அகத்தின் அழகு முகத்தில் தெரியும் - அக்பர் பீர்பால் கதைகள்

பாரசீக மன்னர், பீர்பாலை தனது நாட்டிற்கு சிறப்பு விருந்தினராக அனுப்பி வைக்கும்படி அக்பருக்கு ஒரு ஓலை அனுப்பினார்.

அக்பரும், பீர்பாலை பாரசீக மன்னரின் வேண்டுகோளுக்கிணங்க, பாரசீக நாட்டிற்கு பரிசு பொருட்களுடன் அனுப்பி வைத்தார். பீர்பாலும், பாரசீக நாட்டிற்கு பரிசுப்பொருள்களுடன் சென்றார்.

பீர்பாலின் அறிவாற்றலை சோதித்துப்பார்க்க விரும்பிய பாரசீக மன்னர், ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐந்து நபர்களை அரசர் அமரக்கூடிய ஆசனம் ஐந்திலும், அரசர்கள் போன்று அமர வைத்தார்.

பீர்பால், பாரசீக மன்னரைச் சந்திக்கப்போவது இது தான் முதல் முறை. அதனால் பீர்பால் மன்னரை சந்திக்க ஆவலுடன் அரசவைக்குச் சென்றார்.

பீர்பால், ஒரே மாதிரியான தோற்றமுடைய ஐந்து பேர்களை, அரசர் அமரும் ஆசனங்கள் ஐந்தில், அரசர்கள் போன்று அமர்ந்திருப்பதைப் பார்த்து பீர்பாலுக்கு மிகவும் ஆச்சர்யமாகி விட்டது. இந்த ஐவர்களில் யார் அரசராக இருக்க முடியும் என்று யோசனை செய்தபடி நின்றிருந்தார்.

பின்னர் ஐந்து பேர்களையும் நன்றாக உற்றுப்பார்த்துவிட்டு மிகப் பணிவுடன் அரசர் அமர்ந்திருந்த ஆனசத்தின் அருகே சென்று, மேன்மை மிகு பேரரசே! தங்களைப் பார்ப்பதில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன் என்று கூறி மன்னர் கொடுத்தனுப்பிய பரிசுப் பொருட்களை பாரசீக மன்னரிடம் அளித்தார் மாமேதை பீர்பால் அவர்கள்.

பீர்பாலைப் பார்த்து, எப்படி நான்தான் மன்னர் என்பதை அறிந்து கொண்டீர்கள்?என வினவினார். மேன்மைமிகு மன்னர் பெருமானே! இது ஒன்றும் சிரமமான காரியம் அல்ல. சிம்மாசனத்தில் அமர்ந்திருந்த நான்கு பேர்களின் கண்களும் தங்களின் மீதே பதிந்திருந்தது. தாங்கள் மட்டுமே அரசர்களுக்கான கம்பீரமான பார்வையுடன் அமர்ந்து என்னை நேருக்கு நேராகப் பார்த்தீர்கள். அதனைக் கொண்டுதான் அமர்ந்திருந்த ஐவரில் தாங்கள் தான் அரசர் என்பதை அறிந்து கொண்டேன் என்றார்.

என்னதான் நாம் போலியாக நடித்தாலும் நம்முடைய செயல்கள் முகத்தின் மூலம் அறிந்து கொள்ள முடியும். இதைத்தான் அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்று நமது முன்னோர்கள் கூறியுள்ளனர் என்றார் பீர்பால்.

பீர்பாலின் பேராற்றலைப் பாராட்டி பாரசீக மன்னர் பரிசுகள் வழங்கி, சில நாட்கள் அரச விருந்தினராக இருக்கச் செய்து, டில்லிக்கு அனுப்பி வைத்தார் .

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் இணையத்தில் உள்ள மக்களின் நம்பிக்கைகள் மற்றும் சமூகத் தகவல்கள் மட்டுமே. தேவி மீடியா இதை உறுதிப்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply