தெனாலிராமன் சிறுகதை - சமயம் வாய்த்தது

அரண்மனையில் ஏதாவது விசேஷம் என்றால், தெனாலிராமன் அங்கு தயாராய் நிற்பான்.

அன்று மன்னருக்குப் பிறந்த நாள் கொண்டாட்டம் அரண்மனையில் மிகவும் கோலாகலமாய் நடந்தேறியது. அனைவருக்கும் அறுசுவை விருந்தளித்தார் அரசர்.

ஒவ்வோர் இலையிலும் பலவித பலகாரங்களும் பழ தினுசுகளும் நிறைந்திருந்தன. தெனாலிராமன் முதற்பந்தியில் முதலாமவனாகவே உட்கார்ந்து விட்டான். பரிமாறுகிறவர்கள் அவனை நன்கு கவனித்துக் கொண்டார்கள். தெனாலிராமன் வடையும் பாயசமுமாக வாங்கி வாங்கிச் சாப்பிட்டான். வயிறு நிறைந்தது பெரிதாகவும் ஆகிவிட்டது.

நடக்க முடியாமல் நடந்து வீட்டையடைந்தான். நல்ல தூக்கம், அன்று மாலையே மறுபடியும் அரண்மனைக்குச் செல்ல வேண்டுமே!

அன்று மாலை தர்பார் மண்டபத்தில் அனேக கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடாகியிருந்தது. ஒரே கூட்டம். மன்னர் அலங்கார பூஷிதரராய் வந்து சிம்மாசனத்தில் அமர்ந்தார். அத்தனையும் கண்டு கேட்டு களித்தார்.

இறுதியில் மன்னருக்கு மக்கள் முன்வந்து பரிசுகளை வழங்கத் தொடங்கினார்கள்.

மதுரமான பழங்களும், கலை பொருட்களும் ஏராளமாக குவிந்தன. அண்டை நாட்டு மன்னர்கள் கூட விலையுயர்ந்த பரிசுப் பொருள்களை தங்கள் நாட்டுத் தூதுவர் மூலம் அனுப்பி வைத்திருந்தனர்.

மன்னர் மனம் பெரிதும் மலர்ந்திருந்தது. மக்களும் கண்டு களித்தனர்.

அப்பொழுது தெனாலிராமன் அவசர அவசரமாக அங்கு வந்தான். அரசருக்குப் பரிசு கொடுக்கவே அப்படி அவசரப்பட்டான்.

ஏதோ ஒரு நீண்ட துணிச் சுருளைக் கொண்டு அரசர் முன்னிலையில் அவிழ்க்க அவிழ்க்க அத்துணிச் சுருள் நீண்டு கொண்டே சென்றது.

அங்கிருந்த னைவரும் ‘அது என்னவொ!’ என்று அறிய அதி ஆவலாய் சூழ்ந்து நின்று பார்த்தார்கள்.

தெனாலிராமன் அதை இன்னும் அவிழ்ந்து முடித்தபாடில்லை! அவிழ்க்க அவிழ்க்க அத்துணிச் சுருள் நீண்டு கொண்டே சென்றது.

 “திரௌபதிக்குத் துகில் உரித்த மாதிரியிருக்கிறதே!” என்றான் ஒருவன்.

“அதுவே தேவலை போலிருக்கிறதே! இந்த துச்சாதனுக்குச் சோர்வே ஏற்படவில்லையே!”

“ஆமாம். ஆமாம் நீ சொன்னது சரியே” என்றேல்லாம் ஒருவருக்கொருவர் பேசிக் கொண்டு சிரித்தார்கள்.

அரசரும் அதை கூர்ந்து கவனித்தார். அவருக்கும் வியப்பாகவே இருந்தது.

உள்ளிருப்பது என்ன என்று சீக்கிரத்தில் தெரிந்துகொள்ள முடியாமல் எல்லோரும் திண்டாடினர். அதற்குள் இன்னும் கூட்டம் சேர்ந்து விட்டது அங்கே. தெனாலிராமன் இன்னும் அவிழ்த்துக் கொண்டேயிருந்தான்.

