கிணற்றுக்குள் வைர மோதிரம் - அக்பர் பீர்பால் கதைகள்

ஒரு நாள் அதிகாலையில், சக்ரவர்த்தி அக்பரும், பீர்பாலும் வெளியே உலாவக் கிளம்பினர்.

அக்பர் கோடையின் கொடுமையைப் பற்றி பேசிக்கொண்டே செல்லும் போது வழியில் ஒரு கிணறு கண்ணில் பட்டது. அந்த கிணற்றில் தண்ணீர் இருக்கிறதா? என்று எட்டிப்பார்த்தார் அக்பர். அது ஆழமான கிணறு என்பதால் தண்ணீர் இருப்பதை அறிய முடியவில்லை.

பீர்பால், பிரபு! தண்ணீர் இருக்கிறதா? என்று அறிய ஒரு கல்லைத் தூக்கிப் போட்டுப் பார்த்தால் தண்ணீர் இருந்தால் கல்பட்டு தெளிக்கும் என்றார்.

பீர்பால் சொல்லிக்கொண்டே, கிணற்றினுள் ஒரு கல்லை எறிந்தார். பீர்பால்! கிணற்றினுள் ஒற்றைக் கல்லாகப் போடக் கூடாதென்று சொல்லுவார்கள். அதனால் இன்னொரு கல்லை நான் போடுகிறேன் என்று சொல்லிக் கொண்டே, தன் விரலில் இருந்த ஒரு வைர மோதிரத்தை அக்பர் கிணற்றினுள் போட்டார்.

பீர்பால் வைர மோதிரத்தை எதற்காகப் போட்டீர்கள் என்று கேட்க, வைரமும் ஒரு கல்தான். அதனால்தான் போட்டேன் என்றார் அக்பர்.

பீர்பால், கிணற்றுள் இறங்கினால் யார் வேண்டுமானாலும் மோதிரத்தை எடுத்து விடலாம் என்றார். அதற்கு அக்பர் யாராவது கிணற்றுக்குள் இறங்காமலே அந்த மோதிரத்தை எடுக்க முடியுமா? என்று கேட்டார்.

பீர்பால் என்னால் முடியும் என்றார். அக்பர் எப்படி என்றார்.

பீர்பால் ஒரு நூலை எடுத்து அதன் ஒரு முனையில் கல் ஒன்றக் கட்டினார். அந்தக் கல்லை கிணற்றுக்கடியில் இருந்த ஈரமான சாணத்தில் நன்றாக முக்கினார். நூலின் மறுமுனையை கிணற்றுக்கருகே இருந்த ஒரு மரத்துடன் சேர்த்துக் கட்டினார்.

சாணத்துடன் இருந்த கல்லை கிணற்றுக்குள்ளிருந்த வைரக்கல் மீது குறிபார்த்து எரிந்தார். அந்த கல் வைர மோதிரத்தின் மீது நன்றாக ஒட்டிக் கொண்டது.

பீர்பால் காவலாளிகளை வரவழைத்து மாலை வரை பத்திரமாக பார்த்துக்கொள்ளும்படி கட்டளையிட்டு விட்டு வீடு திரும்பினார்.

பீர்பால் மாலையில் வந்து பார்க்கும் பொழுது சாணம் வெயிலில் நன்றாகக் காய்ந்து உலந்திருந்தது. அதன் மீது அவர் வீசிய கல்லும் மோதிரமும் சாணத்துடன் நன்றாக ஒட்டிக் கொண்டிருந்தது.

நூலைப் பிடித்து மேலே இழுக்க, கல் கிணற்றுக்குள் இருந்து மேலே வந்துவிட, மோதிரத்தை எடுத்து, சுத்தமாகக் கழுவியபின் மோதிரத்தை எடுத்துக்கொண்டு அரண்மனைக்கு சென்று அக்பரிடம், பிரபு! நான் வெற்றிகரமாகத் தங்கள் மோதிரத்துடன் வந்திருக்கிறேன் என்றார்.

பீர்பாலிடம் எப்படி சாத்தியமானது அக்பர் ஆவலுடன் கேட்க, மூளையைப் பயன்படுத்தினால் முடியாதது ஒன்றுமில்லை என்று நீங்கள் சொன்னதை நிரூபித்து காட்டினேன் என்றார். மோதிரத்தை எப்படி கிணற்றுக்குள் இறங்காமல் எடுத்ததைப்பற்றி அக்பரிடம் விளக்கமாகக் கூறினார்.

அக்பர் விளக்கத்தைக் கேட்டவுடன், சபாஷ்! உன்னைப் போல் புத்திசாலியை நான் பார்த்ததே இல்லை! என்று பாராட்டிய அக்பர் பொற்காசுகள் நிரம்பிய பையை பீர்பாலுக்குப் பரிசளித்தார்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply