அந்தப் புது மாளிகை அப்பொழுதுதான் கட்டி முடிக்கப் பட்டிருந்தது. பார்ப்பவர்கள் எல்லோரும் அதன் அழகைக் கண்டு மிகவும் மகிழ்ந்தார்கள்.
அரசர், அரண்மைப் பிராதனிகள் அனைவரையும் அழைத்துச் சென்று அப்புது மாளிகையை சுற்றிக் காண்பித்தார்.
அவர்கள் கூடவே தெனாலிராமனும் சென்றிருந்தான்.
உள்ளே சுவரெங்கும் ஆங்காங்கே அழகு வண்ணங்களில் நேர்த்தியான சித்திரங்கள் வரையப்பட்டிருந்தன. அனைவரும் அவற்றைப் பார்த்து மிகவும் ரசித்தனர்.
ஆனால் தெனாலிராமனோ, அவற்றையெல்லாம் பார்த்து ‘ச்சூ’ என்று சூள் கொட்டிக் கொண்டான்.
“என்ன! சலித்துக் கொள்கிறாய்? இச்சித்திரங்கள் எல்லாம் பிடிக்கவில்லையா?” என்றார் மன்னர்.
“எப்படி பிடிக்கும்? இந்தச் சித்திரங்களில் உள்ளவர்களுக்கெல்லாம் ஒரு உடம்பு பகுதி தானே தெரிகிறது! மற்றொரு பகுதியைக் காணோமே! இவற்றை எப்படி ரசிப்பது?” என்றான்.
சாப்பாட்டு ராமா!
“அட சாப்பாட்டு ராமா! அவையெல்லாம் கற்பனை செய்துகொள்ள வேண்டுமடா!” என்று சொல்லி அரசர் சிரித்தார். அவர் கூடவே மற்றவர்களும் சிரித்தனர்.
இதன் பிறகு ஒரு மாதம் ஓடி மறைந்தது.
தெனாலிராமன் மன்னரிடம் சென்றான். “இத்தனை நாட்களாக நான் அரண்மனைக்கு அடிக்கடி வந்திருக்கமாட்டேனே! கவனித்தீர்களா!”
“ஆமாம், ஆமாம். நேற்று கூட உன்னைப் பற்றி விசாரித்தேன். ஏன் அப்படி?”
“நான் இத்தனை நாட்களாக சித்திரம் வரைய கற்றுக்கொண்டேன். நல்ல தேர்ச்சியும் பெற்றுவிட்டேன். உங்கள் அரண்மனை சைத்ரிகர்கள் எல்லாம் இப்பொழுது என்னிடம் பிச்சை வாங்க வேண்டும். தெரிகிறதா?” என்றான் அவன்.
உண்மையாகவா!” என்று அரசர் மிகவும் வியந்து போனார்.
“சித்திரமும் கைப்பழக்கம் தானே!”
“அப்படியென்றால் நல்லதாய்ப் போயிற்று. ஒன்று செய். என்னுடைய கோடை கால வாசத்துக்காக ஆற்றங்கரையில் நேற்றுதான் மாளிகை ஒன்று கட்டி முடிந்துள்ளது. நீ உடனே அங்கு சென்று உன் கைவரிசையைக் காட்டு; பார்ப்போம்” என்றார் அரசர்.
“ஆகா! அப்படியே செய்கிறேன்” என்று சந்தோஷமாக ஒப்புக் கொண்டான் அவன்.
சித்திரம் வரையும் வேலை:
மறுநாளே அந்த மாளிகைக்குச் சென்றான். தன் சித்திரம் வரையும் வேலையையும் அன்றே ஆரம்பித்து விட்டான். அடிக்கடி யாராவது வந்து தொந்தரவு கொடுக்கப் போகிறார்கள் என்று அந்த மாளிகையை எப்பொழுதும் சாத்தியே வைத்துக் கொண்டான்.
பத்து இருபது நாட்கள் பறந்தோடிச் சென்றன! அரணமனைக்கு வந்தான் தெனாலிராமன். அனைத்து சித்திரங்களையும் வரைந்து முடித்துவிட்டதாகச் சொல்லி அவற்றைக் காட்ட அரசரை அழைத்துச் சென்றான்.
அரசரும் தெனாலிராமனின் கைவண்ணத்தைக் காணச் சந்தோஷமாகச் சென்றார்.
மன்னரின் கோபம்:
அம்மாளிகையின் உள்ளே சுவர்களில் ஆங்காங்கே மனிதனுடைய கையும் காலும் பல்லும் வாயும் மூக்கும் காதும் தனித்தனியே வரையப்பட்டிருந்தன.
அவற்றைப் பார்த்ததும் அரசருக்கு தாங்கொணாக்கோபம் எழுந்தது!
“என்னடா இது! இந்த மாளிகையை குட்டிச் சுவராக ஆக்கிவிட்டாயே! இதுதான் உன் கை வண்ணமா!” என்று கத்தினார் மன்னர்.
“அப்படிச் சொல்லதீர்கள்! மன்னவா! இதோ வாய் தெரிகிறது பாருங்கள். இதைத் பார்த்ததும் இந்த மனிதனுடைய மற்ற அவயவங்களையெல்லாம் நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.
இதோ மூக்கு தெரிகிறது பாருங்கள். இந்த மனிதனுக்காக மற்ற உறுப்புகளை நீங்கள் கற்பனை செய்து கொள்ள வேண்டும்.
“இங்குள்ள ஒவ்வொரு உறுப்பின் பின்னாலே, நம் கற்பனையின் சிகரமே அமைந்துள்ளது. முன்பு வந்து நான் பார்த்த அந்த மாளிகையில் என்னை இப்படிதானே செய்யச் சொன்னீர்கள்! இதற்குள்ளாகவா மறந்து போய் விட்டீர்கள்!” என்று சாவகாசமாய்ச் சொன்னான் தெனாலிராமன்.
“இமாளிகையின் அழகான சுவர்களையெல்லாம் கெடுத்ததோடல்லாமல் பேச்சு வேறயா உனக்கு?” என்று கருவினார் மன்னர். மீசை துடித்தது அவருக்கு.
உடனே தன்னுடன் சேவகர்களை அழைத்து “வர வர இவன் உபத்திரவம் சகிக்க முடியவில்லை. அதனால் இவனை இழுத்துக் கொண்டு போய் சிரச்சேதம் செய்துவிடுங்கள்!” என்று உத்தரவிட்டார் மன்னர்.
ஒன்றும் சொல்லத் தோன்றாது நின்றான் தெனாலிராமன். வழக்கப்படி மகாகளியைத்தான் நினைத்துக் கொண்டான்
முன்பு ஒரு சமயம் அந்த இரண்டு சேவர்களும் தெனாலிராமனால் ஏதோ காரணத்தினால் தண்டனையடைந்தவர்கள். பிறகு கேட்க வேண்டுமா?
“ஐயோ! அகப்பட்டுக் கொண்டீரா தெனாலிராமரே!” என்று ஏளனமாகப் பேசி, சந்தோஷமாக அழைத்துச் சென்றார்கள்.
சமயத்திற்கு தகுந்தாற்போல் நடட்ந்துகொள்ள வேண்டுமென்று எண்ணினான் தெனலிராமன்.
கெஞ்சிய தெனாலிராமன்:
அதனால் தன்னை விட்டு விடும்படி அவர்களை மிகவும் கெஞ்சினான். அவ்வளோ அவன் மீது எரிந்து விழுந்தார்கள்.
“சரி, அப்ப்டியென்றால் ஒன்று செய்யுங்கள். இடுப்பளவு தண்ணீரில் இதோ ஓடிக் கொண்டிருக்கிற ஆற்றுத் தண்ணீரில் நின்று ஒரு நாழிகை மகாகாளியைத் தொழுவதற்க்காகவாவது அனுமதியுங்கள். போகிற இடமாவது புண்ணிய இடமாகக் கிடைக்கட்டும்!” என்று அழாத குறையாய் மிகுந்த தாழ்மையுடன் கேட்டுக் கொண்டான் தெனாலிராமன்.
அச்சேவகர்கள் அவன் வார்த்தைகளை நம்பவில்லை. “ஏன்! அப்ப்டியே கம்பி நீட்டிவிடலாம் என்று எண்ணுகிறாயா!” என்று கேட்டார்கள்.
“சே! சே! அப்படியொன்றுமில்லை. அத்தனைக் கேவலமாக நான் நடந்து கொள்ள மாட்டேன். நீங்களும் என்னோடு கத்தியை உருவிக் கொண்டு பக்கத்துக்கு ஒருவராகத் தயாராய் நில்லுங்கள்.
“என் ஜபத்தை முடித்துக் கொண்டது ‘உம்’ என்று குரல் கொடுக்கிறேன். உடனே என் கழுத்தின் மீது உங்கள் கத்தியை பாச்சிடலாம்” என்றான்.
அது கேட்ட அச்சேவகர்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக் கொண்டார்கள். ‘இத்தனை தூரம் சொலிகிறானே! அனுமதித்துத்தான் பார்ப்போம்’ என்று முடிவுக்கு வந்தார்கள். ‘சரி! அப்படியே ஆகட்டும்’ என்றும் சம்மதித்தார்கள்.
தெனாலிராமன் மெதுவாக நடந்தான். ஆற்றிலிறங்கினான். கண்களை மூடிக் கொண்டு மகாகாளியை தொழுதான்.
சேவகர்களோ அவன் சொல்லியபடியே கையில் கத்தியை உருவிக் கொண்டு பக்கத்துக்கொருவராகத் தயாராய் நின்றார்கள் ஆற்றில்.
மகாகாளி வருகை:
மகாகாளியை ஆழ்ந்து துதித்தான் தெனலிராமன். வெகு நேரம் கழித்து “உம் வெட்டுங்கள்” என்று சொல்லிக் கொண்டே வெடுக்கென ஆற்றுத் தண்ணீரில் மூழ்கி விட்டான்.
அவன் வாயிலிருந்து அந்த வார்த்தைகளை வந்ததுமே ஏக சமயத்தில் கத்தியை வீசினார்கள்.
அங்கு தெனலிராமன் இல்லாததால், ஒருவர் ஒருவர் வெட்டிக் கொண்டு இருவருமே மாண்டு விழுந்தார்கள்.
ஆற்றில் அமிழ்ந்த தெனலிராமன் நீந்திக்கொண்டே வந்து கரையை அடைந்தான். நனைந்த துணியைப் பிழிந்து உலர்த்தி அணிந்து கொண்டான். நெற்றியிலும், மார்பிலும், கரங்களிலும் பட்டை பட்டையாக பளிச்சென திருநீறு அணிந்து நெற்றியில் சந்தனப் பொட்டு துலங்க பளிச்சென அரசர் முன் தோன்றினான் தெனலிராமன்.
கோபம் தனித்த அரசர்:
“இத்தனை நாழிகைகள் மன்னரது கோபம் தணிந்திருக்கும் என்ற நம்பிக்கையுடன் வந்திருக்கிறேன்’ என்றான். அரசர் ஆச்சரியத்துடன் நிமிர்ந்து பார்த்தார்.
“ஒரு மனிதனுடைய உயிர், ஒரு சுவரை விட உயர்ந்ததல்லவா அரசே! என்று வினயமாய்க் கேட்டான். “நான் உத்தரவு இட்ட பிறகு அப்படித்தான் நினைத்தேன்” என்றார் மன்னர்.
“அது சரி! எப்படி தப்பித்து வந்தாய்?”
“எனக்காக அவ்விரு சேவகர்களும் உயிரை தியாகம் செய்து விட்டார்கள் என்று கூறி சிரித்துக் கொண்டான்.