கூட்டத்திற்கு வெளியே நின்றவர்கள் அதை எட்டி எட்டிப் பார்த்தார்கள்.

அது சற்று நீளமாக இருக்கவே, ஏதோ ஓர் அருமையான கிடைத்தற்கரிய பழங்காலத்து ஓலைச் சுவடியாயிருக்கும்! என்றான் ஒருவன்.

‘அப்படியொன்றும் இல்லை அது ஏதோ ஒரு குழல் மாதிரியல்லவா இருக்கிறது! கிருஷ்ணபரமாத்மா ஊதிய புல்லாங்குழலாயிருக்குமோ!’ என்றான் மற்றொருவன்!

அது என்ன என்று இதோ இன்னும் சற்று நேரத்தில் தெரிந்துவிடப் போகிறது! அதற்குள் ஏன் அவரப்படுகிறீர்கள், என்றான் இன்னொருவன்.

ஆனால் தெனாலிராமனோ எதையும் கவனித்தானில்லை. அவன், கருமமே கண்ணாயிருந்தான்! இன்னும் அவிழ்த்துக் கொண்டுதானிருந்தான்.

அரசரைத் தனியே விட்டு அனைவரும் தெனாலிராமனையே சூழ்ந்து கொண்டு நின்றார்கள். அதைப் பார்க்க அரசருக்கு ஆச்சரியமாகவே இருந்தது. ‘அரை நொடியில் அனைவருடைய கவனத்தையும் இப்படி தன் மேல் ஈர்த்துக் கொண்டு விட்டானே இப்பொல்லாத போக்கிரி!” என்றே எண்ணினார் அரசர்.

கடைசியில் வெகு நேரம் கழித்து அதை அவிழ்ப்பதை முடித்தான் தெனாலிராமன். உள்ளே இருந்து நீண்ட புளியம்பழத்தை வெளியில் எடுத்தான்.

அதைக் கண்ட அனைவரும் இப்படியும் உண்டா? என்று வாய் புதைத்து நின்றனர். ‘சே! சே! புளியம்பழமாக இராது. அதையா அரசருக்குப் பரிசாகக் கொண்டு வந்திருப்பான். புளியம்பழம் போன்று வேறு ஏதேனும் ஒரு உயர்ந்த பொருளாக இருக்கும்’ என்றான் ஒருவன்.

அப்படியொன்றும் இல்லை அது. உண்மையான் புளியம்பழம்தான். தெனாலிராமன் வீட்டுத் தோட்டத்தில் ஒரு பெரிய புளிய மரம் இருந்தது. அதில் வருஷா வருஷம் காய்ப்பது அவன் வீட்டுச் செலவுக்குக் போக, மிகுதியாகக் கூட இருக்கும். அதை விற்று பணம் ஆக்குவான் அவன். அந்தப் புளிய மரத்திலிருந்து பறித்து வந்த நீண்ட புளியம்பழம்தான் அது.

தெனாலிராமன் அந்தக் புளியம்பழத்தை அன்புடன் அரசருக்கு நீட்டினான்.

தன் கையிலிருந்த எலும்பிச்சம் பழத்தை உருட்டிக் கொண்டே அதை மேலும் கீழுமாகப் பார்த்தார் மன்னர்.

உடனே தெனாலிராமன், அந்த பழத்தைச் சுட்டிக்காட்டி “அரசரே! இது உருட்டுக்கு நீட்சி. புளிப்புக்கோ அதனப்பன்” என்றான்.

அதைக்கேட்ட அனைவரும், விழுந்து விழுந்து சிரித்தார்கள். அரசரும் புன்னகை புரிந்துகொண்டே அந்தப் புளியம்பழ பரிசுப் பொருளை வாங்கிக் கொண்டார்.

இதையும் படிக்கலாமே!: உள்ளம் தான் உயர்ந்தது – அக்பர் பீர்பால் கதைகள்

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply