அரண்மனையில் விகடகவி

விஜயநகரத்துக்குப் புறப்பட்டுத் தீர்மானித்து விட்டானேயொழிய, அச்சமயம் தெனாலிராமனிடத்தில் வழிச் செலவுக்குப் பணமே இல்லை!

யாராரிடமோ கேட்டுப் பார்த்தான். ஏதோ நெல்லும் சோளமுமாகக் கொடுத்தார்களேயொழிய பணம் கிடைக்கவில்லை!

பிறகு, வீட்டிலிருந்த வேண்டாத தட்டு முட்டுச் சாமான்களையெல்லாம் வந்த விலைக்கு விற்று சிறிது பணம் சேகரித்தான். அவனது வறிய நிலைகண்ட செல்வந்தர் ஒருவர் அவன் வீடு தேடிவந்து சிறிது பணம் கொடுத்து உதவினார்.

இப்படியாகக் கொஞ்ச பணம் சேகரித்துக் கொண்டு ஒரு நல்ல நாளில் ராஜகுருவிடமிருந்து ஓலை வந்ததாகவேச் சொல்லிக் கொண்டு குடும்பத்துடன் புறப்பட்டு சென்றான்.

செய்தியறிந்த ஊர் மக்கள் எல்லை வரை சென்று வழியனுப்பி வைத்தார்கள். ஏதோ அவர்களாலான பழம், பால், காய், கனிகள் என்று கொடுத்தனுப்பினார்கள். தெனாலிராமன் சந்தோஷமாகவே புறப்பட்டான்.

ஆனால் விஜயநகரம் அருகிலா இருக்கிறது! அது வெகு தூரத்திலல்லவா இருக்கிறது! குதிரை மீது சென்றாலே போய் சேர ஒரு மாததிறகு மேல் ஆகும். இவன் குடும்பத்துடன் நடந்து அல்லவா சென்றான்.

அது கோடை காலம், வழியெல்லாம் வறட்சி, குடிக்கத் தண்ணீர்கூட சில இடங்களில் வசதியாகக் கிடைக்கவில்லை. ஆரம்பத்திலிருந்த சந்தோஷம் அடியோடு மறைந்துவிட்டது. நாம் இப்படி அசட்டுத் தைரியத்துடன் புறப்பட்டு இருக்கக் கூடாது என்றே எண்ணத் தோன்றியது அவனுக்கு!

பாதி தூரத்திற்கு மேல் நடந்தாகி விட்டது. இனிமேல் ஊர் திரும்புவதும் சரியில்லை.மிக வருத்தத்துடன் அந்தக் காட்டுப் பாதையில் குடும்பத்துடன் தங்கியிருந்தான்.

அந்த பக்கமாக நிறைய சுமையை ஏற்றி கொண்டு ஒரு வண்டி வந்தது அவன் அவ்வண்டியை அவிழ்த்துவிட்டு அங்கு சற்று இளைப்பாறினான். அவன் அங்கிருந்த தெனாலிராமனோடு சற்று அளவளாவிய பொழுது அவனை மிகவும் பிடித்து விட்டது அவ்வண்டிக்காரனுக்கு.

தெனாலிராமன், அவ்வப்பொழுது சிரிப்புச் சிரிப்பாக பேசவே, அவன் களைபெல்லாம் வெகு சீக்கிரத்தில் சரியாகிவிட்டது. அதனால் அவன் மீண்டும் வண்டியைப் பூட்டிக் கொண்டு புறப்பட்ட பொழுது “இந்த வண்டி நேரே விஜயநகரத்துக்குச் செல்லவில்லை. ஆனால் பாதி தூரத்திற்கு மேல் சென்று, பிறகு வேறு வழியாகத் திரும்பி விடும். வேண்டுமென்றால், இச்சுமையின் மீது ஏறிக் கொள்ளுங்கள், உங்களை பாதி தூரத்திற்கு மேல் அழைத்துச் சென்று விடுகிறேன்” என்றான் அவ்வண்டிக்காரன்.

“ஆனால், வழிநெடுக எனக்குச் சிரிப்பு கதைகளாகச் சொல்லிக் கொண்டு வரவேண்டும்” என்று நிபந்தனை போட்டான்.

“ஆகா! அப்படியே செய்கிறேன்!’ என்று சம்மதித்து தெனாலிராமன் குடும்பத்துடன் அவ்வண்டியில் ஏறிக் கொண்டான்.

வண்டி மெதுவாகப் புறப்பட்டது. தெனாலிராமனும் தன் விகடக் கதையெல்லாம் அவிழ்த்து கொண்டிருந்தான்.வண்டிக்காரன் களைப்புத் தெரியாமல் சிரித்துக் கொண்டே வண்டியை ஓட்டச் சென்றான்.

மெது மெதுவாகப் பாதிவழி செல்வதற்கே பத்து நாட்களுக்கு மேலாகி விட்டது. வண்டி வேறு வழியாகத் திரும்ப வேண்டியதாயிற்று. வண்டிக்காரன் அவர்களை வண்டியிலிருந்து கீழே இறக்கி பிரியாவிடை கொடுத்தனுப்பினான்.

அப்பொழுது அவ்வண்டிக்காரன், தெனாலிராமனுக்கு  தன் கையிலிருந்த கொஞ்சம் பணத்தையும் கொடுத்தனுப்பினான். ‘ஆகா! இது நம் மகா காளியின் ஏற்பாடுதான்’ என்று அதைப் பெற்றுக் கொண்டு விஜயநகரம் நோக்கி நடக்கத் தொடங்கினான்.

சிரமப்பட்டு அநேக நாட்கள் நடந்து, விஜயநகரம் போய் சேர்ந்தான். அப்பொழுது அங்கு தசரா கொண்டாட்டம். நகரம் முழுவதும் ஒரே கோலாகலம்.

ஆங்காங்கு மாட மாளிகைகளும் கூட  கோபுரங்களும் உயர்ந்து நின்றன. தெனாலிராமன் அந்நகரத்தின் செல்வச் செழிப்பைக் கண்டு பிரமித்தே போனான். அங்கிருந்த அரண்மனையோ ஒளி மயமாகவே காட்சியளித்தது!

“ஆகா! இப்பேர்ப்பட்ட அரண்மனையில் நமக்கு அவசியம் இடம் கிடைக்க வேண்டும்!” எண்று பெருமூச்சுவிட்டான் தெனாலிராமன்.

உடனே அங்கிருந்த ஒருவர் வீட்டில் தன் மனைவியையும் மகனையும் இருக்கச் சொல்லிவிட்டு, அந்த ராஜ குருவின் இல்லத்தைக் தேடத் தொடங்கினான்.

“நீ என்ன சாதாரண ஆளாயிருக்கிறாயே! அவரைப் போய் தேடுகிறாயே! அவர் பெரிய ஆளாயிற்றே!” என்றார்கள்.

“இல்லை! அவர் மங்களபுரிக்கு வந்திருந்த பொழுது எனக்குப் பழக்கம். விஜயநகரத்துக்கு வந்தால் என்னை வந்து பார் என்றார்” என்றான் தெனாலிராமன்.

“அப்படியென்றால் சரி! அதோ தெரிகிறதே அந்த மாளிகைதான்!” என்று அடையாளம் காட்டினார்கள்.

உடனே ஓடோடியும் சென்றான் அங்கே. ராஜகுருவின் பேட்டிக்காக அங்கு அநேகம் பேர் வாசலில் காத்துக் கொண்டிருந்தார்கள். இருந்தும் வாயில் காப்போனிடம் தன்னப் பற்றிச் சொல்லி, உடனே பார்க்க விரும்புவதாகச் செய்தியனுப்பினான் தெனாலிராமன்.

அந்தச் சேவகனும் உடனே உள்ளே ஒடிச்சென்று, ராஜ குருவிடம் தெனாலிராமனைப் பற்றிச் சொன்னான். அந்தப் பெயரைக் கேட்டதுதான் தாமதம், ராஜகுரு திடுக்கிட்டுப் போய் விட்டான்; ‘இங்கு நேரிலேயே வந்து தொலைத்துவிட்டானே!” என்று முணுமுணுத்துக் கொண்டான்.

இருந்தும் “யார் அது? தெனாலிராமனா? அது மாதிரி எனக்கு இருவரும் தெரியாதே! அந்த ஆளை வெளியே அனுப்பி விடு” என்று சொல்லியனுப்பினான் ராஜகுரு.

உள்ளே சென்ற ஆள் திரும்பி வந்து, “உங்களைத் தெரியாதாம் ராஜகுருவுக்கு. அதனால் நீங்கள் காத்திருக்க வேண்டாம். வெளியே செல்லலாம்” என்று சொன்னான் தெனாலிராமனிடம்.

அதைக் கேட்டு மிகவும் ஆச்சரியத்துடன் கோபமும் அடைந்தான் அவன், “என்ன இப்படி நடந்து கொண்டாரே இவர்! அரண்மனையில் ராஜகுருவாக இருப்பவர்! மங்களகிரிக்கு வந்து நம்மிடம் நேரில் உரையாடியவர்! நம்மை அழைத்துவர ஆள் அனுப்புகிறேன் என்ரு சொல்லி வந்தவர்! இப்பொழுது “தெரியாது” என்று சொல்லியனுப்புகிறார் என்றால், அவர் மனதில் ஏதோ வஞ்சக குணம் இருக்க வேண்டும்!” என்று எண்ணி மனம் பொருமினான் தெனாலிராமன்.

அதற்குள் அங்கு  காத்துக் கொண்டிருந்தவர்களுள் யார் யாரோ உள்ளே சென்று வந்தவர்கள். தெனாலிராமனுக்கு அவரைச் சந்திக்காமல் வெளியேற மனமில்லை.

அதனால் ‘வெடுக்’ கென உள்ளே நுழைந்து விட்டான். சேவகன் அவனைப் பின் தொடர்ந்து செல்வதற்குள், தெனாலிராமன் உள்ளேயிருந்த ராஜகுருவிடம் சென்றுவிட்டான்.

“ஓ ராஜகுருவே! என்னையா உங்களுக்குத் தெரியாது?” என்று சற்று சீற்றமாகவே கேட்டான்.

“யார் அது? எனக்குத் தெரியவில்லையே!” என்று மனம் கூசாமல் பொய் சொன்னான் ராஜகுரு.

“தாங்கள் மங்களகிரிக்கு வந்து தங்கியிருந்த பொழுது, நான் தங்களுக்கு பணிவிடை செய்யவில்லையா? ஏவல் புரியவில்லையா? என்னை இங்கு அழைத்துவர ஆள் அனுப்பி வைப்பதாக கூட சொல்லிவிட்டு வந்தீர்களே! மறந்துவிட்டீர்களா! என்றான்.

“அப்படிச் சொல்லிவிட்டு வந்ததாக எனக்கு நினைவு இல்லை. ஆளே தெரியவில்லையென்றால் நான் எப்படிச் சொல்லியிருக்க முடியும்?” என்று எங்கேயோ பார்த்துக் கொண்டு பேசினான் ராஜகுரு.

அதுகேட்ட தெனாலிராமன் மனம் துடியாய்த் துடித்து. அங்கிருந்தவர்களோ அது கண்டு கேலிச் சிரிப்பு சிரித்தார்கள். அவனுக்குமிகவும் வெட்கமாகப் போய்விட்டது. “மகா காளியே! இது என்ன சோதனை!’ என்று எண்ணினான்.

அதற்குள் ஒரு சேவகன் அவன் கழுத்தில் கையைப் போட்டுக் வெளியே தள்ளிக் கொண்டு வந்தான். மகா காளியே நினைத்து மனம் வெதும்பினான் தெனாலிராமன்.அப்பொழுதே, இனியும் இங்கு இருப்பது தகாது. தன் கையே தனக்கு உதவி என்றுதான் பார்க்க வேண்டும் என்று தீர்மானித்துக் கொண்டு புறப்பட்டான்.

மறுநாளே மனதைக் திடப்படுத்திக் கொண்டு, அரண்மனைப் பக்கம் சென்றான். உள்ளே கும்பல் கும்பலாகக் கவிஞர்களும் கலைஞர்களும் சென்று கொண்டிருந்தார்கள் அவர்களுடன் தானும் சேர்த்து உள்ளே சென்றுவிட்டான் தெனாலிராமன்.

அங்கே அரசர் கிருஷ்ணதேவராயர் சபா மண்டபத்தில் சிம்மாசனத்தில் கம்பீரமாய் உட்கார்ந்திருந்தார். அவருடைய முகப் பொலிவிலேயே அவரது பெருமையை அளந்து கொண்டான் தெனாலிராமன்.

உள்ளே சென்றவர்கள் எல்லாம் அங்கிருந்த அவரவர் இருக்கையில் அமர்ந்து கொண்டார்கள். தெனாலிராமனும் ஒரு நல்ல இருக்கையாகத் தேர்ந்தெடுத்து அமர்ந்து கொண்டான்.

உடனே அரசர் ஆணைப்படி தர்க்கம் தொடங்கியது. உலக வியபாரத்தைப் பற்றி ஒருவர் பேசத் தொடங்கினார்.

“இவ்வுலகமே மாயை. இதில் நாம் பார்ப்பதும் கேட்பதும், சுவைப்பதும் கூடப் பொய். நாம் அப்படி நடப்பதாக எண்ணுகிறோமேயொழிய உண்மையில் நடப்பதெல்லாம் பொய். ஒரு வித மாயை” என்று வலியுறுத்தினார் அவர்.

அங்கிருந்த யாவரும் அது கேட்டு வியப்புற்றனர். மன்னனுடைய முகச்சாயல் கூட மாறுபட்டது! ‘உலகம் மாயையாக இருக்கலாம். ஆனால் மற்றவையெல்லாம் பொய்யாவது எப்படி?’ என்றே எண்ணினார்கள் அங்கிருந்த அனைவரும்.

ஆனால் அதை மறுக்க சொல்ல ஒருவரும் எழுந்திருக்க வில்லையே!

சுற்றும் முற்றும் பார்வையை ஓட்டினான் மன்னன். கம்பீரமாய் வீற்றிருந்த ராஜகுருவையும் திரும்பிப் பார்த்தான். அங்கே இலேசாக தலைகுனிந்தவாறு அமர்ந்திருந்தார்.

ஆனால் அங்கிருந்த தெனாலிராமன் ‘வெடுக்கென’ எழுந்து நின்றான். அப்படிச் சொன்னவர் வாயை மூடவேண்டுமென்று அவன் துடியாய்த் துடித்து நின்றான்.

அங்கு வீற்றிருந்தோர் அனைவரது பார்வையும் அவன் மேல் விழுந்தது யார் இது! புதியவராக உள்ளாரே! வெளியூராக இருப்பார் போலிருக்கிறதே என்று எண்ணினார்கள். ராஜகுருவும் தெனாலிராமன் எழுந்து நின்றதைப் பார்க்காமலில்லை. ‘இவன் எப்படி இங்கு வந்தான்’ என்று உள்ளுக்குள் ஆச்சரியமும் சற்று பீதியும் அடைந்தான்.

எழுந்து நின்று தெனாலிராமன் முதலில் பேசியவரைப் பார்த்து கம்பீரமாகப் பேசத் தொடங்கினான்.

“நாம் சாப்பிடுவதற்கும், சாப்பிடுவதாக நினைப்பதற்கும் வித்தியாசம் கிடையாதா?” என்று கேட்டான் அவன்.

“ஊம்கூம். கிடையாது!” என்றார் அவர்.

“அப்ப்டியென்றால் இப்பொழுதே பரீட்சித்துப் பார்த்து விடுவோமே!” என்று சொல்லிவிட்டு, மன்னரை நோக்கி, “அரசே! இங்குள்ள எங்கள் அனைவருக்கும் இப்பொழுதே ஓர் அறுசுவை விருந்து ஏற்பாடு செய்யுங்கள். நாங்கள் அனைவரும் அதை நன்றாகச் சுவைத்துச் சாப்பிடும்பொழுது, அவர் மாத்திரம் அப்படி உண்பதாக எண்ணி, அவர் வயிற்றை நிரப்பிக் கொள்ளட்டும்” என்றான்.

அதைக் கேட்ட அனைவரும் கொல்லென்ரு சிரித்தனர். மன்னனும் நகைத்தான்.

அப்படித் தர்க்கித்தவர் முகமோ தானே கவிழ்ந்து கொண்டது.

உடனே தெனாலிராமனை அருகில் அழைத்து வரச் சொல்லி விசாரித்தார் மன்னர். அவனும் தன் நிலையை விள்க்கினான்.

அப்பொழுதே அவனுக்கு ஒரு பை தங்க நாணயங்களைப் பரிசாகக் கொடுத்து, ‘இனிமேல் நீ தான் இந்த அரண்மனையின் விகடகவி’ என்றார்.

அனைவரும் கைதட்டித் தங்கள் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர்.அப்பொழுது

தெனாலிராமனுடைய மனம் மகாகாளியின் திருப்பாதங்களை எண்ணியது. மானசீகமாக நமஸ்கரித்து எழுந்தான்.

இதையெல்லாம் பார்த்துக் கொண்டு அங்கு அமர்ந்திருந்த ராஜகுரு மாத்திரம் ‘உம்’ என்று வாளாவிருந்தார். தெனாலிராமனுடைய நியமனத்தை தடுத்து நிறுத்தப் போதுமான தைரியமில்லை அந்த ராஜகுருவுக்கு.

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply