அழகான குழந்தை - அக்பர் பீர்பால் கதைகள்

அக்பர், ஓர் நாள் பீர்பாலிடம் என் பேரன் தான் உலகிலேயே அழகானவன் என்றார். அதற்கு பீர்பால், இல்லை மன்னா, உங்கள் பேரனை விட அழகானவன் இருக்கிறான். அக்பர் என் பேரனை விடவுமா? சாத்தியமே இல்லை என்றார். உடனே பீர்பால், அரசே என்னோடு புறப்பட்டு வாருங்கள் அவனை நான் காட்டுகிறேன் என்றார்.

அக்பரும் பீர்பாலும் மாறு வேடத்தில் நகரின் ஒதுக்குப்புறத்தில் குடிசைகள் நிரம்பிய பகுதிக்கு சென்றனர். அங்கே ஒரு குழந்தை மண்புழுதியில் இறங்கி விளையாடி கொண்டு இருந்தது.

உடலெங்கும் மண் ஒட்டி, கிழிந்த ஆடை அணிந்து, ஒழுகும் மூக்கோடு இருந்த குழந்தையை அக்பருக்குக் காட்டி, இதுதான் உங்கள் பேரனை விட அழகான குழந்தை என்றார் பீர்பால்.

அக்பர் திகைத்துப் போய் இந்தக் குழந்தையா எனது பேரனை விடவும் அழகு? எனப் பீர்பாலிடம் கேட்டார்.

ஆம் அரசே! என்று அக்பரிடம் சொல்லிய மறுகணமே, பீர்பால் குழந்தையைக் கிள்ளிவிட்டு மறைவாக நின்று கொண்டார்.

பீர்பால் கிள்ளியதால் வலி தாளாமல் குழந்தை சத்தமாக அழத்தொடங்கியது.

குழந்தையின் அழுகைச்சத்தம் கேட்டு குடிசையிலிருந்து குழந்தையின் தாய் ஓடிவந்து, அழகான சந்திரன் போல் ஒளி வீசும் என் குழந்தை ஏன் அழுகின்றது… என் செல்லக்குட்டி ஏன் அழுகின்றது என்று கேட்டுக்கொண்டே குழந்தையைத் தூக்கி முத்தமிட்டு சமாதானம் செய்து கொண்டே தன் குடிசைக்குள் குழந்தையை எடுத்துச்செல்கிறாள்.

பீர்பால் அக்பரை நோக்கி பார்த்தீர்களா அரசே! கலைந்த தலைமுடி, ஒழுகும் மூக்கு, உடலெங்கும் மண்புழுதியுடன் தன் குழந்தை இருந்தாலும் அந்தத்தாய்க்கு அந்தக் குழந்தை பேரழகுதான் என்ன சொல்கிறீர்கள் என்றார்.

அக்பருக்கு அழகு என்பது உள்ளத்தில் அன்போடு பார்க்கும் பார்வையில் இருப்பது என்று தெளிவுபடப் புரியவைத்தார் பீர்பால்.

ஆம் என்று ஆமோதித்துப் பரிசுகள் தந்து பீர்பாலைச் சிறப்பித்தார் அக்பர்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply