திருநாகேஸ்வரம் ராகு பகவான் கோயில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில்5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.

தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து காரைக்கால் சாலையில்5 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது திருநாகேஸ்வரம். இங்கு அமைந்துள்ள ராகு பகவான் கோவில் நாகராஜன் பூஜித்த தலமாகும். அதனால் இத்தலத்திற்கு திருநாகேஸ்வரம் என்ற பெயர் வந்தது.

ராகு பகவானுக்கு தென்புறமாக ஜே‌‌ஷ்டா தேவியும், வலப்புறமாக கஜலட்சுமி நர்த்தன கணபதியும் உள்ளனர். உட்பிரகாரத்தில் தட்சிணாமூர்த்தியும் அவருக்கு எதிரில் சப்த மாதாக்கள் இருக்க இந்த கோவில் தல வரலாற்றை இங்கே காணலாம்.

இந்த தலம், நள மகாராஜாவுக்கு ஏழரை நாட்கள் சனி நீக்கிய தலம் ஆகும். சனீஸ்வர பகவான், ஈஸ்வரனை நோக்கி தனி சன்னதி கொண்டுள்ள தலம். நவக்கிரக சன்னதியும் தனியாக அமைந்து இருக்கிறது. இத்தலத்தில் உள்ள அம்பாள் தவக்கோலத்தில் இருப்பதையும், சகல மூர்த்திகளும் அம்பாளை சுற்றி இருப்பதையும் காணலாம்.

வடக்கு பிரகாரத்தை கடந்து அன்னை கிரிகுஜாம்பாள் ஆலயத்துக்கு செல்ல வேண்டும். இங்கு எழுந்தருளியிருக்கும் தேவி சுயம்புமூர்த்தியாக திகழ்கின்றாள். மலைமகள், அலைமகள், கலைமகள் என மூவரும் ஒன்றாக எழுந்தருளிய சக்தி பீடம் இது. அம்பாளுக்கு அபிஷேகம் செய்வது கிடையாது. புனுகு சட்டம் தான் சாத்தப்படுகிறது.

கவுதம முனிவரின் மனைவி அகலிகையிடம், இந்திரன் தவறாக நடந்து கொள்ள அதை அறிந்த முனிவர் நீ துர்நாற்றம் உடைய ஒரு பூனையாக மாறக் கடவாய் என்று சாபமிட்டார். அந்த சாபம் நீங்கிட இந்திரன், திருநாகேஸ்வரம் வந்து அன்னை கிரிகுஜாம்பிகையை அர்த்தஜாம பூஜை முடிந்ததும் தரிசனம் செய்ய சாபம் நீங்கி பழைய உருவம் பெற்று நிம்மதி அடைந்ததாக இக்கோவில் தலவரலாறு கூறுகிறது.

திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரமூர்த்தி நாயனார் ஆகிய மூவராலும் பாடல் பெற்ற தலம் திருநாகேஸ்வரம். நாகதோ‌‌ஷமும், ராகுதோ‌‌ஷமும் உள்ளவர்கள் இங்கே வந்து வணங்கினால் தோ‌‌ஷம் நிவர்த்தி கட்டாயம் கிடைக்கிறது என்கிறார்கள். தஞ்சை மாவட்டத்தில் உள்ள புகழ்மிக்க திருத்தலங்களில் திருநாகேஸ்வரமும் ஒன்று.

இந்தக் கோவிலின் வெளிப்பிரகாரத்தில் ராகுபகவான் அவரது இரு தேவியருடன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். இத்தலத்தில் ராகுபகவான் நாகநாத சுவாமியை வழிபட்டதோடு இத்தலத்தில் தன்னையும் வழிபடுவோருக்கு பல நன்மைகளை அருளும் வரமும் பெற்று திகழ்கிறார். ராகு பகவான், சிவபெருமானை பூஜித்த திருத்தலமாக திருநாகேஸ்வரம் திகழ்வதால் வடநாட்டில் இருந்தும் பக்தர்கள் இங்கே குடும்பத்தோடு வருகிறார்கள்.

ஜோதிட முறையில் பார்க்கும்போது ராகு பெருமானின் பெருமை அளவிடற்கரியது ஆகும். பூமியானது சூரியனைச் சுற்றி வருகிறது. தனது பாதையில் சந்திரன் பூமியை இரண்டு இடங்களில் சந்திக்கிறது. சந்திரன் மேல் நோக்கி செல்லும்போது பூமியின் கதியில் குறுக்கிடும் இடம் ராகு எனவும், சந்திரன் கீழ்நோக்கி வருகிறபோது பூமியின் கதியில் குறுக்கிடும் இடம் கேது எனவும் பெயர் பெறுகிறது.

இவை இரண்டும் பூமிக்கு மேலும், கீழும் ஒரே நேர்கோட்டில் அதாவது 180 டிகிரி வித்தியாசத்தில் உள்ளதால் எதிரெதிராக அமைகின்றன. நவக்கிரகங்களில் சனியை விட செவ்வாயும், செவ்வாயை விட புதனும், புதனை விட குருவும், குருவை விட சுக்கிரனும், சுக்கிரனை விட சந்திரனும், சந்திரனைவிட சூரியனும் இவர்கள் அனைவரையும் விட ராகுவும், கேதுவும் பலம் பொருந்தி விளங்குகின்றனர்.

சந்திர, சூரியனை பலம் இழக்கும்படியும். ஒளி குன்றும்படியும் கட்டுப்படுத்தும் ஆற்றல் ராகு-கேதுவுக்கு உண்டு. ராகுவுக்கு எந்த வீடும் சொந்தமாக இல்லை. யாதும் ஊரே யாவரும் கேளிர் என்பது போல ராகு இருந்து வருகிறார். ராகு யோகத்திற்கு அதிபதியாவார். ராகு நல்ல நிலையில் அமைந்திருந்தால் நல்ல பலன்கள் நிறைய கிடைக்கும்.

மே‌‌ஷம், ரி‌‌ஷபம், கடகம், கன்னி மற்றும் மகரம் என்ற ஐந்து இடங்களில் ராகு இருந்து அவருக்கு கேந்திரங்களில் கிரகம் இருந்தால் பருவத யோகம் எனப்படும். அதன்படி குறிப்பிட்ட ஜாதகர் சீமான் ஆகவும், அரசனுக்கு ஒப்பாகவும் வாழ்வார். ஒருவரது ஜாதகத்தில் ராகு நல்ல இடத்தில் இருந்து விட்டால் நல்ல மனைவி. நல்ல குடும்பம், நல்ல வேலைக்காரர்கள் ஆட்சி மற்றும் செல்வாக்கு முதலியன அமையும். ஆங்கிலம் போன்ற அந்நிய மொழிகளில் தேர்ச்சி பெறுவதற்கும் ராகுவே காரணம் ஆகிறார்.

மருந்து, ரசாயனம், நூதன தொழில்நுட்ப கருவிகள் போன்றவற்றிற்கும் அவ்வப்போது மாறிவரும் நாகரீகத்திற்கும் ராகுவுடன் இணைந்த சுக்கிரனே காரணமாகிறார். அரசியல், செல்வாக்கு, ஆட்சி உரிமை போன்றவற்றிற்கும் ராகுவின் அனுக்கிரகம் மிகவும் தேவை. அணுகூல ராகு, கீழான ஒருவனையும் சக்கரவர்த்தி ஆக்கி விடுவார் என்று பூர்வ பாராசாரியம் என்னும் ஜோதிட நூல் கூறுகிறது.

மந்திர ஜாலம், இந்திரஜாலம், கண்கட்டி வித்தை போன்ற வித்தைகளும் ராகுவின் அனுகிரகத்தால் கிட்டும். ராகு, ஒருவனை குபேரபுரிக்கும் அழைத்துச் சென்று விடுவார். ராகு தோ‌‌ஷமுடையவராய் இருந்து விட்டால் மிகவும் கொடூரமான பலன்கள் விளையும். ஐந்தாமிடம் ராகுவால் புத்திர தோ‌‌ஷம் ஏற்படுகிறது.

சிறந்த சிவபக்த கிரகமாகிய ராகு, ராமேஸ்வரம், ஸ்ரீ காளஹஸ்தி ஆகிய இடங்களில் மேன்மை பெற்று விளங்கியபோதிலும் திருநாகேஸ்வரத்தில் மட்டுமே ராகு தனது இரு தேவியருடன் தனிக்கோவில் கொண்டு தன்னை வழிபடும் மக்களுக்கு அனைத்து நலன்களையும் அருளி வருவதைக் காணலாம். ஏழையையும் குபேரனாக்கும் ராகு தலம் இது என்பதால் நீங்களும் ஒருமுறை இங்கு சென்று வாருங்களேன்.

திருநாகேஸ்வரம் ராகு கோவிலில் உள்ள தூண்களில் சிற்ப அமைப்பு ஆச்சரியப்படத்தக்கதாகவே இருக்கிறது. இங்குள்ள தூண்களிலும், அந்த தூண்களில் காணப்படுகின்ற சிற்பங்களையும் அந்த காலத்தில் நமது சிற்பிகள் மிகவும் அருமையாக செதுக்கியுள்ளனர். சிம்மம், தூணைத் தாங்குவது போன்று வடிவமைத்துள்ளது சிறப்பான அம்சம். மற்ற கோவில்களில்,, தூண்களின் மேலே சிம்மம் இருக்கும். இங்கு சிம்மம் கீழே செதுக்கப்பட்டிருப்பது கொள்ளை அழகு.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply