கட்டிடத்திற்கு பயன்படும் மரங்கள்

பொதுவாக ஒரு வீட்டைக்கட்டும் போது மரத்தினால் செய்யப்பட்ட பொருள்கள் அதிகமாக  உபயோகப்படுத்தப்படுகின்றன.
கதவு, ஜன்னல், கதவிற்கான ஃபிரேம், ஜன்னலுக்கான ஃபிரேம், வாசற்கால், உத்திரம் போன்றவை மரத்தினால் உருவாக்கப்படுகின்றன.

ஆனால் அத்தகையை பொருள்களைத் தயாரிப்பதற்காக மரங்களை வாங்குபோதும் கவனமாக இருக்க வேண்டும். மரங்களின் தன்மைகேற்ப அவற்றைப் பயன்படுத்த வேண்டும்.

மரங்களை மூன்று வகையாகப் பிரிக்கலாம். 1. ஆண் மரம், 2. பெண் மரம், 3. அலி மரம்.

மூன்று வகையான மரங்களும் எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது அவசியமாகும்.

ஒரே சீரான அளவுடன் உருண்டு திரண்டு கரடு முரடு இல்லாமல் தூணைப்போல் ஒழுங்கான அமைப்பைப் பெற்றிருக்கும் மரம் ஆண் மரமாகும்.

அடிப்பகுதி பருமனாகவும் நுனிப்பகுதி சிறுத்தும் குறுகியும் அமைந்து இருப்பதால் அது பெண் மரமாகும்.

அடிப்பாகத்திலிருந்து நடுப்பகுதி வரை சிறுத்தும் குறுகியும் நுனிப்பகுதி மட்டும் பருத்தும் அமைந்திருந்தால் அது அலி மரமாகும்.

தூண்கள், கால் போன்றவற்றை அமைப்பதற்கு ஆண் மரங்களே  பயன்படுத்தபட வேண்டும். அப்போது தான் நற்பலன்களாக நடைபெறும். குறுக்குச் சட்டகளாகவும்  உத்திரங்களாகவும் பயன்படுத்துவதற்குப் பெண் மரங்களே சிறந்தவையாகும்.

விட்டம், சட்டங்களை அமைக்க அலி மரங்கள்  ஏற்றவை.

பொதுவாக தேக்குமரம் அதிகமாக உபயோகப்படுத்தப் பட்ட வீட்டில்  வாழ்பவர்களுக்கு அதிகாரம் செய்யக்கூடிய பதவிகள் கிடைக்கும். மிகவும் ஆடம்பரமாக வாழ்வார்கள்.

மாமரம் அதிகமாகப் பயன் பட்டிருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்குத் தெய்வீக அருள்கிட்டும்.

இலுப்பை மரம் அதிகமாக உபயோகப் படுத்தப்பட்டிருந்தால் அவ்வீட்டில் வசிப்பவர்கள் வியாபாரம் அல்லது தொழிலில் சிறந்த விளங்கி நிறைய லாபம் சம்பாதிப்பார்கள்.

வேப்பமரம் அதிகமாகப் பயன்படுத்தப்பட்ட வீட்டில் வாழ்பவர்களுக்கு அறிவு பெருகும். பல வகையான கலைகளில் தேர்ச்சி பெற்றவர்களாக விளங்குவார்கள்.

வேங்கைமரம் உபயோகப்படுத்தப்பட்ட வீட்டில் வாழ்பவர்கள்  விவசாயத் துறையில் நல்ல வருமானம் தேடிக் கொள்வார்கள்.

கட்டட வேலைக்குப் பயன்படுத்தக் கூடாதவை என்று சில மரங்கள் இருக்கின்றன. அந்தப் பட்டியலில் அரசு, ஆல், அத்தி, நாவல், நெல்லி, புளி, பனை, இலந்தை, எட்டி, விளா, பீலி, பூவரசு, மகிழம் முதலான மரங்கள் இடம் பெறுகின்றன.

அவற்றைப் பயன்படுத்தினால் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு வறுமை நிறைந்த வாழ்க்கை அமையும். பொருளாதார வீழ்ச்சி உண்டாகும்.

அதே போல் ஆலயங்களில் வளர்ந்த மரங்கள், சுடுகாட்டு எல்லைக்குள் வளர்ந்த மரங்கள், தீயால் பாதிக்கப்பட்ட மரங்கள், காற்றில் விழுந்த மரங்கள், மழை நீரால் கெட்டுப்போன மரங்கள் போன்றவற்றையும்  கட்டட வேலைக்காக உபயோகப்படுத்தக் கூடாது.

அவ்வாறு உபயோகப்படுத்தினால் அவ்வீட்டில் வசிப்பவர்களுக்கு வறுமை நிறைந்த வாழ்க்கை அமையும். ஆயுள் குறையும். வியாதிகளால் பாதிப்புகள் உண்டாகும்.

வீட்டில் வளர்க்கக்கூடாதவை எனவும் சில மரங்கள் உள்ளன. அப்பட்டியலில் பருத்தி, புளி, நாவல், நெல்லி, எருக்கு, அகத்தி, பனை போன்ற மரங்களைச் சேர்த்துக் கொள்ளலாம்.

அவற்றை வளர்த்தால் கையிலிருக்கும் சேமிப்பு முழுவதும் கரைந்து போகும். வறுமை, தொல்லை கொடுக்கும்.

இதையும் படிக்கலாமே!: வீட்டில் பணம் சேர்க்க முடியவில்லை?

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply