குளியலறையை நமது வீட்டிற்குள் வடகிழக்கு மூலையை விட்டு விட்டுக் கிழக்குப் புறத்தில் வடக்கு சார்ந்து அமைத்துக் கொள்ளலாம். வடக்குப் பாகத்திலும் வைத்துக் கொள்ளலாம்.
தெற்க்குப் புறமும், மேற்க்குப் புறமும் வைத்து வேண்டுமாயின், குளியலறையின் தரையை மட்டும் மற்ற அறைகளைப் போல் உயர்த்த வேண்டும். தரை மட்டம் தாழ்வே கூடாது. மேற்கண்ட திசைகளில் கழிப்பிடமும், குளியலறையும் சேர்த்து அமைக்க வேண்டுமாயின் கழிப்பிடம் உயரமாக அமைக்க வேண்டும்.
ஆனால் கழிப்பிடத் தொட்டி (septic tank) தென்புறம், மேற்புறம் வரக் கூடாது. வாயுமூலை அறையில் கழிப்பிடமும், குளியலறையும் வைக்கலாம். ஈசான்யப் பகுதியில் மாத்திரம் அமைக்கக் கூடாது. காரணம், அது ஈஸ்வரன் இருக்கும் ஸ்தானமாகும்.
புனிதமான இடமாக வைத்துக் கொள்ள வேண்டும். வீட்டிற்குள் அறைக்குள் பாத்ரூம் அமைக்கும்போது (attached bathroom) அறையின் வடக்கு, கிழக்குத் திசைகளில் அமைக்க வேண்டும்.
கிழக்கு வாசல் வீடு : இந்த வீட்டிற்கு முன்புறம் ஆவரணத்தில் குளீயல் அறையை அமைத்துக் கொள்ள நினைப்பவர்கள் வீட்டிற்குக் கிழக்குப் பக்கம் பிரதான வீட்டைத் தொடாமல் வீட்டை அனுசரித்து அக்னி மூலையில் அமைக்கலாம். வீட்டிற்கும், குளியலறைக்கும் உள்ள வெற்றிடம், குளியலறைக்கும், கிழக்கு மதிற்சுவருக்கும் இடையில் உள்ள காலியிடம் அதிகமாகயிருக்க வேண்டும். மேற்குப் பகுதியில் இடமிருந்தால் மேற்கு மதிற்சுவரின் மீதிருந்து கிழக்கிற்கு வீட்டைத் தொடாமல் தாழ்வாரம் இறக்கி அதில் குளியலறை அமைக்கலாம்.
தெற்கு வாசல் வீடு : தெற்கு வாசல் வீட்டிற்குப் பின்புறம் வீட்டு ஆவரணத்தின் வடக்கு வாயு மூலையில் பிரதான வீட்டைத் தொடாமல் குளியல் அறையை அமைக்கலாம். பிரதான வீட்டிற்கும் குளியலறைக்கும் இடையேயுள்ள வெற்றிடத்தைவிட, குளியலறைக்கும் மதிற்சுவருக்கும் இடையேயுள்ள இடம் அதிகமாக இருக்கும்படி அமைத்துக் கொள்ள வேண்டும். இதே போல் கிழக்கு அக்னி மூலையிலும் கட்டிக் கொள்ளலாம்.
மேற்குத் திசை வாசல் வீடு , வடக்குத் திசை வாசல் வீடு : மேற்கு வாசல் வீடுகளுக்குப் பின்புறம் கிழக்கு வாசல் வீட்டிற்குக் குறிப்பிட்டதைப் போன்றே அமைத்துக் கொள்ளலாம். அல்லது தெற்கு வாசல் வீட்டிற்குச் சொன்னதைப் போல் வடக்கு வாயு மூலையில் அமைக்க வேண்டும். வடக்குப்புற வாசல்களுக்கு, தெற்கில் இடமிருந்தால், தெற்கு மதில்சுவரிலிருந்து வடக்கிற்கு முக்கிய கட்டடத்தைத் தொடாமல் தாழ்வாரம் இறக்கி அதில் குளியலறை அமைக்கலாம். குளியலறையுடன் கழிப்பறையும் (closet) சேர்த்து அமைக்கலாம். ஆனால் septic tank தனிமுறைப்படிதான் அமைக்க வேண்டும் .