அக்பர் சக்ரவர்த்தியின் அரண்மனையில் செல்வம் என்ற பெயருள்ள ஒருவன் அக்பரின் அரண்மனை பாதுகாவலனாக பணிபுரிந்தான்.
ஓர் நாள் செல்வம் ஒரு சிறு தவறு செய்ததற்காக அக்பர் அவனை வேலையிலிருந்து நீக்கி விடும்படி உத்தரவிட்டார். செல்வமோ ஏழ்மை நிலை குடும்பத்தைச்சேர்ந்தவன்.
செல்வம் பீர்பாலிடம் சென்று தன் வறுமை நிலையைக் கூறி தனக்கு மீண்டும் அரண்மனையில் வேலை அளிக்கும்படி வேண்டினான்.
பீர்பால் அவனுடைய ஏழ்மை நிலையை எண்ணி மனம் இரங்கி, செல்வத்திடம் நாளை அதிகாலையில் அரண்மனைக்கு சென்று செல்வம் தலைவாசலில் நிற்கிறேன். உத்தரவு கொடுத்தால் உள்ளே வருகிறேன், இல்லாவிடில் போகிறேன் என்று மட்டும் சொல் எனக்கூறித் தைரியம் கொடுத்து அனுப்பினார்.
செல்வமும் மறுநாள் அதிகாலையில் அரண்மனைக்குச் சென்று, செல்வம் தலைவாசலில் நிற்கிறேன். உத்தரவு கொடுத்தால் உள்ளே வருகிறேன் இல்லாவிடில் போகிறேன் என்று கூறிக் கொண்டிருந்தான். அரசர் அக்பருக்கு இச்செய்தி எட்டியது.
உடனே அக்பர், தலைவாசலில் நின்று கொண்டிருந்த செல்வத்தை உள்ளே அழைத்து வரும்படி உத்தரவிட்டார்.
செல்வம் மன்னரை பணிவுடன் வணங்கிவிட்டு அரண்மனை வாயிலில் கூறியதை மீண்டும் கூறினான்.
அக்பர் புன்னகை புரிந்தவாறு, செல்வம் எப்பொழுதும் நம்மோடு நிரந்தரமாக இருக்கட்டும்! என்று சொல்லி, அவனை மீண்டும் வேலையில் சேர்த்துக் கொள்ளும்படி உத்தரவு பிறப்பித்தார்.
அரண்மனையில் உள்ள அனைவரும் இந்நிகழ்ச்சியை அறிந்து ஆச்சரியம் அடைந்தனர். பீர்பாலின் மதியூகத்தினால் தான் இது நிகழ்ந்தது என்பதை அறிந்த அக்பர் உண்மையில் மனமகிழ்ச்சியடைந்தார்.
பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.