அக்பர் ஒரு நாள் இரவில் நகர்வலம் வருவதற்காகக் கொள்ளைக் காரனைப்போல மாறுவேடம் அணிந்து கொண்டு, அவரின் உருவத்தை கண்ணாடியில் பார்த்தார். அவருக்கே ஆச்சர்யமாக இருந்தது. அவரை யார் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு வேடம் பொருத்தமாக இருந்தது. பீர்பாலையும் துணைக்கு அழைத்துச் செல்லலாம் என்று நினைத்து பீர்பாலின் வீட்டிற்குச் சென்றார்.
பீர்பாலிடம் இதே வேடத்துடன் சென்று தான் யார் என்பதைச் சொல்லாமல் விளையாடிப் பார்க்கலாம் என்று தோன்றிற்று. பிறகு பீர்பாலின் வீட்டிற்கு சென்று கதவைத் தட்டினார். வெளியே வந்து பார்த்த பீர்பால் யார் என்று தெரியாமல் சிறிது தடுமாறினார். சற்று நிதானித்துப் பார்த்தப் பிறகு அவருக்கு வந்திருப்பது மன்னர் என்பதை புரிந்து கொண்டார்.
அக்பர் தன் குரலை மாற்றி, உன்னிடம் இருக்கும் விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் கொடுத்து விடு இல்லா விட்டால் உன்னை கொலை செய்து விடுவேன் என்று பீர்பாலை மிரட்டினார்.
பீர்பால் சிரித்துக் கொண்டே மன்னர் அவர்களே! என்னிடம் விலை உயர்ந்த பொருள் என்றால் அது என் உள்ளம் தான். அதை ஏற்கெனவே தாங்கள் கொள்ளையிட்டு விட்டீர்கள்.
நீ பலே ஆளய்யா… நான் எவ்வளவோ சிரமப் பட்டு மாறுவேடம் பூண்டு வந்தாலும் ஒரே நொடியில் நீர் கண்டு பிடித்து விடுகிறீர்கள் என்று பாராட்டினார் அக்பர்.