தெனாலிராமனுக்கு அரண்மனையில் நியமனம் கிடைத்துவிட்ட பிறகு, அவன் மிகவும் மனம் தெளிந்தான். விஜய நகரத்து அரண்மனைக்கு அவன் புதிதாக இருந்தாலும், ஏதோ அநேக ஆண்டுகளாக அங்கு பழகியவன் போல் நடந்து கொண்டான். முகத்தை உம் மென்று வைத்துக் கொண்டு அவன் எதிரில் யாரும் வரக்கூடாது.
அப்படி யாரேனும் வந்தால், அவரை வைத்துப் பேசி சிரிக்கச் செய்துதான் அனுப்பி வைப்பான். அதனால் அவன் அங்கிருந்த அனைவரிடமும் வெகு சீக்கிரத்த்ல் அறிமுகமாகி விட்டான்.நல்ல சரக்கு எங்கும் வெகு சீக்கிரத்தில் விலை போகுமல்லவா!
ஆனால் அந்த ராஜகுருவை அங்கு பார்க்கும் போதெல்லாம் தெனாலிராமனுடைய மனதில் ஒருவித புகைச்சல் ஏற்படும். எப்படியும் அந்த நயவஞ்சக ராஜகுருவை சமயம் வாய்க்கும்போது அவமானப்படுத்தி தன் வஞ்சத்தை தீர்த்துக் கொள்ள வேண்டும் என்று தீர்மானித்தான்.அதற்காக அந்த ராஜகுருவைப் பற்றி அவ்வப்பொழுது நிறைய விசாரித்துத் தெரிந்து வைத்துக் கொண்டான்.
ஆனால் அந்த வாய்ப்பு இத்தனை சீக்கிரத்தில் ஏற்படும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.
மறுநாள் அதிகாலை கோழி கூவின வேளையில் எழுந்து துங்க பத்திரா நதிக்கு குளிக்கச் சென்றான், தெனாலிராமன். அப்பொழுது அவனுக்கு முன்னால் சற்று தூரத்தில் ராஜகுருவும் சென்று கொண்டிருப்பதைக் கண்டான். அவரைப் பின் தொடர்ந்து சந்தடி செய்யாது அவருக்குத் தெரியாமல் தெனாலிராமன் சென்றான்.
ஆற்றையடைந்ததும், அங்கே அவர் வழக்கப்படி தான் உடுத்தியிருந்த துணிகள் அனைத்தையும் கரையில் அவிழ்த்து வைத்து விட்டு ஆற்றில் இறங்குவதை கண்டான்.
அதுவரை ஒளிந்து கொண்டிருந்த தெனாலிராமன் வெடுக்கென ஓடிவந்து, அந்தத் துணிகளை வாரியெடுத்துக் கொண்டு சென்றுவிட்டான். அந்தக் கும்மிருட்டு வேளையில் ராஜகுரு அதைக் கவனிக்கவேயில்லை.
ராஜகுரு சாவகாசமாக நீராடி விட்டு கரையேறினார். அங்கே அவருடைய துணிகளைக் காணாது திகைத்துப் போனார்.
அப்பொழுது கையில் அவரது துணிகளைச் சுமந்து கொண்டு தெனாலிராமன் அவர் எதிரே வந்து நின்றான். உடனே விஷயம் விளங்கி விட்டது அவருக்கு.
“ஓ தெனாலி ராமா! என் துணிகளைக் கொடு” என்று மிகுந்த வெட்கத்துடன் கேட்டார்.
“என்ன! இப்பொழுது என் பெயர் உன் ஞாபகத்திக்கு வந்துவிட்டதே! எப்படி? அன்று உம் பேட்டிக்கு வந்தபொழுது என்னைத் தெரியவே தெரியாது என்று சொல்லிவிட்டாயே எப்படி? என்று சீறி விழுந்தான்.
“என் துணிகளைக் கொடுத்துவிட்டு பேசேன்” என்றார் ராஜகுரு அப்பொழுது அவரது குரல் கம்மியது!
“உம் துணிகளா இவை! இங்கே காற்றில் அடித்துக் சென்ற துணிகளைப் பொறுக்கியெடுத்தேன்! அதுசரி! இப்படி இடுப்பில் சிறு துணிகூட இல்லாமல் குளிப்பது சரியா? இத்தனைக்கும் நீ ஒரு ராஜகுரு. எல்லாருக்கும் நீதியெடுத்து சொல்ல வேண்டிய நீயே இப்படி நடந்து கொண்டால் எப்படி?
உனக்குத் துணிகளை நான் கொடுக்கப்போவதில்லை. இந்த கோலத்துடனேயே வீட்டுக்கு நடந்து செல். வழியில் உல்ளோர் உன்னைப் பார்த்து காரி துப்பட்டும்” என்றான்.
“நீ எது சொன்னாலும் கேட்கிறேன் தெனாலிராமா! தயவு செய்து சீக்கிரம் என் துணிகளை கொடு, அவற்றை நனைத்து உடுத்துக் கொள்கிறேன். இனிமேல் அப்படிச் செய்யமாட்டேன். சீக்கிரம் கொடு இதோ வெளிச்சமாகிறது பார் என்று கெஞ்சினார்.
“இதோ பார், சொன்ன சொல் தவறக் கூடாது.என்னை உன் தோளில் சமந்து கொண்டு அரண்மனை வரை செல்ல வேண்டும், தெரியுமா? என்று சொல்லி அவர் துணிகளை விட்டெறிந்தான்.
உடனே அவற்றை நனைத்து பிழிந்து உடுத்திக் கொண்டு, விதியே என்று தெனாலிராமனைத் தோளில் சுமந்து கொண்டு அரண்மனையை நோக்கி புறப்பட்டார்.
அதற்குள் பொழுது பலபலவென்று விடியத் தொடங்கிவிட்டது. வழியில் போவோர் வருவோர் எல்லாம் அந்தக் கோலத்தைக் கண்டு சிரித்தார்கள். சிலர் அது கண்டு கை தட்டினார்கள்.
ராஜகுருவின் திருமுகம் அவமானத்தினால் சுருங்கி இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது.
ராஜகுரு தெனாலிராமனைச் சுமந்து கொண்டு அரண்மனையை நெருங்கிக் கொண்டிருந்தபோது, உப்பரிகையிலிருந்து மன்னர் கிருஷ்ண தேவராயர் அதைப் பார்த்து விட்டார்.
என்ன! நம் ராஜகுருவுக்கு இத்தனை அவமதிப்பா? என்று மிகுந்த கோபம் கொண்டார்.
உடனே அங்கிருந்த இரு சேவகரை அழைத்து ஏதோ சொல்லியனுப்பினார்.
ராஜகுருவின் தோளிலிருந்த தெனாலிராமன் அதைக் கவனித்துவிட்டான். அரசருடைய உத்தரவு எதுவாக இருக்கும் என்பதையும் ஒருவாறு உணர்ந்து கொண்டான். அவந்தான் கூர்ந்த மதி படைத்தவனாயிற்றே!
உடனே அவருடைய தோளிலிருந்து தெனாலிராமன் தொப்பென்று கீழே குதித்தான் தெனாலிராமன். ராஜகுருவின் திருப்பாத்ங்களை கெட்டியாக பிடித்துக் கொண்டான்.
“ஆ! என்ன அபசாரம் செய்தேன் நான்! மேலான மதிப்பிற்குரிய ராஜகுருவிடத்தில் இப்படி நடந்து கொண்டு விட்டேனே!” என்று கண்ணீர் விட்டான்.
‘உங்களை இப்பொழுது என் தோளில் சுமந்து சென்றால்தான் என் மனசு நிம்மதியடையும், என் பாவமும் கரையும்” என்று சொல்லிக் கொண்டே, வெடுக்கென ராஜகுருவை தோளில் சுமந்து கொண்டு நடந்தான் தெனாலிராமன்.
பாவம்! அவன் வார்த்தைகளை நம்பினார் ராஜகுரு. கம்பீரமான பார்வையுடன் ஜாம்ஜாம் என்று அவன் தோளில் பவனி வந்தார்.
அதற்குள் அரண்மனையிலிருந்து ஒடி வந்த இரண்டு சேவகர்களும் ஒன்றும் விசாரிக்காமல் தோளின் மீதிருந்த ராஜகுருவை கீழே தள்ளினார்கள். நையப்புடைக்கவும் தொடங்கினார்கள்.
“நான் இந்த அரண்மனையின் ராஜகுருவாயிற்றே உங்களுக்குத் தெரியவில்லையா?” என்று கத்தினார் அவர்.
“அதெல்லாம் எங்களுக்குத் தெரியாது தோளின் மீது உட்கார்ந்திருப்பவர் நீர்தானே! பிறகு என்ன! மன்னன் கட்டளை படிதானே நாங்கள் நடக்க முடியும்!” என்று சொல்லிக் கொண்டே மீண்டும் அச்சேவகர்கள் அவரை நையபுடைத்தார்கள்.
பிறகு அங்கேயே அவரை அடித்துப் போட்டு விட்டு தெனாலிராமனை மாத்திரம் அரண்மனைக்கு அழைத்து சென்றார்கள்.
தெனாலிராமனுக்கு உள்ளூர மிகுந்த சிரிப்பு. ஆனால் வாய்விட்டு சிரிக்க முடியாதல்லவா!
“ இவனைப் பிள்ளப்பூச்சி என்று எண்ணினோமே இவன் கொடிய விஷத் தேளாக அல்லவா இருக்கிறான்!” என்று எண்ணிக் கண்ணிர் உகுத்தார் ராஜகுரு.