மன்னர் தெனாலிராமனைக் கண்டதும் அதி ஆச்சரியத்தில் அமிழ்ந்து போனார்.
“ராஜகுரு எங்கே? அவரையல்லவா அழைத்து வரச் சொன்னேன்!”
அது கேட்ட அவர்கள் ஒருவருக்கொருவருர் பார்த்து மிரண்டார்கள்.பின்னர், “இல்லை அரசே! தோளில் உட்கார்ந்திருந்தவரை நையப்புடைத்துப் போட்டு விட்டு, சுமந்து வந்தவரையல்லவா அரணமனைக்கு அழைத்து வரச் சொன்னீகள்!” என்று இருவரும் ஒரே குரலில் சொன்னார்கள்.
“அது எப்படி? இந்தத் தெனாலிராமனைத் தானே ராஜகுரு தோளில் அமர்ந்திருந்தார். அதனால்தான் அவரைக் கீழே தள்ளி நையப்புடைத்துவிட்டு இவரை அழைத்து வருகிறோம்” என்றனர் சேவகர்கள்.
“அப்படியா நடந்தது” என்று தயங்கினார் மன்னர்!
அரசனின் தயக்கத்தையறிந்த தெனாலிராமன், “அரசே, நீங்கள் பார்த்ததும் சரிதான், இவர்கள் நடந்ததும் சரிதான்” என்றான்.
“அது எப்படீரண்டும் சரியாகும்” என்றான் மன்னன்.
“ஆம், அப்படித்தான் அது. நீங்கள் முதலில் மேல் மாடத்திலிருந்து எங்களை பார்த்தும் சேவகர்களை கூப்பிட்டு ஏதோ சொல்லியனுப்பியதை நான் குறிப்பால் அறிந்தேன். அப்பொழுது ராஜகுருதான் என்னைத் தோளில் சுமந்து கொண்டிருந்தார்.
உடனே நான், தங்களுக்கு மன வருத்தம் உண்டாகும்படி செய்துவிடேனோ என்று பயந்து, நான் அவர் தோளில் சுமந்து கொண்டு நடந்தேன்” என்று சற்று பயந்தவன் போல் இணக்கமாகத் தெரிவித்தான்.
ஆனால் அவன் சொற்களில் எகத்தாளமும் விஷமப் பார்வையும் பளிச்சிட்டன.
“ஓ அப்படியா அது! முதலில் நீ ராஜகுருவை மிகவும் அவமானப்படுத்தியிருக்கிறாய், அதன் பிறகு அவருக்கு இப்படி அடி வேறு வாங்கி கொடுத்திருக்கிறாய்!” என்று சீற்றமடந்தார் அரசர்.
அது கேட்ட தெனாலிராமன் ஏதோ சொல்ல வாயெடுத்தான். “உன் வாயை மூடு. யார் அங்கே, இவனை இப்பொழுதே இழுத்துக் கொண்டு போய், இவன் தலையைச் சீவிவிட்டு வாருங்கள்” என்று உத்தரவிட்டார் அரசர்.
தெனாலிராமன் தலைகுனிந்து நின்றான்.
‘ஆ! ராஜகுருவுக்கு கெடுதல் செய்யப் போக கடைசியில் இப்பொழுது ந்ம் தலைக்கே ஆபத்து வந்துவிட்டதே’ என்று மிகவும் வருத்தப்பட்டான்.
மகா காளியை மறக்காமல் துதித்துக் கொண்டே அச்சேவகர்களுடன் நடந்தான் தெனாலிராமன்.
வழிநெடுக தெனாலிராமனை விசாரித்துக் கொண்டே நடந்தார்கள் அச்சேவகர்கள். அவனும் நடந்ததையெல்லாம் ஆதியோடந்தமாகச் சொல்லி வந்தான். அது கேட்ட அவர்கள் அப்படியா நடந்தது? என்று அந்த ராஜகுருவின்பால் துவேஷம் கொண்டார்கள்.
சமயம் பார்த்து, “ அந்த நயவஞ்க ராஜகுரு செளக்கியமாயிருக்க என் தலையை கிள்ளியெறியப் பார்க்கிறீகளே! இது நியாயமா?” என்றான்.
அப்பொழுது அவனது குரலில் ஒருவித கெஞ்சல் இருந்தது. அவனது முகமோ சோகத்தில் அமிழ்ந்திருந்தது.
தெனாலிராமனின் நிலையையறிந்து அச்சேவகர்கள் இருவரும் மிகுந்த பரிதாப்பட்டார்கள். இப்பொழுது என்ன செய்யலாம்? என்று அவர்கள் யோசித்துக் கொண்டிருந்த பொழுது, தன் இடுப்பிலிருந்த முடிச்சை அவிழ்த்து, ஏதோ என்னாலானது, என்று சொல்லிக் கொண்டே ஆளூக்குப் பத்துப் பொன்னைக் கொடுத்தான்.
அதை பெற்ற அவ்விருவரும், சரி! இப்பொழுதே இந்நாட்டை விட்டு ஓடிவிடு. பிறகு நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்” என்றார்கள். பொன் செய்த வேலையை பார்த்தீர்களா?
உடனே தெனாலிராமனும் அப்படியே செய்வதாக வாக்கு கொடுத்துவிட்டு ஓட்டம் பிடித்தான்.
அரண்மனைச் சேவகர்கள், அங்கே மேய்ந்து கொண்டிருந்த ஆட்டை அறுத்து, இரத்தம் தோய்ந்த கத்தியைக் கொண்டு பொய் அசரனிடம் காண்பித்தார்கள்.
அது கண்ட அரசன், தெனாலிராமன் கொலையுண்டான் என்றே எண்ணிக் கொண்டான்.
ஆனால் தெனாலிராமனோ வேறு எந்த நாட்டுக்கும் ஓடிப் போய் விடவில்லை. இரசசியமாகத் தன் வீட்டிலேயே ஒளிந்து கொண்டு தலைமறைவாக வாழ்ந்து வந்தான்.
ஆனால் மகா காளியை மாத்திரம் மறக்கவே இல்லை. தினமும் தவறாமல் தியானம் செய்து வந்தான்.