ஆத்மநாத சுவாமி திருக்கோயில் ஆவுடையார் கோயில்

சுவாமி : ஆத்மநாதர்.

அம்பாள் : யோகாம்பாள்.

மூர்த்தி : மாணிக்கவாசகர், சொக்கவிநாயகர், முருகன், வீரபத்திரர்.

தீர்த்தம் : சிவதீர்த்தம், அக்கினி தீர்த்தம், தேவதீர்த்தம், முனிவர் தீர்த்தம், அசுர தீர்த்தம், வாயு தீர்த்தம், சிவகங்கை தீர்த்தம், நாராயண தீர்த்தம், பிரம தீர்த்தம், அறுபத்து நான்கு கோடித் தீர்த்தம், வெள்ளாறு, திருத்தொட்டித் தீர்த்தம்.

தலவிருட்சம் : மகிழ மரம் (காமதேனுப் பசு வழிபட்டது).

தலச்சிறப்பு : சிவபெருமான் திருக்கோவில்களில் இராஜகோபுரத்தை அடுத்து முதலில் பலிபீடம், நந்தி, கொடிமரம் காணப்படும்.   ஆனால் இந்த திருக்கோவிலில் இல்லை.  கோவில்களில் நடைபெறும் நால்பூசை, விழாக்களில் நாதசுரம், மேளம், பேரிகை,  சுத்தமத்தளம் முதலிய வாத்தியங்கள் முழங்கப்படும். இத்தகைய வாத்திய ஒலிகளை இக்கோவிலில் கேட்க முடியாது. திருச்சின்னம், சங்கு, மணி முதலியவற்றின் ஒலிகளே கேட்கப்படும்.  

சிவன் இத்தலத்தில் கருவறையில் அரூபமாகவும், அருவுருவமாக குருந்தமர (தல விருட்சம்) வடிவிலும், உருவமாக மாணிக்கவாசகராகவும் அருளுகிறார். இங்கு  குருந்தமரத்தையும் சிவனாகக் கருதுவதால், கார்த்திகை சோமவாரத்தில் இந்த மரத்தின் முன்பாகவே, 108 சங்காபிஷேகம்  நடக்கிறது.  மூலஸ்தானத்தில் சதுர வடிவ ஆவுடையார் மட்டுமே இருக்கிறது.

அதன்மீது ஒரு குவளை சாத்தப்பட்டுள்ளது.   குவளை உடலாகவும், அதனுள் இருப்பது ஆத்மாவாகவும் கருதப்படுகிறது.  இதன் காரணமாகவும், ஆத்மாக்களை காத்தருள்பவர்  என்பதாலும் சுவாமிக்கு “ஆத்மநாதர்” என்று பெயர் ஏற்பட்டது.  ஆறு கால பூஜையின்போதும், இவருக்கு 108 மூலிகைகள் கலந்த  தைல முழுக்கு நடப்பது சிறப்பு.

தட்சனின் யாகத்திற்கு சிவனை மீறிச் சென்றதற்கு மன்னிப்பு பெறுவதற்காக, அம்பாள் இத்தலத்தில் அரூப வடிவில் தவம் செய்தாள்.  எனவே, இங்கு அம்பாளுக்கும் விக்ரகம் இல்லை.  அவள் தவம் செய்த போது, பதிந்த பாதத்திற்கு மட்டுமே பூஜை நடக்கிறது.  

இந்த பாதத்தைப் பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக, கண்ணாடியில் பாதம் பிரதிபலிக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவளது சன்னதி எப்போதும் அடைத்தே இருக்கும் என்பதால், சன்னதி முன்புள்ள ஜன்னல் துவாரம் வழியாகத்தான் பாதத்தை தரிசிக்க முடியும்.  ஆவுடையார் கோயிலில் நவக்கிரக சன்னதி இல்லை.  ஆனால், நவக்கிரகத் தூண்கள் வைக்கப் பட்டுள்ளன.

சூரிய, சந்திர கிரகணங்களின்போது கோயில்களின் பூஜை செய்யமாட்டர். ஆனால், ஆவுடையார்கோயிலில் கிரகணநாளிலும் ஆறு கால பூஜை நடக்கிறது.  ஆவுடையார் கோவிலில் மாணிக்கவாசகர் திருவாசகம் எழுதினார்.  இங்குள்ள தேர் தமிழகத்திலுள்ள  பெரிய தேர்ககளுள் ஒன்றாகும்.  

திருவில்லிப்புத்தூர் திருநெல்வேலி திருவாரூர் ஆவுடையார்கோயில் ஆகிய ஊர்களில் உள்ள  தேர்கள்தான் தமிழகத்தில் உள்ள கோயில்களின் தேர்களில் மிகவும் பெரிய தேராகும்.  இந்த தேர்ச் சக்கரத்தின் குறுக்களவு மட்டும்  90 அங்குலம் மற்றும் சக்கரத்தின் அகலம் 36 அங்குலமாகும்.  50 முதல் 500 பேர் வரை கூடினால் எந்தத் தேரையும் இழுத்து  விடலாம்.  ஆனால் இந்த ஆவுடையார்கோயில் தேரை இழுக்க சுமார் 5000 பேர் கூடினால்தான் இழுக்க முடியுமாம்.  

இதிலும்  அதன் அடங்காத் தன்மை வெளிப்படுகிறது.  கோவிலின் மேற்கூரை, கிரானைட் கற்களால் வேயப்பட்டது.  ஆளுயர சிலைகள்  காண்பவர் மனதில் பக்தியைக் கூட்டும்.  கி.பி. 10-வது நூற்றாண்டின்போது இக்கோவில் கட்டப்பட்டது.

இத்தலத்தில் காணவேண்டிய அபூர்வ சிற்பங்கள் :
1. டுண்டி விநாயகர் சிற்ப உருவம்,

2. உடும்பும் குரங்கும்,

3. கற்சங்கிலிகள் – சங்கிலியின் நுனியில் பாம்பு ஒன்று பின்னிக்கொண்டு தலையினைக் காட்டுவது,

4. இரண்டே தூண்களில் ஓராயிரம் கால்கள்.

5. 1008 சிவாலயங்களில் உள்ள இறைவன் இறைவியர் திருவுருவங்கள்,

6. பலநாட்டுக் குதிரைச் சிற்பங்கள்,

7. 27 நட்சத்திர உருவச் சிற்பங்கள்,

8. நடனக்கலை முத்திரை பேதங்கள்,

9. சப்தஸ்வரக் கற்தூண்கள்,

10. கூடல்வாய் நிழல் விழும் பகுதி பசுமாட்டின் கழுத்து போன்று காணப்படுதல்.

தல வரலாறு : மாணிக்க வாசகர் மதுரை பாண்டிய மன்னனின் சபையில் அமைச்சராக இருந்தவர்.  அரசன் உத்தரவுப்படி குதிரை  வாங்க திருப்பெருந்துறைக்கு வந்தார்.  அப்போது சிவாகமங்கள் ஒலிக்கும் ஒலி கேட்கும் திசையில் சென்று பார்த்தால் ஞானகுருநாதர் ஒருவர் வீற்றிருப்பதைக் கண்டார்.  

மாணிக்கவாசகர் தன்னை ஏற்றுக்கொண்டு உபதேசம் அளிக்கும்படி  வேண்டினார்.  குருவும் ஒப்புக்கொண்டார்.  உபதேசம் கேட்டு சிவநிட்டையிலிருந்து கலைந்த மாணிக்கவாசகர் குரு இல்லாதது  கண்டு சிவபெருமான்தான் குருவாக வந்தது என்று தெரிந்து கொண்டார்.  உள்ளம் உருகிப் பாடினார்.  குதிரை வாங்கக் கொண்டு  வந்த பணத்தில் கோயில் ஒன்றை கட்டி சிவதொண்டில் ஈடுபடலானார்.

பின்பு மன்னன் குதிரை வராத செய்தி கேட்டு மாணிக்கவாசகரைப் சிறையில் அடைத்தார்.  சிவபெருமான் நரிகளை பரிகளாக்கி(குதிரை) சிவபெருமானே ஓட்டிக் கொண்டு மதுரை வந்து மன்னனிடம் ஒப்படைத்தார். ஆனால் இரவிலேயே  குதிரைகள் எல்லாம் நரிகளாகிப் மாறியது.  

இதை கண்டு கோபம் கொண்டு மன்னன் மாணிக்கவாசகரை வைகை ஆற்றில் சுடு  மணலில் நிறுத்தித் தண்டிக்க, வைகையில் வெள்ளம் வந்தது. கரையை அடைக்க சிவபெருமான் கூலியாளாக வந்து பிட்டு  வாங்கி தின்று விட்டு வேலை செய்யாததால் பிரம்படி வாங்கினார்.  அந்த பிரம்படி அனைவரின் முதுகிலும் விழுந்தது, எனவே  வந்தது இறைவன் என்று தெரிந்து கொண்ட பாண்டிய மன்னன் மாணிக்கவாசகரின் காலில் விழுந்து வணங்கி மன்னிப்பு  கேட்டான்.

இந்த சிறப்பு மிக்க திருவிளையாடற்புராண கதை நிகழக் காரணமான தலம் ஆவுடையார் கோவில் ஆகும்.

வழிபட்டோர் : மாணிக்க வாசகர், பாண்டிய மன்னன்.

நடைதிறப்பு : காலை 06.00 மணி முதல் 12.00 வரை, மாலை 04.00 மணி முதல் 09.00 வரை.

அருகிலுள்ள நகரம் : ஆவுடையார்கோயில், புதுக்கோட்டை.

கோவில் முகவரி : அருள்மிகு ஆத்மநாத சுவாமி திருக்கோவில்,

ஆவுடையார் கோயில் – 614 618, புதுக்கோட்டை மாவட்டம்.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply