இப்படி ஒரு பூனையா? - தெனாலிராமன் கதைகள்

ஊரி நாளுக்கு நாள் எலிகளின் உபத்திரவம் அதிகமாகிக் கொண்டே வந்தது.

இரவு என்றில்லை. பகல் என்றில்லை! அந்த அந்தப் பண்டங்களைக் கடிப்பதும்,துணிகளைக் கிழிப்பதுமாக இருந்தன எலிகள். ஊர் மக்கள் சும்மாயில்லை. எலிபொறி வைத்து பிடிப்பது, தடியெடுத்து அடிப்பதுமாக இருந்தார்கள். பிரயோஜனமில்லை அவை ஒன்றா இரண்டா? நூற்றுக்கணக்கான, ஏன் ஆயிரக்கணக்கான எலிகள் ஊரெங்கும், வீடெங்கும் திரிந்து கொண்டிருந்தன. பண்டங்களைப் பாழ் பண்ணிக் கொண்டிருந்தன.

இப்படி அந்நகரத்தின் மேல் படையெடுத்திருந்த எலிகளின் உபத்திரம் அரசர் செவிக்கு எட்டியது.

“ஊர் மக்கள் இப்படி உபத்திரப்படுவதை நீட்டிக்க விட முடியுமா? எப்படியும் இதைப் போக்க வேண்டுமே!” என்று ஆழ்ந்து யோசித்தார் மன்னர்.

“பூனை எலிகளுக்கு எதிராயிற்றே! ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பூனையை வளர்க்க ஏற்பாடு செய்தால் என்ன!” என்ற எண்ணம் உதித்து அவருக்கு.

உடனே அநேகப் பூனைகளை எங்கெங்கிருந்தோ கொண்டு வர ஏற்பாடு செய்தார். வீட்டுக்கு ஒன்றாகக் கொடுத்து வளர்க்கச் செய்தார்.

அப்பூனையை நன்கு வளர்க்க பால் வேண்டுமே! அரசாங்கத்து பால் பண்ணையிலிருந்து நாள்தோறும் பூனை வளர்ப்பதற்கான பாலை இனாமாகவே பெற்றுக் கொள்ளும்படி உத்தரவிட்டார் அரசர்.

மக்கள் இந்த ஏற்பாட்டை மிகவும் வரவேற்றார்கள்.மன்னரைப் புகழ்ந்தார்கள்.

மற்றவர்களை போலவே தெனாலிராமனும் ஒரு பூனையை வாங்கி வந்து வளர்க்கத் தொடங்கினான்.உள்ளூர அது அவனுக்குப் பிடிக்கவில்லை.வீட்டிலிருக்கும் பூனை சும்மாயிருக்குமா! அங்கங்கே அசிங்கப்படுத்தி வைக்கும். அவற்றையெல்லாம் சுத்தப்படுத்தி வீட்டை அடிக்கடி கழுவ வேண்டியிருக்கும் என்றெல்லாம் அலுத்துக் கொண்டான்.இருந்தாலும் அரசர் உத்தரவை புறக்கணிக்க முடியுமா?

முதல் நாளே, அரசாங்கத்துப் பால் பண்ணையிலிருந்து வாங்கி வந்த பாலை நன்கு கொதிக்க வைத்தான். அப்படியே ஆவி பறக்க கொதிக்கும் பாலை ஒரு கிண்ணத்தில் ஊற்றி பூனையிடம் வைத்தான்!

மிகவும் பசியாயிருந்த அந்தப் பூனையும் அதி ஆவலாய் ஓடி வந்தது.                                                    ‘வெடுக்’கென அப்பால் கிண்ணத்தில் தன் நாக்கை விட்டுத் துழாவியது.

கொதிக்கும் பால் பூனையின் மெல்லிய நாக்கை நன்றாய்க் தீய்த்துவிட்டது.  வேதனை பொறுக்க முடியாமல் கத்திக் கொண்டே பூனை ஓடிவிட்டது.

அதன்பிறகு அந்தப் பூனை பால் எங்கிருந்தாலும் அந்தப் பக்கம் திரும்பிக் கூடப் பார்ப்பதில்லை! பாவம்! அதன் நாக்கு இன்னும் புண்ணாகத்தானிருந்தது!

ஆனால் தெனாலிராமனோ வழக்கப்படி அரசாங்கத்துப் பால் பண்ணையிலிருந்து நாள் தவறாமல் பூனைகென்று பால் வாங்கிவந்தான்.

அந்தப் பாலை நன்றாய் காய்ச்சி சர்க்கரை போட்டுத் திருப்தியாய் சாப்பிட்டு ஏப்பம் விட்டுக் கொண்டிருந்தான்.

ஊரில் சிலர் எலி உபத்திரம் குறைந்திருக்கிறது என்றார்கள்.

வேறு சிலரோ எலிகள் உபத்திரம் போய் இப்பொழுது பூனை உபத்திரம் தொடங்கிவிட்டது என்றார்கள்.

ஆனால்  தெனாலிராமனோ “எங்கள் வீட்டில் எந்த உபத்திரமும் இல்லை” என்றான்.

நாட்கள் ஓடின.மாதங்கள் மறைந்தன. நாலைந்து மாதங்களுக்குப் பிறகு, ஊர் மக்கள் பூனையெல்லாம் சரியாக காப்பாற்றி வருகிறார்களா என்று மன்னர் பரிசோதிக்கத் தொடங்கினார்.

ஒவ்வொருவர் வீட்டிலும் பூனைகளை நன்றாய் கொழுகொழு வென்றே இருந்தன.

ஆனால் தெனாலிராமன் வீட்டில் வளர்ந்த பூனை பாத்திரம் எலும்பும் தோலுமாக”பொடுக்பொடுக்” கென்று உயிரை வைத்துக் கொண்டிருந்தது.

அதைக் கண்டதும் பரிதாபத்தோடு  கோபமும் வந்துவிட்டது அரசருக்கு.

‘ஓய்! நீ என்ன பூனைக்குப் பால் வைப்பதே இல்லையா! எல்லா வீட்டிலேயும் பூனைகளை நன்கு வளர்ந்திருக்க, உன் வீட்டில் மாத்திரம் இப்படி இருப்பானேன்!” என்று இரைச்சல் போட்டார் மன்னர்.

“அரசே! அதற்கு நான் என்ன செய்வது! அது பாலைத் தொட்டால்தானே! நான் தவறாமல் அதற்கு பால் வைத்து வருகிறேன். அந்தப் பூனை தான் அதைத் திரும்பிக்கூடப் பார்க்காமல் எட்டிச் சென்று விடுகிறது!” என்று கைகட்டு வாய் புதைத்து என்றுமில்லாத மரியாதையுடன் அரசரிடம் பேசினான் தெனாலிராமன்.

“என்ன பூனை பாலைத் தொட்டுவதில்லையா? என்னை ஏமாற்றப் பார்க்கிறாயா?” அரசர் குரலில் சற்று கடுமை தெனிந்தது.

“இல்லை அரசே! நான் சொல்வது உண்மை!’

“சரி! அப்படியென்றால் நான் அதை இப்பொழுதே பரிசோதித்துப் பார்த்துவிடுகிறேன்.

“நீ சொல்வது போல் அது பாலைக் குடிக்காமல் போனால் ஒரு பை பணம் பரிசாகக் கிடைக்கும்! ஆனால் பாலைக் குடித்து விட்டாலோ உனக்கு நூறு கசையடிதான் பரிசாக கிடைக்கும்” என்று கண்டித்துப் பேசினார் மன்னர்.

“சரி, அரசே! அப்படியே செய்யுங்கள். எனக்கு எப்படியும் இன்று பணப்பை பரிசாகக் கிடைக்கும்” என தன் கரங்களைத் தட்டிக் கொண்டான் தெனாலிராமன்.

உடனே மன்னரே ஒரு கிண்ணத்தில் பாலை ஊற்றி அந்தப் பூனையிடம் கொண்டு போய் வைத்தார்.

அது பால் என்று மோப்பம் பிடித்ததுதான் தாமதம்! பூனை அங்கிருந்து ஒரே ஓட்டம் பிடித்தது!

அப்படியும் அரசர் அந்தப் பூனையை விடவில்லை. ஓடிச் சென்று பிடித்து வந்தார். பால் கிண்ணத்தை வாயருகிலும் கொண்டு போனார்.

ஆனால் அப்பூனையோ, “மியாவ்! மியாவ்!” என்று கத்திக் கொண்டே மன்னரிடமிருந்து திமிறிக் கொண்டு ஓடிவிட்டது.

“வெற்றி! வெற்றி! எனக்குத்தான் வெற்றி! பணப்பை பரிசை எப்படி என்னிடம் கொண்டு வாருங்கள்!” என்று கைதட்டி ஆர்பரித்தான் தெனாலிராமன்.

“இருக்கட்டும் நீ என்னதான் செய்திருக்கிறாய் இந்தப் பூனையை என்று பார்ப்போம்” என்று அப்பூனையை அன்பாகக் கையிலெடுத்து அதன் வாயையைப் பிளந்து பார்த்தார் மன்னர்.

ஆ! என்ன பரிதாபம் அதன் நாக்கு அப்படியே வெந்து போய் கிடந்தது!

“அடப்பாவி! இப்படிச் செய்ய உன் மனம் எப்படித் துணிந்ததடா! நன்றாய்க் கொதிக்கும் பாலை பூனைக்கு வைத்து, இப்படி இதன் நாக்கையே தீய்த்து விட்டாயேடா! என்று தெனாலிராமனைக் கடிந்து கொண்டார் மன்னர்.

“அரசே முதலில் இந்நாட்டு குழந்தைகளுக்குப் பால் ஏற்பாடு செய்திருக்க வேண்டும். குழந்தைகள் எல்லாம் புஷ்டியான உணவு கிடைக்காமல் நோஞ்சான் கட்டையாகக் கிடைகின்றன! அதைக் கவனிக்காமல் பூனைக்குப் பாலா!

“முதலில் குழந்தைகளுக்குப் பால் ஏற்பாடு செய்துவிட்டு பிறகு பூனைக்குப் பால் ஏற்பாடு செய்தால் நன்றாயிருக்கும்! மக்களின் உடல் வலிமை நாட்டுக்கு நல்லதல்லவா!” என்று தாழ்மையுடன் தெரிவித்துக் கொண்டான் தெனாலிராமன்.அ

அவனுடைய வார்த்தைகள் மன்னரின் மனதை அசைத்துவிட்டது.

“ஆமாம், அதுவும் சரிதான்” என்று ஈனக் குரலில் சொன்னார் மன்னர்.

உடனே ஒரு பணப்பையைத் தூக்கி தெனாலிராமனிடம் கொடுத்துவிட்டு, “ இருந்தாலும் நீ இது மாதிரி நடந்து கொண்டது சரியாகாது.

இனிமேல் நீ அப்படி நடந்து கொள்ளாதே!” என்று சொல்லி விட்டுச் சென்றார் மன்னர்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply