருந்தன. நான் கொடுத்தபொழுது சொல்ல மறந்தே போனேன்! ஏதோ நீ நல்லவன்! குட்டி போட்டதையெல்லாம் கொண்டு வந்திருக்கிறாய்!” என்று சமாளித்துக் கொண்டான் விருபாட்சன்.

குப்புராமன் அனைத்தையும் ஒப்படைத்துவிட்டு எழுந்திருந்த பொழுது, ”அது சரி! இவற்றுக்கான இரண்டு நாள் வாடகை எங்கே!” என்றான் விருபாட்சன்.

எடுத்துப் போய் ஒன்றைரை நாட்கள் தாமே ஆகின்றன. இரண்டு நாட்களுக்கு வாடகை கேட்கிறீர்களே!”

“இங்கு அரை நாள் என்றெல்லாம் கணக்கு கிடையாது. எல்லாம் முழுநாள்தான்” என்று சொல்லி அவனிடமிருந்து இரண்டு நாட்களுக்கு வாடகையைக் கறந்து கொண்டுதான் அனுப்பிவைத்தான் விருபாட்சன்.

உடனே அந்தப் பெரிய பாத்திரங்களோடு சிறிய பாத்திரங்களையும் சேர்த்து எடுத்துக் கொண்டு போய், பத்திரமாக அறை மூலையில் அடுக்கி வைத்தான்.

இது மாதிரி எத்தன பேருக்குச் சினை பாத்திரங்களை வாடகைக்கு கொடுத்தோமொ! இப்பொழுது இவன் கொடுத்ததனால்தான் விஷயம் தெரிய வந்தது நமக்கு என்று எண்ணி பெருமூச்சு விட்டான் விருபாட்சன்.

குப்புராமன் நேரே தெனாலிராமன் வீட்டிற்கு வந்தான். நடந்த விஷயத்தைத் தெரிவித்தான்.

“இதில் ஒன்றும் விசேஷமில்லை பாத்திரங்கள் குட்டி போட்டதை அவன் நம்பும்படியாகச் செய்தாய் அல்லவா? அடுத்தத் தடவை பார்த்துக் கொள்வோம் அதுவரை விஷயம் இரகசியமாக இருக்கட்டும்.

“நீ அந்தச் சின்ன பாத்திரங்களை வாங்க என்ன செலவழித்தாயோ அதைப் பொன்று இரட்டிப்புப் பணம் வாங்கித் தருகிறேன் அஞ்சாதே!” என்று தைரியம் சொல்லி குப்புராமனை அனுப்பிவைத்தான் தெனாலிராமன்.

அடுத்த மாதத்திற்குள்ளாகவே மறுபடியும், விருபாட்சனிடம் சென்றான் குப்புராமன், “ வா அப்பா என்ன விசேஷம்?” என்று அன்போடு விசாரித்தான்.

“என் மகளுக்கு ஏதோ கிரக தோஷமாம். அதை போக்குவதற்கு பெரிய யக்ஞம் ஒன்று ஏற்பாடு செய்து விட்டேன். அதற்கு இப்பொழுது சில தங்கப் பாத்திரங்களும், வெள்ளி பாத்திரங்களும் தேவைப்படுகிறது. நீங்கள்தாம் கொடுத்து உதவி செய்யவேண்டும். அதற்கு என்ன வாடகையோ, அதை நான் கொடுத்து விடுகிறேன்” என்றான்.

அது கேட்ட விருபாட்சனுக்கு உள்ளூற மகிழ்ச்சி ஏற்பட்டது!

“இருந்தும் பொன், வெள்ளி பாத்திரங்களை நான் வாடகைக்குக் கொடுப்பதில்லையே! ஆனால் என்னையே நம்பி வந்துவிட்டதால் உனக்கு பொன், வெள்ளி பாத்திரங்களை இப்பொழுது தருகிறேன். ஆனால் சீக்கிரத்தில் யக்ஞம் முடிந்ததும் திருப்பிக் கொடுத்து விடவேண்டும். ஜாக்கிரதை?” என்றான்.

“ஆகா! அப்படியே செய்கிறேன். அங்கு காரியம் முடிந்ததும் அந்த நொடியிலேயே நீங்கள் கொடுக்கும் பொன், வெள்ளி பாத்திரங்களைத் கொண்டு வந்து கொடுத்து விடுகிறேன். என்னை நம்புங்கள்” என்றான் குப்புராமன்.

உடனே உள்ளே சென்றான்.அறையிலிருந்த பொன், வெள்ளி பாத்திரங்கள் அனைத்தையும் அப்படியே வாரிக் கொண்டு வந்து கொடுத்தான் விருபாட்சன்.

அத்தனையும் புதுப் பாத்திரங்கள்! அவற்றின் அழகு குப்புராமனின் கண்களைப் பறித்தன.

“இதோ பார். இவையனைத்தும் பெருத்துக் காண்கின்றன பார்த்தாயா! அத்தனையும் நிறை கர்ப்பமாக உள்ளன. நிச்சயம் நாளைக்கே குட்டி போட்டு விடும். மறக்காமல் அவற்றையும் கொண்டு வந்து கொடுத்துவிடு” என்றான் விருபாட்சன்.

அதென்ன அப்படிச் சொல்கிறீர்கள்! முன்பு நீங்கள் சொல்லியா கொண்டு வந்தேன்!” என்று தன் நேர்மையை நினைவூட்டிக் கொண்டே அத்தனை பொன், வெள்ளி பாத்திரங்களையும் மூட்டைக் கட்டிக் கொண்டு புறப்பட்டான் குப்புராமன்.

அவன் வார்த்தைகளைக் கேட்டதும், மற்றொரு சபலம் எழுந்தது விருபாட்சன் மனதில்.

“இதோ வந்தேன் இரு” என்று சொல்லி உள்ளே ஓடினான். அலமாரியில் பத்திரமாக வைத்திருந்த கெம்பும் மரகதமும் வைத்து இழைத்திருந்த தங்கச் செம்பு ஒன்றைக் கொண்டு வந்தான்.

“யக்ஞத்தில் கலசம் வைக்க செம்பு அவசியம் வேண்டும். முதலில் மறந்து விட்டேன். இப்பொழுதுதான் நினைவுக்கு வந்தது. ஜாக்கிரதையாகத் துணியைச் சுற்றி எடுத்துக் கொண்டு போ! யார் கண்ணிலாவது பட்டுவிட போகிறது. இது ஒன்றே இலட்ச ரூபாய் மேல் பெறும்!” என்று சொல்லி கொடுத்தான்.

குப்புராமனும் அதை இரண்டு கரங்களாலும் வாங்கி மார்போடு அணைத்துக் கொண்டான்.

“ஜாக்கிறதை இதுவும் சினையாய்த்தானிருகிறது” என்று சொன்னான்.

“உங்கள் மேலான உதவிக்கு மிக்க நன்றி. எங்கேயோ வெளியூரிலிருந்து வந்து இங்கு குடியேறிய நீங்கள், எங்களுக்கு எத்தனையோ உதவியாக இருக்கிறீர்களே! என்னே உங்கள் தாராள குணம்” என்று விருபாட்சனைப் புகழ்ந்து போற்றிக் கொண்டே புறப்பட்டான் குப்புராமன்.

நேரே தெனாலிராமன் வீட்டுக்குத்தான் வந்தான் குப்புராமன். தெனாலிராமனும் வீட்டில் இவனுக்காகத் தயாராகக் காத்துக் கொண்டிருந்தான்.

“சரியான் ஆளையா நீ! அவனிடமிருந்த அத்தனை பொன், வெள்ளி பாத்திரங்களையெல்லாம் கொண்டு வந்துவிட்டாயே என்று சொல்லி சிரித்துக் கொண்டே அவையனைதையும் வாங்கி பத்திரமாகப் பெட்டியில் வைத்துப் பூட்டினான்.

“இனிமேல் அந்த விருபாட்சன் கடைப்பக்கமோ அல்லது வீடுப் பக்கமோ, தலையை கட்டாதே! அவனே பாத்திரங்களை வாங்கிப் போக உன் வீடேறி வருவான்.  .

“அப்பொழுது நான் சொன்னது போல நடந்து  கொள். அதன்பிறகு நான் இருக்கவே இருக்கிறேன் உனக்குப் பக்க துணையாக!” என்று சொல்லியனுப்பினான்.

ஒரு நாளாயிற்று; இரண்டு நாளாயிற்று; இன்னும் குப்புராமனைக் காணோமே! அன்றைய தினமே திருப்பிக் கொண்டு வந்து விடுவேன் என்று கூறியவன் இன்னும் வரவில்லை என்றால் எப்படி?

இலட்சக்கணக்கான தொகை பெறுமான பாத்திரங்களைக் கொடுத்துவிட்டு அவனால் எப்படி சும்மாயிருக்க முடியும்.

குட்டிபோட்ட பூனைபோல் வாசலுக்கும் உள்ளுக்குமாக நடந்தான் விருபாட்சன்.

உடனே குப்புராமன் வீடு தேடி வந்து விட்டான் விருபாட்சன்.

“என்னயா இது! யக்ஞம் முடிந்ததும் அடுத்த நொடியிலேயே திருப்பிக் கொண்டு வருவதாய் சொன்னாயே! இப்பொழுது இரண்டு நாட்களாகி விட்டதே! ஏன் மறந்து போய்விட்டாயா! எடு, எடு சீக்கிரம் பாத்திரங்களை எடு!” என்று அவசரப்பட்டான்.

“அந்த வயிற்றெரிச்சலை ஏன் கேட்கிறீகள்! உட்காருங்கள், நிற்கிறீர்களே” என்று ஒரு பாயை விரித்து விருபாட்சனை உட்கார வைத்தான்.

“நீங்கள் சொன்னது போலவெ அந்தப் பொன், வெள்ளி பாத்திரங்கள் அனைத்தும் சினையாகவே இருந்தன…”

“ஆமாம். ஆமாம் அது தெரிந்துதான் நானே சொன்னேன்” யக்ஙம் நடந்து கொண்டிருந்த பொழுதே அவை குட்டி போடத் தொடங்கிவிட்டன.      

“ஆனால் கஷ்டபிரசவம், ஒவ்வொன்றும் குட்டி பொட முடியாமல் பட்பட்டென்று செத்துவிட்டன. அப்படியே சாம்பலாகவும் ஆகிவிட்டன. அதோ பாருங்கள், மூலையில் குவித்திருக்கிறேன் சாம்பலை. உங்கள் பொன், வெள்ளி பாத்திரங்களின் கதி இப்படியாகிவிட்டது.

“இந்த துக்கச் செய்தியை உங்களிடம் எப்படி வந்து சொல்வது என்று இத்தனை நாட்களாய் மென்று விழுங்கிக் கொண்டிருக்கிறேன்.

“இதோ நீங்கள் இப்பொழுது என் வீடேறீ வந்துவிட்டீகள்” என்று கையைப் பிசைந்து கொண்டு நின்றான்    குப்புராமன்.

அவன் வார்த்தைகளைக் கேட்டதும் ‘சொரேல்’ என்றது விருபாட்சனுக்கு. யாரோ தன் உச்சந்தலையைத் தாக்கினாற் போலிருந்தது. கண்களிலிருந்து பொறிகள் பறந்தன.

“என்னடா இது! கதை அளக்கிறே! பாத்திரங்களாவது சாவதாவது” என்று இரைச்சல் போட்டான்.

“நம் வீட்டில் பிரசவமாக முடியாமல் தாய் இறந்து போவதில்லையா! அது மாதிரிதான். இது ஒன்றும் பொய் சமாசாரம் இல்லையே!” என்று சாவகாசமாய் எவ்வித பரபரப்புமின்றி பேசினான் குப்புராமன்.

“அது எல்லாம் எனக்குத் தெரியாது” என்று அவன் கரத்தைப் பிடித்து இழுத்துக் கொண்டு அரசரிடம் ஓடிவந்தான் விருபாட்சன்.

மன்னர் அவ்வழக்கை விசாரித்தார். அவருக்கே ஆச்சரியமாகத்தான் இருந்தது. என்னடா குப்புராமா! பாத்திரங்கள் எங்கேயாவது குட்டி போடுவதுண்டோ? மிகவும் வியப்பாயிருக்கிறதே!” என்றார்.

“அரசே! அவரையே கேட்டுப் பாருங்கள். அவருடைய பணமும் பித்தளைப் பாத்திரங்களும் குட்டி போட்டனவா இல்லையா என்று!”

“அவர் கொடுக்கும் பொழுதேதான் அத்தனையும் சினையாக உள்ளன என்று சொல்லிக் கொடுத்தாரே!” என்றான் குப்புராமன்.

அந்தச் சமயம் பார்த்து, வெடுக்கென்று உள்ளேயிருந்து வந்தான் தெனாலிராமன்.

“ஆம் அரசே! அவன் சொல்வது அனைத்தும் உண்மைதான். எப்பொழுதும் விருபாட்சனின் பணமும் சரி, பாத்திரங்களும் சரிகுட்டி போடுகிற பழக்கமுண்டு” என்று சொன்னான்.

உடனே “என்ன விருபாட்சா! இவர்கள் சொல்வதையெல்லாம் கேட்டாயா?” என்றார் அரசர்.

அப்பொழுது அவன் தலைகுனிந்து நின்றான்.

“பிறகு இந்த வழக்கை கொண்டு வந்திருக்கவே வேண்டாமே! பிரசவிக்க முடியாமல் சில தாய்மார்கள் இவ்வுலகில் இறந்து போவது சகஜம்தானே!”   

“இந்தத் தடவை குப்புராமன் சொன்னது போல் உன் பாத்திரங்களுக்கும் அதே கதி ஏற்பட்டுவிட்டாற் போலிருக்கிறது. என்ன செய்வது! அது ஆண்டவன் செயல்!” என்று தீர்ப்புக் கூறினார் அரசர்.

அது கேட்டு அங்கிருந்தவர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.

அப்பொழுது விருபாட்சன் கண்களிலிருந்தும் நீர் தாரை தாரையாக வழிவதைப் பார்த்த தெனாலிராமன் “நீ வட்டியை கொஞ்சம் தள்ளிக் கொடுக்க முடியாது என்று சொன்ன பொழுது குடியானவர்கள் கண்களில் நீர் வழிந்ததைப் பார்க்க வில்லையா!” என்று அவனை இடித்துப் பேசிக் கொண்டே அத்தனைப் பொன், வெள்ளி பாத்திரங்களையும் அரசர் முன் கொண்டு வந்து அடுக்கினான் தெனாலிராமன். அது கண்ட அங்கிருந்த அனைவரும் ஆச்சரியப்பட்டார்கள்.

அப்பொழுது தெனாலிராமன் அதுவரை நடந்த கதையனைத்தையும் ஆதியோடந்தமாகச் சொல்லி முடித்தான்.

“தெனாலிராமா! இவையெல்லாம் உன் வேலைதானா? உன்னால் அனைவரையும் சிரிக்க வைக்கத்தான் தெரியும் என்று, எண்ணியிருந்தேனே! இது மாதிரி வேலைகளையும் உன்னால் செய்ய முடியுமா! பேஷ். விருபாட்சனுக்கு சரியாக பாடம் கற்பித்துள்ளாய்” என்றார் அரசர்.

“அரசே! முதலில் குட்டி போட்டதாகச் சொல்லி கொடுத்த சிறிய பாத்திரங்களின் விலை என்னவோ, அதே மாதிரி இரட்டிப்பு விலையை குப்புராமனிடம் கொடுத்துவிட்டு, இந்தப் பாத்திரங்களையெல்லாம் எடுத்துப் போகச் சொல்லுங்கள்” என்று கேட்டுக் கொண்டான்.

அவ்வண்ணமே விருபாட்சன் இடுப்பிலிருந்து முடிச்சையவிழ்த்து பணத்தையெண்ணி, குப்புராமனிடம் கொடுத்துவிட்டு பொன், வெள்ளி பாத்திரங்களை வாரிக் கொண்டு போனான் விருபாட்சன். அப்பொழுது அவன் வதனத்தில் சந்தோஷம் வழிந்தது.

“தெனாலிராமா! அது ஏன் இரட்டிப்பு விலை கேட்டாய்” என்றார் அரசர்.

“அவற்றை வாங்க நான்தானே பணம் கொடுத்தேன். அதற்கு வட்டி வேண்டாமா?” என்றான் தெனாலிராமன். அது கேட்டு அங்கிருந்தோர் அனைவரும் ‘கொல்’லென்று சிரித்தார்கள்.

அதன் பிறகு விருபாட்சன் ஒரு ரூபாய்க்கு அரை வட்டி வாங்குவதை அடியோடு நிறுத்திவிட்டான். ஆனால் ஒரு ரூபாய்க்கு ஒரு பைசா என்று வட்டி வாங்கத் தொடங்கினான். மிகவும் ஏழையாயிருந்தால் அந்த வட்டியைக் கூட தள்ளுபடி செய்தான்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply