குழந்தைகளுக்கான சிறுகதை - பழைய பனம்பழம் தானே!

அந்த விகட கவியின் பெயர் ‘ராமகிருஷ்ணடு!’ ஆனால் அவன் தெனாலியில் பிறந்ததால் அந்த ஊரின் பெயரும் ஒட்டிக் கொண்டுவிட்டது. அதனால்தான் ‘தெனாலிராமன்’ ஆனான்.

ஒரு சாதாரண ஏழைக் குடும்பத்தில் பிறந்தவந்தான் அவன்! ஆனால் இயற்கையிலேயே புத்திசாலிப் பையன். அவனோடு சேர்ந்து விளையாட அவன் வசித்த தெரு பிள்ளைகள் அனைவரும் அவனிடம் போட்டிப் போட்டுக் கொண்டு ஓடி வருவார்கள்.

அவன்பால் அத்தனைப் பிரியம் அவர்களுக்கு.

மற்றவர்களைச் சிரிக்க வைக்கும் பழக்கம் அவனிடம் இயற்கையாவே அமைந்திருந்தது. அதன் பிறகு கேட்க வேண்டுமா? அவ்வூர் பிள்ளைகள் எங்கு கும்பலாய்க் கூடி நின்று கொல்லென்று சிரிக்கிறார்களோ அங்கெல்லாம் தெனாலிராமன் இருப்பான். அவசியம் இருப்பான்.

மற்றவர்களை சிரிக்க வைப்பதற்கென்று வேறு எதையோ தோடிக்கொண்டு போகமாட்டான். அவன் இருக்கும், அவன் அப்பொழுது பார்க்கும் பொருளையோ, சூழ்நிலையையோ தன் சிரிப்புக்குப் பயன்படுத்திக் கொள்வான். அது இயற்கையாகவும் அமைந்துவிடும்.

“உனக்கு மட்டும் எப்படிடா மற்றவர்களை சிரிக்க வைக்க முடிகிறது?” என்றுகூட பிள்ளைகள் கேட்பதுண்டு. அதற்குச் சரியான பதில் அவனுக்குச் சொல்லத் தெரியவில்லை! நான் சொல்லுவதை கேட்டு நீங்களும் அப்படிச் சொல்லலாமோ, மற்றவர்கள் சிரிப்பார்களே! என்பான். அது எப்படி என்பார்கள். அவ்வளவுதான்.

வயது ஆக ஆக நெடுநெடுவென்று வளர்ந்துவிட்டான் தெனாலிராமன். ஆனால் பிழப்பு ஒன்றும் கிடைக்கவில்லையே!

அந்த ஊருக்குப் புதிதாய் ஒரு சந்நியாசி வந்திருந்தார். ஜடா முடியுடன் கையில் தண்டும் கமண்டலமும் வைத்துக் கொண்டு பரமஞானியாய் விளங்கினார் அவர்.

அங்கு அவர் வந்த நாளிலிருந்து, மழை கொட்டு கொட்டு என்று கொட்டத் தொடங்கிவிட்டது.

அநேக ஆண்டுகளாக மழைக்காக ஏங்கிக் கிடந்த அவ்வூர் மக்களுக்கு மட்டற்ற மகிழ்ச்சி.

அந்தச் சந்நியாசியைப் போற்றினர்; புகழ்ந்தனர். ‘மகா புண்ணியவனாக இருக்க வேண்டும். அதனால்தான் அவர் நம் ஊருக்கு வந்ததிலிருந்து மழை பெய்யத் தொடங்கியது’ என்று மகிழ்ச்சி பேசிக் கொண்டார்கள்.

ஆனால் தெனாலிராமனுக்கோ, மக்களுடைய அந்தப் பேச்சு பிடிக்கவேயில்லை.

ஒருநாள் அவன் அவ்வூர் சாலையோரமாகப் போய்க் கொண்டிருந்த பொழுது, வழியில் ஒரு சிறு கும்பலைக் கண்டான்; கூடவே எட்டிப் பார்த்தான். அங்கு அந்த சந்நியாசி அமர்ந்திருப்பதைக் கண்டான்.

“அடடா! இவரைத்தானே நாம் பார்க்க வேண்டும் என்று இருந்தோம்!” என்று அங்கேயே தங்கிவிட்டான்.

ஊரிலுள்ள அச்சந்நியாசியை வணங்கி, ஆசிர்வாதம் பெற்றுச் சென்றனர். சிலர் பழங்களைக் கொண்டுவந்து கொடுத்து அவரை உபசரித்தனர்.

சற்று நேரத்தில் கூட்டம் குறைந்தது. அப்பொழுது அவர் அருகில் சென்றான் தெனாலிராமன். அவரைப் பார்த்து வெடுக்கென்று ‘பழைய பனம் பழம்தானே!’ என்றான். அது கேட்ட அச்சந்நியாசி புன்னகை புரிந்துகொண்டார். ‘எதற்காக இப்படி கேட்கிறான் இந்தப் பையன்!’ என்று யோசித்துப் பார்த்தார். அவருக்கே ஒன்றும் புரியவில்லை.

அப்பொழுது அங்கு இருந்த சிலரும் என்ன கேட்கிறான் இவன்? என்று தெனாலிராமனை பார்த்து ஆச்சரியத்துடன் பயந்து நின்றனர்.

“நீங்கள் விழிப்பதைப் பார்த்தால் அந்தக் கதை உங்களுக்கு தெரியாது போலிருக்கு!” என்று தனக்குத்தானே சொல்லிக் கொண்டான். பிறகு அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினான்.

“ஒரு பனை மரத்தின் மீது காகம் ஒன்று உட்கார்கிறது, உடனே அந்த மரத்திலிருந்து பனம்பழம் ஒன்று தொப்பென்று கீழே விழுந்தது.

அதக் கண்ட மக்கள் ‘அந்த காகம் அப்படி உட்கார்ந்ததனால்தான். அந்த பனம் பழம் கீழே விழுந்தது என்று பேசிக் கொண்டார்கள்.

“ஆனால், உண்மையில் நடந்தது என்ன தெரியுமா? அந்தப் பழம் நன்கு பழுத்து, கீழே விழ இருந்தது. அந்தச் சமயம் பார்த்து காகம் அங்கு போய் உட்கார்ந்திருக்கிறது!” என்ரு அதை விளக்கினான் அவன்.

“அதே போன்று நீங்கள் இங்கே வந்ததற்கும், மழை பொழிந்ததற்கும் முடிச்சு போட்டு மக்கள் இங்கு பேசி மகிழ்கிறார்கள்!

“அதற்காகத்தான் கேட்டேன், உங்களை பழைய பனம் பழம்தானே என்று”! இவ்வாறு சொல்லி சிரித்தான் தெனாலிராமன். அச்சந்நியாசியும் கலகலவென சிரித்துக் கொண்டார்.

ஆனால் அங்குள்ள மற்றவர்களோ ‘கசமுச’ என்று ஏதோ பேசிக் கொண்டு சென்றுவிட்டனர்.

அதன் பிறகு தெனாலிராமனை அழைத்து, தன் பக்கத்தில் உட்கார வைத்துக் கொண்டார் அச்சந்நியாசி.

“குழந்தாய்! நீ நிரம்ப புத்திசாலியாக உள்ளாயே! மகா காளியின் ஆசிவாதத்தை பெற்றால் இன்னும் திறமைசாலியாக ஆவாய் நீ!” என்று அவன் முதுகை தன் கையினால் அன்பாகத் தடவிக் கொடுத்தார்.

அப்பொழுது தெனாலிராமனுக்கு என்னவோ போலிருந்தது. இது மாதிரியான ஆறுதல் மொழிகளை இதுவரை அவனிடம் யாரும் பேசினதில்லை.

அப்பொழுதே “அதோ காளி கோயில் தெரிகிறது பார், இன்று இரவே அங்கு செல், மகா காளியை மனதில் இறுத்துக் கொண்டு நான் சொல்லிக் கொடுக்கும் மந்திரத்தை ஆயிரத்து எட்டு தடவை உச்சரிக்க வேண்டும்.

உடனே மகா காளி பிரசன்னமாவாள். ஆனால் அவள் உருவைக் கண்டு மாத்திரம் பயந்து போகாதே! மிகவும் தைரியமாக இரு.

“வேடிக்கை விளையாட்டு மிக்க புத்திசாலி என்றால் மகா காளிக்கு மிகவும் பிரியம். அபப்டியே அவள் ஆசிர்வாதத்தை பெற்று வா!” என்றார்.

“ஓ! அப்படியே செய்கிறேன்!” என்றான்.

“உன்னுடைய முகப்பொலிவில் உன் புத்தியின் மேம்பாடு பளிச்சிடுவதைக் கண்டு, உன்னிடம் இதைச் சொல்லத் தோன்றியது எனக்கு!” என்றார் சந்நியாசி.

 தெனாலிராமனும் அப்பொழுது மிகவும் பணிவு காட்டினான்.

உடனே அவனுக்கு அந்த மந்திரத்தையும் மிக்க சிரத்தையுடன் சொல்லிக் கொடுத்தார் அச்சந்நியாசி.

தெனாலிராமனும் மிக்க பக்தி சிரத்தையுடன் அம்மந்திரத்தை மனதிலேற்றிக் கொண்டான்.

உடனே அவனை ஆசிவதித்துவிட்டு, காட்டுகுச் சென்றுவிட்டார் அச்சநியாசி.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply