தெனாலிராமன் சிறுகதை - சமயம் வாய்த்தது

விஜயநகரத்து சாம்ராஜ்யம் கிருஷ்ண தேவராயரின் தலைமையில் மிகவும் பிரசித்தமாக விளங்கியது. மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்கள். அவ்வப்பொழுது விழாக்களும் வெகு விமரிசையாக நடந்து வந்தது.

ஆனால் பக்கத்து கோல்கொண்டா ராஜ்யத்தில் அப்படியில்லையே.

நாட்டில் சுபிச்சமில்லை. மக்கள் வறுமையில் வாடினார்கள். அந்நிலையை அப்படியே நீட்டிக்கவிட்டால் மக்களிடையே புரட்சி ஏற்படும் போலிருந்தது. அதை எப்படி சமாளிப்பது என்று திணறினான் அந்நாட்டு மன்னன்.

நம் நாடு சுபிட்சமடையாவிட்டாலும் அண்டை நாட்டு சுபிட்சத்தையாவது குலைப்போமே என்று திட்டமிட்டான் அவன்.அதனால் தன்னிடம் நெருங்கி பழகுபவர்களை அழைத்து ஒருநாள் நள்ளிரவில் மேல் மாடத்தில் கூட்டம் போட்டான் கோல்கொண்டா மன்னன்.

அவரவர் ஏதேதோ யோசனை சொன்னார்கள். ஒன்றும் சரிபட்டு வரவில்லை. கடைசியாக கிருஷ்ண தேவராயரை இரகசியமாக நம் ஆளை அனுப்பி கொன்றுவிட்டால் என்ன! அதனால் விஜயநகர சாம்ராஜ்யம் வெகு சீக்கிரத்தில் சீர்கெட்டு போகுமல்லவா! என்று தீர்மானித்தார்கள்.

அதற்கென சரியான ஒற்றனை தேர்ந்தெடுத்து விஜயநகரத்துக்கு அனுப்பி வைத்தார்கள்.அவனும் வெற்றியுடன் திரும்புவதாக உறுதியளித்து விடு புறப்பட்டான்.அவன் ஏறி வந்த குதிரையை நகரத்து எல்லையிலேயே விட்டு விட்டு ஊரினுள் நுழைந்தான் அவன்.

அவ்வூர் பிரஜையாகவே தன்னை மாற்றிக் கொண்டு மக்களோடு பழகினான்.

இரகசியமாக அரண்மனைப் பக்கம் சென்று மன்னனின் போக்குவரத்தையெல்லாம் மறைவாக இருந்து பார்த்து வந்தான். ஆனால், மன்னனின் போக்கோ ஒரு நாளைக்கு ஒரு விதமாக இருந்தது.அதனால் அவன் மனதிற்கு ஒன்றும் பிடிபடவில்லை.

அரசனிடம் நெருங்கிப் பழகுபவன் தெனாலிராமந்தான் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயமாயிற்றே! அதனால் ஒரு தெலுங்கு பிராமணன் போல் நடித்துக் கொண்டு தெனாலிராமன் வீட்டிற்கு ஒரு நாள் சென்றான்.

தன்னை தெனாலிராமன் மாமன் வழியில் உறவு என்று சொல்லிக் கொண்டான். நல்ல வரவேற்பு கிடைத்து. அதனால் அவ்வீட்டில் விருந்தாளியாக தாங்கிக் கொண்டான் அந்த கோல்கொண்டா ஒற்றன்.

அந்த மாதிரி உறவு தனக்கு யாரும் இல்லையே என்று முதலில் சந்தேகப்படவே செய்தான் தெனாலிராமன். அவனை மேலும் கீழும் பார்த்தான்.

ஆனால் அதற்குள் அந்த ஒற்றன் வாய்சாலக்காக ஏதோ ஒரு முறையைச் சொல்லி உறவைக்காட்டவே, பிரியமாய் வரவேற்று வைத்தான் தெனாலிராமன். அந்த ஒற்றன் தெனாலிராமனுடைய பையனுக்கு விதவிதமான பட்சணங்களும் கொண்டு வந்திருந்தான். அவன் மனைவிக்கு வேறு பெரிய புஷ்ப பொட்டலம் கொண்டு வந்திருந்தான்! அந்நியனாய் இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடந்ததுக் கொண்டிருப்பானா!

தினமும் வேளையோடு உண்டு, உறங்கி ஊர் சுற்றிக் கொண்டு வந்தான் அந்த ஒற்றன்.

ஒரு நாள் எங்கோ கவிஞர்கள் மாநாடு என்று தெனாலிராமன் சென்றிருந்தார்கள்.

வீட்டில் தனிமையில் இருந்த அந்த ஒற்றனின் மனம் தீவிரமாக வேலை செய்யத் தொடங்கிவிட்டது. தெனாலிராமன் அரசனும்தான் நெருங்கிய நண்பர்கள் போல் பழகி வந்தார்களே! அதைப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்டான் ஒற்றன்.

“உடனே இங்கு வந்தால், வாழ்க்கையில் இதுவரை கண்டிராத அதிநூதன அற்புத நிகழ்ச்சி ஒன்றைக் காணலாம். தவற வேண்டாம்” என்று ஓர் ஓலை தயாரித்தான். அரசனுக்கு தெனாலி ராமனே எழுவது போல அதைத் தயாரித்திருந்தான்.

யார் மூலம் அதை அனுப்பி வைப்பவது? தெருவில் வந்து எட்டிப் பார்த்தான். தெனாலிராமன் அனுப்பியதாக அவனே போகலாம். அதனால் அவன் திட்டம் நிறைவேறாமல் போகுமே!

இதுபற்றி யோசித்துக் கொண்டிருந்தபொழுது தெனாலிராமனைத் தேடிக் கொண்டு அங்கு ஓர் ஆள் வந்தான். உடனே அவனிடம் சகஜமாகப் பேசி உனக்காகத்தான் இத்தனை நேரம் காத்துக் கொண்டிருந்தார். இப்பொழுதுதான் வெளிவாசலுக்குப் போயிருக்கிறார்.

அவன் திரும்புவதற்குள் ‘தெனாலிராமன் கொடுத்தனுப்பியதாகச் சொல்லி இவ்வோலையை அரசனிடம் கொடுத்துவிட வேண்டும்’ என்று சொல்லி அவன் எழுதி வைத்திருந்த ஓலையை அவனிடம் கொடுத்தனுப்பினான். வழியில் ‘யார் கெட்டாலும் அந்த ஓலையைக் காட்டாதே!’ என்று வேறு சொல்லியனுப்பினான் ஒற்றன்.

அந்த ஆள் ஏதோ முக்கியமான விஷயமாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்து வேகமாக வழியில் எங்கும் நிற்காமல் அரண்மனைக்குச் சென்று அரசனிடம் அவ்வோலையை ஒப்படைத்தான்.

அரசர் அதை வாங்கி அவசரமாகப் படித்து பார்த்தார்; ஏதோ நூதன விஷயமாக இருக்க வேண்டும். இன்றேல் இப்படி எழுத மாட்டான் தெனாலிராமன்  என்று அதை உண்மையெனவே நம்பினார் அரசர்.

உடனே குதிரையை கொண்டுவரச் சொன்னார். அதன் மீதேறி டாக் டாக்கென வந்து சேர்ந்தார்.

வீட்டினுள்ளே மன்னன் நுழைந்தான் தாமதம்! தயாராக ஒளிந்து கொண்டிருந்த ஒற்றன் கத்தியை உருவிக்கொண்டு அரசன் மீது பாய வந்தான்.

ஆனால், அரசனோ வெறுங்கையுடனிருந்ருந்தும் தன் மீது பாய்ந்து வந்த அவன் கையைப் பிடித்து முறுக்கி கத்தியை கீழே போடும்படி செய்தார்.

அதற்குள் சத்தம்கேட்டு தெருவில் சென்று கொண்டிருந்த ஜனங்கள் எல்லாம் திபு திபு என்று உள்ளே நுழைந்து விட்டார்கள். அதன்பிறகு கேட்க வேண்டுமோ! ஆளுக்கு ஒரு தட்டு தட்ட ஆரம்பித்தார்கள் அவனை. ஒற்றன் பாடு பெரும் திண்டாட்டமாகி விட்டது.

அந்த ஒற்றன் அதே இடத்தில் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு அனுப்பப்பட்டான்.

 அவன் கோல்கொண்டா நாட்டு ஒற்றன் என்று நன்கு தெரிந்துவிட்டது.உடனே அவனைத் தீர்த்துக் கட்டிவிட்டான் அரசன்.

அரசாங்கத்து சட்டப்படி, எவனொருவனை வெளிநாட்டு ஒற்றனுக்கு இடம் கொடுக்கிறானோ அல்லது உணவிட்டு போஷிக்கிறானோ,அவனுக்கு கொலை தண்டனை கொடுத்தாக வேண்டும்!

அதனால் இப்பொழுது தெனாலிராமனல்லவா? மாட்டிக் கொண்டு விட்டான்?

“சட்டத்தை மாற்றி, உன்னை மன்னிப்பது என்பது சாத்தியமில்லை தெனாலிராமா!”

“ஆனால் உனக்கு எதுமாதிரி சாவு வேண்டும் என்று சொல் அப்படியே நிறைவேற்றச் சொல்கிறேன்” என்றார் அரசர்.

சற்று யோசித்தான்  தெனாலிராமன். மகா காளியையும் வேண்டிக் கொண்டான். உடனே அவன் மனதில் தகுந்த யோசனை உதித்தது.அவன் முகமும் பளிச்சிட்டது.

“அரசே! நான் கிழவனாக பிறகுதான் சாகவேண்டும். அது மாதிரி சாவுதான் எனக்குப் பிடிக்கிறது” என்றான் வெடுக்கென்று.

“அட போக்கிரி! தப்பித்துக் கொண்டு விட்டாயே! என விழுந்து விழுந்து சிரித்தார் அரசர்.

“நீங்களோ சிரிக்கிறீர்கள்! ஆனாள் நானோ அவனைக் கொல்ல முடியாமல் போய்விட்டதே! என்று வருத்தப்படுகிறேன்”  என்றான் தெனாலிராமன்.

“அப்படியென்றால் அவன் ஒற்றன் என்று முன்பே தெரியுமா? தெரிந்துமா அவனை உன் வீட்டில் தங்க விட்டாய்?” என்று கேட்டார் அரசர்.

அதன்பிறகு நடந்தவையனைத்தும் அர்சனுக்கு விவரித்தான்.”அவன் சொல்லிக் கொண்ட உறவு மாதிரி எனக்கு ஒருவரும் கிடையாது. இருந்தும் அவனப் பரிசோதிக்கலாம் என்று விட்டு வைத்தேன்.”

“அவன் விழிக்கிற விழியிலிருந்தும், அவன் நடந்து கொள்கிற விதத்தினின்றும் அவன் ஒற்றனாயிருக்க வேண்டும் என்று தீர்மானித்தேன்.”

“அதன் பிறகுதான் நான் திட்டம் தீட்டினேன்.”

“என்ன திட்டம் தீட்டினாய்?”

“முதலில் நான் கவிஞர்கள் மாநாடு என்று சொல்லி வெளியே புறப்பட்டேன். பிறகு என் குடும்பத்தாரும் முன் ஏற்பாட்டின்படி வெளியே கிளம்பினார்கள். அதாவது அவனைத் தனிமையில் விட்டேன்.

அன்றிரவே இரகசியமாக உங்களிடம் வந்து விஷயத்தை தெரிவித்து,உங்கள் வாளை எடுத்துக் கொண்டு போய் அவன் தலையை  சீவிடத் தீர்மானித்தேன்.

அதற்குள் அவன்முந்திக்கொண்டுவிட்டான்.

அவனைக் கொல்வதில் நீங்களும் முந்திக் கொண்டுவிட்டீகள்.

“இப்பொழுது அந்த ஒற்றனை என்னால் கொல்ல முடியாமல் போய் விட்டதே! என்று எனக்கு ரொம்ப வருத்தமாயிருக்கிறது” என்று  மூக்கைச் சிந்திப் போட்டான்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply