எடை போடும் தராசு – சிறுகதை

ஒரு நாள் ஜென் துறவி ஒருவர் ரேடியோவில் பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்தத் துறவியை ஒருவர் பார்க்க வந்தார். யாருடைய பாட்டைக் கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்? என்று கேட்டார்.

குரலைக் கேட்டால் தெரியவில்லையா? என்று சிரித்தார் ஜென் துறவி. பின்னர் அந்தப் பாடகரின் பெயரைச் சொன்னார்.

அவரா? அந்த ஆள் சரியான தண்ணி பார்ட்டியாச்சே. விஸ்கி வாசம் இல்லாம மேடை ஏறமாட்டாராமே!

அதனால் என்ன? அவருடைய குரல் அற்புதமா இருக்கு. அது நமக்குப் போதாதா? என்றார் அந்த ஜென் துறவி.

சிறிது நேரம் கழித்து இன்னொருவர் அதே ஜென் துறவியைப் பார்க்க வந்தார்.

ரேடியோவில் ஒலித்துக்கொண்டிருக்கிற குரலைக் கேட்டவுடன் சட்டென்று அந்தப் பாடகரின் பெயரைச் சொல்லி அவர்தானே? என்று விசாரித்தார்.

அவரேதான். உங்களுக்கு அவரைப் பிடிக்குமா?

ரொம்பப் பிடிக்கும்! என்றார் அவர். இனிமையான குரல். ஒவ்வொரு பாட்டையும் அனுபவித்துப் பாடுவார். அவர் மிகப் பெரிய திறமைசாலி!

அதெல்லாம் போகட்டும், ஆனா அந்தாள் சரியான தண்ணி பார்ட்டியாமே! என்று அவரைப்பார்த்துக் கேட்டார் ஜென் துறவி. இதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒரு சீடனுக்கு மனதில் ஒரு குழப்பம் ஏற்பட்டது.

ஜென் துறவி தனியே இருக்கும்போது ரகசியமாக அவரிடம் வந்து கேட்டான் அந்த சீடன், குருவே, முதல் ஆள் அந்தப் பாடகரைக் குடிகாரர் என்று சொன்னபோது நீங்கள் அவருடைய திறமையைப் பாராட்டி பேசினீர்கள். ஆனால் இரண்டாவது ஆள் அவருடைய திறமையைப் புகழ்ந்தபோது அவர் குடிகாரர் என்று சொல்லி அவமானப்படுத்தி பேசினீர்கள், இது என்ன நியாயம்? என்று கேட்டான்.

அதற்கு குரு மெல்லமாகச் சிரித்தார். காய்கறிகளை எடை போடுவது கடைக்காரன் வேலை. அந்தத் தராசில் மனிதர்களை ஏற்றி நிறுத்தினால் உடைந்துவிடும் என்றார். அதனால்தான் யார் யாரை எடைபோட்டாலும் நான் குறுக்கிட்டு ஏதாவது பேசி அந்த விமர்சனத்தை நேர் செய்துவிடுகிறேன்.

சீடன், குரு கூறிய பதிலைக் கேட்டு மெய்சிலிர்த்துப் போனான். சீடன் குருவைப்பார்த்து குருவே, நீங்கள் பெரிய மேதை என்றான். சரி,போய் உன்னுடைய வேலைகளைப் பார் என்றார் ஜென் துறவி.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply