காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் - ஸ்ரீரங்கம்

சுவாமி : காட்டழகிய சிங்கர்.

மூர்த்தி : கருடன்.

தலவிருட்சம் : வன்னி மரம்.

தலச்சிறப்பு : பதினைந்து நூற்றாண்டுகள் பழமையான ஆலயமாகத் திகழ்கிறது.  இருப்பினும்,  கி.பி. 1297-ல், வீரபாண்டியனான ஜடாவர்மன் சுந்தரபாண்டியன், இந்தக் கோயிலை எடுத்து  புனர்நிர்மாணம் செய்து, கோயில் அழகுறத்திகழ வழி ஏற்படுத்தினார்.  இந்த மன்னனே,  திருவரங்கம் சித்திரை வீதியை அமைத்து பொலிவுபடுத்தியவன்.  இவனுக்கு கலியுகராமன் என்றும்  பெயர் உண்டு.  இவன் பெயரிலேயே வேதியர் குடியிருப்பான, கலியுகராமன் சதுர்வேதிமங்கலம்  இங்கே அமையப் பெற்றது.

காட்டழகிய சிங்கர், ஸ்ரீரங்கம் கோயிலில் இருந்து சுமார் ஒன்றரை கி.மீ உள்ளது.  ஸ்ரீரங்கம்  கோயிலின் ஆயிரம் கால் மண்டபம் இருக்கும் கிழக்கு ராஜ கோபுரத்தின் வழியாக வெளியே வந்து,  கீழ அடையவளஞ்சான் தெரு வழியாக நேர் கிழக்கே செல்லும் சிறு சாலையில் சுமார் ஒரு கி.மீ.  தொலைவு சென்றால் இந்தக் கோயிலை அடையலாம்.  கோயில் மேற்கு நோக்கி அமைந்துள்ளது.   உள்ளே நுழையும் போது இடப்புறத்தில் அழகான பெரிய மண்டபம் உள்ளது.  திருவரங்கம்  நம்பெருமாள் விஜயதசமி அன்று பல்லக்கில் எழுந்தருளி இந்த மண்டபத்துக்கு வருகிறார்.  இங்கே  நம்பெருமாளுக்கு திருவாராதனம், அமுதுபடிகள் ஆனபிறகு தங்கக் குதிரையில் ஏறி  பார்வேட்டைக்குக் கிளம்புகிறார்.  இந்தக் கோயிலில் உள்ள வன்னி மரத்துக்கு திருவாராதனம்  ஆனப்பிறகு, வேட்டை உற்சவம் தொடங்குகிறது.  அவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த மண்டபம்  ஆகும்.

காட்டழகிய சிங்கர் கோயிலின் உள்ளே பலிபீடத்தைத் தாண்டி, கோயிலின் முன் மண்டபத்துக்குள்  மேலே பார்த்தால், அழகான திருவுருவப் படங்கள் உள்ளது.  திருச்சுற்றில் முதலில் பரிவார  தேவதைகளாக விஷ்வக்சேனரின் படைத்தலைவரான கஜானனர் தரிசனம்.  இதில் யோக அனந்தர்,  யோக நரஸிம்மர் ஆகியோருடைய தரிசனமும் கிட்டுகிறது.  காயத்ரி மண்டபத்தில் யோக  நாராயணர், யோக வராஹர் ஆகியோரின் தரிசனம் கிடைக்கிறது.  பிராகாரத்தில் வலம்  வரும்போது, சந்நிதியின் பின்புறம் வரிசையாக ஒன்பது துளசி மாடங்கள் உள்ளன.  வலப்புறத்தில்  வன்னிமரம் மற்றும் நாகப் பிரதிஷ்டையோடு கூடிய மரங்கள் உள்ளது.

உயர்ந்த விமானத்தோடு கூடிய கர்ப்பக்ருஹம்.  முகமண்டபம், மஹாமண்டபமும் உள்ளன.  எதிரே கருடனுக்கு சந்நிதி உள்ளது.  கர்ப்பக்ருஹம், அந்தராளம், முகமண்டபம், மஹாமண்டபம், கருடன்  சந்நிதி ஆகியவை ஒன்றாக சீராக அமைந்துள்ளன.  இன்னும் பல மண்டபங்கள், உத்தம நம்பி  வம்சத்தில் உதித்த சக்ரராயராலும், நாயக்க மன்னர்களாலும் அமைக்கப்பட்டுள்ளன.

மண்டபத்தின் சுவர்களில் உள்ள ஓவியங்கள் அழகுடன் காட்சியளிக்கின்றன.  பிளந்த தூணிலிருந்து நரஸிம்மர் வெளிப்படும் தோற்றம், ஹிரண்யகசிபுவுடன் போர் செய்யும் தோற்றம், உக்ர  நரஸிம்மராக, ஹிரண்யகசிபுவை தன் மடியில் கிடத்தி வதம் செய்யும் கோலம், பிரஹலாதன்  நரஸிம்மரிடம் வேண்டிக் கொண்டு சாந்தப் படுத்தும் தோற்றம், லக்ஷ்மி நரஸிம்மர், யோக  நரஸிம்மர், அனந்த நரஸிம்மர் என்று பல்வேறு வடிவங்களில் நரஸிம்மரின் தரிசனம் இங்கே  நமக்குக் கிடைக்கிறது.

குலசேகரன் திருச்சுற்றான துரை பிரதட்சிணத்தில் உள்ள தூண்களில் தசாவதார உருவங்கள் அழகுற அமைந்துள்ளன.  சந்நிதி கருவறையில், மஹாலக்ஷ்மியை மடியில் இருத்தி, ஆலிங்கனம் செய்த கோலத்தில் லக்ஷ்மி நரஸிம்மராக காட்டழகிய சிங்கப் பெருமானை தரிசிக்கிலாம்.  மிகப் பெரிய  அளவில் எட்டு அடி உயர திருமேனி.  வெள்ளியில் அமைந்த பற்கள் அமைப்பு நரஸிம்மப்  பெருமானின் தத்ரூப தரிசனத்தை மனக்கண் முன் நிறுத்துகிறது.  பொதுவாக கிழக்கு  பார்த்திருக்கும் பெருமாள் இத்தலத்தில் மேற்கு பார்த்து உள்ளார்.

இது ஒரு பிரார்த்தனை தலம்.  சுவாதி நட்சத்திரம் பெருமாளின் ஜென்ம நட்சத்திரம்.  அன்று  பெருமாளுக்கு சிறப்பாக திருமஞ்சனம் செய்யப்படுகிறது.  இந்த நாளில் வழிபடுவோர்களுக்கு  கேட்ட வரம் கிடைக்கும், தீராத நோய் தீரும் என்பது நம்பிக்கை.  இது தவிர பக்தர்களின் வேண்டு  கோளுக்கிணங்க, அவர்கள் குறிப்பிடும் நாள்களிலும் பெருமாளுக்கு திருமஞ்சனம்  செய்யப்படுகிறது.  பிரதோஷ நேரத்தில் இவரை வழிபட்டால் குழந்தையில்லாதவர்களுக்கு  குழந்தை வரம் நிச்சயம் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலில் மாதந்தோறும் ஸ்வாதி நட்சத்திரத்தன்று விசேஷத் திருமஞ்சனம் நடக்கிறது.   அதுபோல், பிரதோஷ தினங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது.  சிங்கப்பெருமானின்  வருஷத் திருநட்சத்திரம் ஆனி மாதத்திலும், ஜ்யேஷ்டாபிஷேகம் ஆடி மாதத்திலும்  நடைபெறுகிறது.

நினைத்த கோரிக்கைகளை நிறைவேற்றிவைக்கும் நரசிம்மப் பெருமாளுக்கு மிகவும் பிடித்தமான  பானக நைவேத்தியம் இங்கே சிறப்பு.  வெல்லம், சுக்கு, ஏலக்காய் முதலியவற்றை பெருமாள்  சந்நிதியில் நைவேத்தியத்துக்குக் கொடுத்தால், சந்நிதியில் அர்ச்சகர்கள் பெருமாளுக்காக எடுத்து  வைத்த தீர்த்தத்தில் பானகம் கரைத்து அதை பெருமாளுக்கு நிவேதனம் செய்து தருகிறார்கள். அந்த  பானக பிரசாதத்தை பக்தர்களுக்கு வழங்கினால், பிரார்த்தனை நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இந்தக் கோயிலுக்கு இன்னொரு சிறப்பம்சமும் உள்ளது.  மகான் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த பிள்ளைலோகாசார்யர் ஸ்வாமி, ஸ்ரீவசனபூஷணம் என்ற அற்புத கிரந்தத்தை அருளிச் செய்தார்.   அப்படி அவர் அருளிச் செய்து, அதற்கான ரகசிய அர்த்தங்களையும் தம் சீடர்களுக்கு உபதேசித்த  இடம் காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோயில் ஆகும்.  ஆகவே, வைணவர்களுக்கு மிகவும்  முக்கியமான இடமாகத் திகழ்கிறது இந்தக் கோயில்.

தல வரலாறு : நரசிம்ஹ அவதாரம் விஷ்ணுவின் நான்காம் அவதாரம் ஆகும்.  இதில் இவர்  சிங்கத்தின் தலையையும் மனித உடலையும் கொண்ட நரசிம்ம அவதாரம் எடுத்தார்.  நரசிம்மரின்  உருவம் சிங்க முகத்துடனும், கூர்மையான நகங்களோடும் மனித உடலோடும் தோற்றமளிக்கிறது.   வைஷ்ணவர் பலர் நரசிம்மரை முதன்மைக் கடவுளாக வழிபடுகின்றனர்.  தனது பக்தர்களைத்  தக்கதருணத்தில் வந்து காக்கும் கடவுளாக கருதப்படுகிறார்.  பல நூற்றாண்டுகளுக்கு முன்னர்  இப்பகுதி அடர்ந்த காட்டுப் பகுதியாக இருந்தது.  திருவானைக்காவலில் இருந்து, திருவரங்கம்  வரும் வழி எங்கும் யானைகள் கூட்டம் கூட்டமாக வந்து, விவசாயத்தைப் பாழ்படுத்தி,  மக்களுக்கும் பெரும் பயத்தைத் ஏற்படுத்தியது.

யானைகளின் தொல்லையில் இருந்து மக்களைப் பாதுகாக்க, பெரியாழ்வாரின் சீடராகத் திகழ்ந்த நெடுமாறன் என்ற சீர்ப் பெயர் பெற்ற வல்லபதேவ பாண்டியன், லக்ஷ்மி நரஸிம்மப் பெருமாளை  இங்கே எழுந்தருளச் செய்து, கோயிலும் கட்டினார்.  அப்படி உருவானதே இந்த காட்டழகிய  சிங்கப்பெருமாள் கோயில்.  இதன் பின்னர் யானைகளின் தொந்தரவு குறைந்தது.  காட்டுக்குள்  குடியிருந்ததால் பெருமாள் காட்டழகிய சிங்கரானார்.

நடைதிறப்பு : காலை 6.15 மணி முதல் 7.45 மணி வரை விஸ்வரூபம்.

பூஜைவிவரம் :

சேவாகாலம் 9.00 மணி முதல் 12.00 மணி வரை.

திருமஞ்சனம் 11.00 மணி முதல் 12.00 மணி வரை.

உச்சிகாலம் மற்றும் ஓய்வு : பகல் 12.00 மணி முதல் 5.00 மணி வரை.

சேவை நேரம் : 5.00 மணி முதல் – 6.00 மணி வரை.

சீரான்னம் 6.00 மணி முதல் 6.45 மணி வரை(சேவைஉண்டு).

சோவா காலம் 6.45 மணி முதல் இரவு 8.00 மணி வரை.

திருவிழாக்கள் :

அருள்மிகு அரங்கநாதர் இங்கு எழுந்தருளி விஜயதசமியன்று காலை 9.00 மணி முதல் மாலை 5.00  மணி வரை பக்தர்களுக்கு அருள்பாலித்து பின்னர் குதிரைவாகனத்தில் புறப்பட்டு வீதியில் உள்ள வன்னியமரத்திற்கு அம்பு எய்தபின் தெற்கு வாசல் வழியாக மூலஸ்தானம் செல்கிறார்.

அருகிலுள்ளநகரம் : திருச்சி.

கோயில்முகவரி : அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சார்ந்த காட்டழகிய சிங்கப்பெருமாள் திருக்கோவில்,

நெல்சன்ரோடு, ஸ்ரீரங்கம், திருச்சி – 620 006.

தொலைப்பேசிஎண் : +91- 431- 243 2246.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply