பரிசுக்காக கட்டிய வீடு – தெனாலி ராமன் கதைகள்

வழக்கப்படி தெனாலிராமன் அன்று அரண்மனைக்கு வந்த பொழுது சற்று மிடுக்காக இருந்தான். கழுத்தில் நீளமான உத்திரியம் தொங்கியது. கை விரல்களில் பளிச்சென்ற மோதிரங்கள். அவன் பார்க்கும் பார்வையிலேயே ஒருவித போலி கம்பீரம் நிழலாடியது.

அரசரும் கவனித்தார் அதை!

“என்னடா தெனாலிராமா! என்னிடம் அவ்வப்பொழுது பரிசு வாங்கி பரிசு வாங்கி நிறையப் பண்ம் சேர்த்துவிட்டாய் போலிருக்கிறதே!” என்றார் மன்னர்.

“எதைச் கொண்டு அப்படி சொல்கிறீர்கள்?”

“இன்று உன் நடையிலேயே அப்படிஒரு மிடுக்கு இருக்கிறதே” என்று சொல்லி அவ்வண்ணமே சற்று நடந்தும் காட்டினார்.

“பலே! பலே!!” என்று கை தட்டினான் தெனாலிராமன். “நீங்கள் எல்லாம் பரம்பரை செல்வந்தர். உங்களுக்கெல்லாம் ஏன் இந்த போலி நடை! அது சரியாக வராது” என்றான் அவன்.

“அது சரி! நீ முதல் முதலில் இந்த அரண்மனைக்கு வந்தாயே! அது போலவா இப்பொழுது இருக்கிறாய்? உன் உடம்பிலேயே ஒருவித மினுமினுப்பு கூடிவிட்டதே!”

“இருக்கலாம். பரிசு மேல் பரிசு கிடைத்ததால் செல்வம் சேராமலிருக்குமா?” என்று புன்னகை புரிந்து கொண்டான் அவன்.

“பொருளைச் சேர்த்து வைப்பதில் என்னடா மகிழ்ச்சி! அதைப் பிறர்க்குக் கொடுப்பதில்தான் மகிழ்ச்சி பெருகும். கொடுத்து கொடுத்து கை சிவந்து போஅ வேண்டும் தெரியுமா?”

“ஆமாம் என் கை இன்னும் சிவக்கவில்லையே? சாதரணாமாகத்தான் இருக்கிறது! என்று உள்ளங்கையைப் பார்த்துக் கொண்டே சொன்னான்.

“நல்ல அழகான விடு ஒன்றைக் கட்டி நல்ல ஆத்மாவாகத் தேடி பரிசாகக் கொடேண்டா!” என்றார் அரசர்.

“இப்பொழுது நீங்கள் சொல்லி விட்டீர்கள் அல்லவா! அப்படியே செய்து விடுகிறேன். தங்கள் கட்டளையை நான் என்றைக்கேனும் நிறைவேற்றாமல் இருந்திருக்கேனா!” என்று சொல்லிக் கொண்டே வெளியே கிளம்பி விட்டான்.

மறுநாளிலிருந்தே கல்லைச் சேகரித்தான். மண்ணைச் சேகரித்தான். சுண்ணாம்பைச் சேகரித்தான். காட்டிற்குச் சென்று நல்ல மரங்களாகப் பார்த்து வெட்டிக் கொண்டு வந்து விட்டான். அத்தனையும் முதல் தரமான சாமான்களாகவே தேர்ந்தெடுத்தான்.

எங்கெங்கிருந்தோ நல்ல கைதேர்ந்த தொழிலாளர்களையும் தருவித்தான்.

நல்ல நாள் பார்த்து, பூமி பூஜை செய்தான். ஆழமாக அஸ்திவாரம் போட்டான். ஒவ்வொரு வேலையையும் அவனே மேற்பார்வை செய்தான். வேலைக்காரர்களிடம் நன்றாக வேலை வாங்கினான். சற்று சிரமப்பட்டும் வேலையாக இருந்தால் தானே முன் வந்து உதவிக்கரம் நீட்டினான்.

இப்படியாக இரவு பகலாக உழைத்து, சீக்கிரத்தில் சித்திர வேலைபாடமைந்த அழகான வீடு ஒன்றைக் கட்டி முடித்துவிட்டான்.

ஊர் மக்கள் எல்லாம் அந்த நேர்த்தியான வீட்டை அவ்வப்பொழுது வந்து பார்த்து மகிழ்ந்தார்கள். இந்த வீட்டைக் கட்டின ஆட்கள் எல்லாம் எந்த ஊர்? எங்களுக்கும் அவர்களையே ஏற்பாடு செய்யுங்களேன் என்று அவனைக் கேட்டுக் கொண்டார்கள்.

இதலாம் கேட்டகக் கேட்க தெனாலிராமனுக்கு பெருமையாகவே இருந்தது.

அந்த வீட்டுக்கு கிரகப்பிரவேசம் செய்வான். நமக்கு நல்ல விருந்து கிடைக்கும் என்று எல்லோரும் எதிர்பார்த்த பொழுது, அவன் அப்படிச் செய்யவில்லை.

ஆனால் வீடு கட்டி முடித்த மறுநாளே, வீட்டின் முன் வாசலில் ‘தனக்குள்ளது போதும் என்ற மனம் படைத்தவன் எவனோ, அந்த நல்ல ஆத்மாவுக்கு இந்த வீடு பரிசாக அளிக்கப்படும்’ என்று பெரிய எழுத்தில் எழுதி, விளம்பரப் பலகை ஒன்றை மறக்காமல் தொங்கவிட்டான்.

 நாட்கள் கரைந்தன; மாதங்கள் நழுவின. அந்த வீட்டை பரிசாக வாங்கிக் கொள்ள ஒருவரும் வரக்காணோம்.

வெகு நாட்கள் கழித்து வெளியூரிலிருந்து ஒருவன் வந்தான். அந்த வீடு பற்றி விசாரித்தான். அவனைக் பார்த்தாலே பரம ஏழையாகத் தெரிந்தது. அங்கு, பெரிய எழுத்தில் எழுதியிருந்த பலகையை ஒரு தடவைக்கு இரு தடவையாகப் படித்து பார்த்தான். அப்படியென்றால் இந்த வீடு எனக்குத்தான் என்று முணுமுணுத்துக் கொண்டான்.

உடனே தெனாலிராமனைத் தேடிக் கொண்டு சென்றான். “நீங்கள் தாம் அந்த தரும தாதாவா!” என்று கரம் கூப்பி வணங்கினான்.

“ஐயா! ‘போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து’ என்பதை நான் முழுக்க முழுக்க கடைபிடிப்பவன். அதனால் அந்தக் புது வீடு எனக்குத்தான் பரிசாகக் கிடைக்க வேண்டும்” என்றான்.

அது கேட்ட தெனாலிராமனுக்க்ச் சிரிப்பு வந்து விட்டது; விழுந்து விழுந்து சிரித்தான்.

“நான் சொன்னது சிரிப்புக்கிடமில்லையே! ஏன் அப்படிச் சிரிக்கிறீகள். சொல்லுங்கள். வேண்டுமென்றால் நானும் உங்களுடன் சேர்ந்து சிரிக்கிறேன்.” என்றான் அந்த ஏழை.

“அட பேராசைக்காரா! அந்த விளம்பரத்தை நன்றாய்ப் படித்து பார்த்தாயா!”

“என்ன ஐயா அப்படிச் சொல்லுகிறீரகள்! நன்றாய்ப் படித்து பார்த்துவிட்டு வந்துதான் உங்களை கேட்கிறேன்.!”

“அப்ப்டியா அது! சரி! நீதான் போதுமென்ற மனம் படைத்தவனாயிறே! பிறகு இந்த வீட்டைப் பெற உனக்கு எப்படி ஆசை வந்தது! அப்படி வரக்கூடாதே!” என்று சொல்லி ஏளனமாக மறுபடியும் சிரித்தான் தெனாலிராமன்.

பதிலொன்றும் சொல்லத் தோன்றவில்லை அவனுக்கு! தலை குனிந்தான். சிரியுங்கள்! நன்றாய் சிரியுங்கள் என்று முணுமுணுத்துக் கொண்டான்.

அதன் பிறகு தெனாலிராமன் அரண்மனை சென்றபொழுது “என்ன ஆயிற்று? புது வீட்டை யாருக்கு பரிசாக கொடுத்தாய்?” என்று மன்னர் கேட்டார்.

நடந்ததை சொன்னான் தெனாலிராமன்.

“சரியான ஆளய்யா நீ!” என்று விழுந்து விழுந்து சிரித்து விட்டு “அப்படியென்றால் அந்தப் புது வீட்டை என்னதான் செய்ய போகிறாய்?” என்றார் மன்னர்.

“செய்வது என்ன! முதலில் அந்த விளம்பரப் பலகையை எடுத்து வெளியே எறிவேன்.அதன் பிறகு நல்ல நாள் பார்த்து பால் காய்ச்சி சாப்பிடுவேன். நான் குடிபோக வேண்டியதுதான்” என்றான்.

“அப்படிச் சொல்லு! அந்த வீட்டை அவ்வளவு நேர்த்தியாகக் கட்டினபொழுதே நான் சந்தேகித்தேன்” என்று கலகலவென சிரித்தார் அரசர்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply